Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM
மொழி கடந்த இசைக்கலைஞரான இளையராஜாவின் பாடல்களை, உலக ரசிகர்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் இணையம் வழியாகப் பரிமாறியது ‘யாத்கார் தரணி’ (Yaadgaar Taraane Band). இது, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தொழில்முறை இசைக்குழு. இளையராஜா இந்தியில் இசையமைத்த பாடல்களோடு, கல்யாண்ஜி - ஆனந்த்ஜி, ஆனந்த் மிலிந்த் போன்ற பாலிவுட் இசையமைப்பாளர்கள், ராஜாவின் இசையில் தமிழ், தெலுங்குப் படங்களில் இடம்பெற்ற மெட்டுக்களைப் பெற்று இசையமைத்து வெற்றி பெற்ற பாடல்களும் பாடப்பட்டன.
தொழில்முறை பாடகர்கள் சிலருடன், மருத்துவர், கணிப்பொறி வல்லுநர் உள்பட பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவின் இசையில் அமைந்த இந்திப் பாடல்களையும் புகழ்பெற்ற தமிழ்ப் பாடல்களையும் (சிலரின் உச்சரிப்பில் பிழைகள் இருந்தாலும்) அனுபவித்துப் பாடினார்கள்.
பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர், வெளியான ஆண்டு, பாடல் அமைந்த ராகம், பாடலின் உருவாக்கத்தில் வெளிப்படும் இசை நுணுக்கம் ஆகியவற்றை ஒரு சிறிய அறிமுகத்தோடு பத்திரிகையாளர் ரங்கராஜ் தொகுத்தளித்த விதம், பாடலைக் கேட்பதற்கான ஆர்வத்தை அதிகரித்தது.
கே.ஆர். ரவி ‘கண்ணே கலைமானே’ பாடலைத் தமிழிலும் இந்தியிலும் பாடி அசத்தினார். வி.பாலா, அனுஷா, குர்தீப் சிங், மணிஷா, கவிதா, குமார் சுப்ரமணியம், ஹேமல், டாக்டர் மாதங்கி ஆகியோர் மிகவும் நேர்த்தியாகப் பாடினர். நிகழ்ச்சியின் இறுதியில், இளையராஜா இசையமைப்புடன் உருவான `லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்கிற ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றை சங்கீதா பாடியது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது!
“லைவ் ஆர்கெஸ்ட்ராவை கரோகியால் ஈடுசெய்ய முடியாது. அதேபோல், பயிற்சி இல்லாமல் கரோகியில் பாடலை பாடிவிட முடியாது. கரோகி டிராக் இசையில் பாடும்போது பாடகர்களுக்கு உள்ள சவால்கள் தனித்துவமானவை. அதற்குப் போதிய பயிற்சி தேவை” என்பதைச் சுட்டிக்காட்டினார் வி.பாலா. இந்த நிகழ்ச்சியை அற்புதமாக வடிவமைத்திருந்தார் கே.ஆர்.ரவி. மும்பையில் வசித்துவரும் இளையராஜாவின் தீவிர ரசிகரான ரவி பேசும்போது:
“நானும் மணிஷா ஜத்வானியும் இணைந்து யாத்கார் இசைக் குழுவை ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். மெல்லிசையில் அமைந்த திரையிசைப் பாடல்களை மொழி வேறுபாடு பார்க்காமல் ரசிகர்களுக்கு இசை விருந்து வைப்பதுதான் எங்களின் நோக்கம். மும்பை, பெங்களூரு, லண்டன் ஆகிய நகரங்களில் பல ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். உலகின் தலைசிறந்த கம்போஸர்களில் ஒருவரான இளையராஜாவின் இசை மேதைமை மும்பையில் இருப்பவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. காரணம், இந்தியில் இளையராஜாவின் இசை பங்களிப்பு அந்தளவுக்கு இல்லை. இளையராஜாவின் அபாரமான இசை நுட்பங்களை மும்பை ரசிகர்களுக்கு அளிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டோம்.
ஆனால் கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் மேடையில் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அதனால் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு முகநூல், யூடியூப் தளங்களின் வழியாக இரண்டரை மணிநேர நிகழ்ச்சியை நடத்தினோம். இளையராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களிலிருந்து 22 பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினோம். இதற்குமுன் `ஒன் இந்தியா ஒன் மியூசிக்’ என்கிற தலைப்பின்கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சியை வழங்கினோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனியும் தொடரும்” என்றார். மொழி கடந்து ராஜாவின் இசையை கவுரவம் செய்த இந்த அரிய நிகழ்ச்சியைக் காண: https://bit.ly/3eauImW
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT