Published : 21 Feb 2016 09:07 AM
Last Updated : 21 Feb 2016 09:07 AM
சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்), அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப்-இன்ஸ் பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கை துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் (வேல ராமமூர்த்தி) என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியார் ஏன் இதைச் செய்தார் என்பதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. வாத்தியாரின் சக்தி, சேதுபதிக்கு எல்லா விதங்களிலும் சவால் விடுகிறது. இந்த மோதலில் யார் வென்றார் என்பதை விவரித்துச் செல்கிறது இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரின் ‘சேதுபதி’.
விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற மென்மையான படத்தை எடுத்த அருண் குமார், அதிரடி ஆக்ஷனில் இறங்கி அடித்திருக்கிறார். வலிமை வாய்ந்த வில்லனையும் ஊழல்மயமான அமைப்பையும் வீரத்துடன் எதிர்த்துப் போராடும் நேர்மையான காவல் துறை அதிகாரி என்ற பழைய மாவை வைத்தே இவரும் மசாலா தோசை சுடுகிறார். இந்தப் பழைய கதையை வித்தியாசமான சில திருப்பங்களுடன் சொல்கிறார். வீரத்துக்கு மட்டு மில்லாமல் புலனாய்வுக்கும் முக் கியத்துவம் கொடுக்கிறார். பாசத் தையும் காதலையும் ரசனையோடு சித்தரித்திருக்கிறார்.
சேதுபதி அறிமுகமாகும் காட்சி, வாத்தியாரைக் காவல் நிலை யத்துக்குள் அழைத்து வரும் காட்சி, விசாரணை கமிஷன் காட்சிகள் ஆகியவற்றில் இயக்குநரின் முத் திரை தெரிகிறது. ஆனால் கதை போலவே திரைக்கதைப் போக்கும் பழகிய பாட்டையிலேயே பயணிக்கிறது.
அடர்த்தியான முறுக்கு மீசையுடன் வீரமிக்க தோற்றம் காட்டி நேர்மைத் திமிர் கொண்ட போலீஸாக வலம் வரு கிறார் விஜய் சேதுபதி. உடல் மொழி யிலும் பேச்சிலும் பாத்திரத்துக்குத் தேவையான உருமாற்றம் தெரிகிறது. வீட்டில் ஆசைக் கணவனாகவும் பாசத் தந்தையாகவும் இருக்கும் விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் விறைப்பும் முறைப்புமாய் சீறுகிறார்.
கணவனையும் குழந்தைகளை யுமே தன் உலகமாகக் கருதும் சராசரியான மனைவி வேடத்தில் அழகுடன் பொருந்திப்போகிறார் ரம்யா நம்பீசன். ஊடல்களில் நுட்பமான பாவனைகளுடன் வசீகரிக்கிறார். வெளியில் வீரமாக மீசையை முறுக்கும் அதிகாரி, வீட்டில் மனைவியை சமாதானப்படுத்துவதற்காக தாழ்ந்து போவதை இயல்பாக காட்சிப் படுத்திய இயக்குநருக்கு ஒரு சபாஷ். வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தியின் மிடுக்கு, பாத்திரத் துக்கு உயிர் கொடுக்கிறது. இளம் போலீஸ் அதிகாரியாக வரும் லிங்கா, வில்லனின் அடியாளாக வரும் விவேக் பிரசன்னா இருவரும் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப் பதிவு படத்தின் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது. கர்பிரசாத்தின் எடிட்டிங் திரைக்கதையின் வேகத் துக்கு உதவியுள்ளது. நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை பல இடங்களில் நெளியவைக்கிறது. பாடல்கள் படத்துடன் ஒன்றவே இல்லை. வாத்தியாரின் ஆட்கள் சேதுபதி இல்லாத நேரத்தில் அவரது வீட்டை முற்றுகையிடும் காட்சியில் வரும் திருப்பம் வித்தியாசமாக இருந்தாலும் நம்பும்படி இல்லை.
இரண்டாவது பாதியில் கதையில் பெரிய சம்பவங்கள் எதுவும் இல்லாததால் திரைக்கதை சிறிது தளர்ந்துவிடுகிறது. விசாரணை என்ற பெயரில் நான்கைந்து பேரை சேதுபதி சுட்டு வீழ்த்துவது கேள்விக் குள்ளாகவில்லை.
வழக்கமான போலீஸ் கதைதான் என்றாலும், பெருமளவில் சுவாரஸ்ய மாகச் சொன்ன விதமும் விஜய் சேதுபதியின் நடிப்பும் படத்தைக் காப்பாற்றுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT