Published : 14 Feb 2016 09:58 AM
Last Updated : 14 Feb 2016 09:58 AM
கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான்.
போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான். இதற்காக நாஞ்சில் சிவாஜி (ஜில்-சித்தார்த்), ஜங்கு லிங்கம் (ஜங் - அவினாஷ் ரகுதேவன்), ஜாகுவார் ஜகன் (ஜக் - சனந்த் ரெட்டி) என மூன்று புதிய இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஜில், ஜங், ஜக்கின் பயணம் வெற்றிகரமாக முடிந்ததா என்பதுதான் கதை.
போதைப்பொருளை ஒளித்துவைக் கும் ஐடியாவில் தெறிக்க ஆரம்பிக்கிறது அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தியின் ரசாயன மூளை. சூதாட்ட விடுதியில் ‘போக்கர்’ மாபியாவாக இருக்கும் அப்பா நாசருடன் கூட்டணி அமைத்து, ஆர்.ஜே. பாலாஜியை போண்டியாக்கும் சித்தார்த் தின் அறிமுகம், எதிர்பார்ப்பைக் கூட்டு கிறது. சினிமா படப்பிடிப்பில் சிக்கி, கார் நொறுங்குவது வரையிலான முதல் பாதித் திரைக்கதையில் சிக்கலோ விக்கலோ இல்லை. ஏகப்பட்ட திருப்பங்களும் பின் னணிக் கதைகளும் கொண்ட இரண்டாம் பாதியில்தான் தடுமாறுகிறது.
தீரஜ் வைத்தியின் அணுகுமுறை கிட் டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களையும் கேலிச்சித்திரங்களாக மாற்றுகிறது. பேசிப் பேசியே கவரும் சித்தார்த் (பல சமயங்களில் சித்தார்த் பேசுவதை புரிந்துகொள்ள கோனார் நோட்ஸ் தேவைப்படலாம்), சனத், அவினாஷ் ரகுதேவனும் படத்துக்கு பலம். அதே நேரம், தெய்வா, அவனுடைய காரிய தரிசி, அந்த டிரைவர், ஃபார்மஸிஸ்ட், ரோலக்ஸ் ராவுத்தர் என்று மற்ற பல கதாபாத்திரங்களும் தனித்துத் தெரிகிறார்கள். இத்தனை பேருக்குமே திரைக்கதையில் போதிய இடமிருக்கிறது! ஒரே ஒரு காட்சியில் வந்து போகும் நாசர், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது பாத்திரங்களும் நினைவில் தங்குகின்றன.
ஆப்பிரிக்க ‘சினிமா’வைப் பற்றிய காட்சியும், ‘கதாகாலட்சேப’ பாணியில் ஒருவர் பேசுவதும் திரையரங்கில் ஆரவாரத்தை ஏற்படுத்துகிறது. கதைக் களம் 2020-ல் அமைந்ததற்கான பெரிய காரணம் எதையும் காண முடியவில்லை.
வழக்கமான சித்தார்த் துணிச்சல்படி, நாயகனைச் சுற்றியே பெரும்பாலான காட்சிகள் நகராமல்... கதையின் போக்கில் நாயகன் இணைந்துகொள்ளும் படம்தான் இதுவும். கதைக்குத் தேவையில்லை யெனில் நாயகியைக்கூடத் தியாகம் செய்யும் துணிச்சல் இயக்குநருக்கும் இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் பெண்கள், பாலியல் தொடர்பான வசனங்களுக்குக் குறைவு இல்லை.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணா, கலை இயக்குநர் சிவஷங்கர் ஆகிய இருவரும் கொண்டாட்டமான பங்களிப் பைச் செய்திருக்கிறார்கள். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் புது வண்ணம்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்கை வைத்திருக்கும் காரை, யார் வேண்டு மானாலும் வந்து எடுத்துக்கொண்டு போகும் விதத்திலா நிறுத்திவிட்டுப் போவார்கள்? இதுபோன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் சம்பவங்கள் திரும்பத் திரும்ப வருவதுபோன்ற தோற்றம் ஏற்படுமளவு திரைக்கதை ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்கிறது.
ஒவ்வொரு பாத்திரத்தின் அடையாளத் தையும் ‘ஜில்’லென்று செதுக்கியும், பிற்பாதியை விறுவிறுப்பாக நகர்த்து வதில் ‘ஜங்’ ஆகி இயக்குநர் தடுமாறு கிறார். ஆனாலும், ‘ஜக்’ ஆகாமல் காப்பாற்றிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT