Published : 12 Feb 2016 11:42 AM
Last Updated : 12 Feb 2016 11:42 AM
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அள்ளவோ.
‘தீர்க்க சுமலங்கலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ என்ற பாடலின் அனுபல்லவி வரிகள் இவை. தி. ஜானகிராமனின் ‘இசைப் பயிற்சி’ சிறுகதையில் வரும் மல்லி என்ற கதாபாத்திரம் பவளமல்லி மலரின் காம்புகளைக் கண்ணுறும் போதெல்லாம் தனக்குத் தன்யாசி ராகத்தைப் பாட வேண்டும்போல் தோன்றுகிறது என்று பேசும். இப்பாடலைக் கேட்கையில் மல்லிகைப் பூவை முகர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தவறுவதில்லை.
வான் மேகங்கள்... வெள்ளி ஊஞ்சல்போல்...
திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ?
திங்கள் மேனியை மேகம் தாலாட்டும் சுகத்தையும் குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி அனுபவிக்கும் சுகத்தையும் தன்னுடைய நெஞ்சத்தை மஞ்சமாக்கி வழங்குவதற்குக் காதலனை அள்ளிக்கொள்ள அழைக்கிறாள் காதலி. திரைப்பாடல்களில் ஆண்களே பெரும்பாலும் தங்கள் காமத்தை வெளிப்படுத்துவார்கள். இந்தப் பாடலிலோ ஒரு பெண் மனத் தடைகள் ஏதுமின்றித் தன் உணர்வை அழகாக வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. திரைப்படப் பாடல் வரிகள் சட்டெனச் செவ்வியில் கூறுகளைப் பெற்று திக்குமுக்காடச் செய்கின்றன.
வாலியின் வலிமை
பைந்தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்பட்ட கண்ணதாசனால் மட்டுமே ஆழமும் அழகும் கொண்ட பாடல் வரிகளை எழுத முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கண்ணதாசன் திரையுலகில் கோலோச்சிய காலத்திலேயே அவருக்கு இணையான அரியாசனத்தில் அமர்ந்தவர் வாலி. திருவரங்கத்தில் அரங்கராஜனாகப் பிறந்து வாலி என்று பெயர் சூட்டிக்கொண்டு தனக்கு எதிர் நிற்பவர்களின் பலத்தைப் பெற்றுக்கொண்டாரோ என்னவோ, கடைசி காலம் வரை திரையுலகில் வாலியை வீழ்த்த ஆள் இல்லை.
சரணத்தில் வரும் வரிகளான “பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம் மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது” என்று தொடங்குகிறது. காலம் காலமாக ஆணைச் சார்ந்தே பெண்மை உயர்கிறது என்ற பழங்கதை இங்கே மீண்டும் பேசப்படுகிறது.
பாடலைத் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை இசையில் கோர்த்திருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் மல்லிகை மலரின் மணத்தை மூக்கில் நுழைத்து மூளைக்குள் ஏற்றிக் கிறங்க வைக்கிறார். காதலும் காமமும் வெளிப்படும் தன்மையை வாணி ஜெயராமைத் தவிர வேறு யாராவது குரலில் வெளிப்படுத்தியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.
இந்தப் பாடலில் திருப்பாவை வரிகளின் பாதிப்பு தெரிகிறது.
குத்துவிளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தன்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
என்ற பாசுரத்தில் குவலயபீடம் என்ற யானையைக் கொன்று, அதன் தந்தங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிலில், நப்பின்னையின் கொங்கைகளை மெத்தையாகக் கொண்டு சயனித்துக் கிடக்கும் கண்ணனை எழுப்புகிறாள் ஆண்டாள். நப்பின்னையை மணக்க ஏழு எருதுகளைக் கண்ணன் தழுவியதாகப் புராணம். ஆனால் பழைய தமிழ் இலக்கியங்களில் நப்பின்னை என்ற கதாபாத்திரம் இல்லை. அது பின்னால் உருவாக்கப்பட்டது.
“பூசும் சாந்தென் நெஞ்சமே” என்கிறார் பாரங்குசநாயகியாக தன்னை வரித்துக்கொண்டு கண்ணனை நினைத்து உருகும் நம்மாழ்வார். உடலும் உயிரும் இரண்டறக் கலக்கும் ஆலிங்கனத்தை இவ்வளவு அற்புதமாக யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இத்திரைப்படத்தில் நெஞ்சத்தை மஞ்சமாக வழங்குகிறாள் கதாநாயகி.
காலங்கள் மாறினாலும் காதலும் காமமும் வெளிப்படும் விதம் மாறுவதே இல்லை.
- தொடர்புக்கு: bagwathi@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT