Last Updated : 02 Jul, 2021 03:13 AM

 

Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

ஓடிடி உலகம்: திரும்பிப் பார்க்கவைத்த 2 படங்கள்

இதர மொழிகளோடு ஒப்பிடுகையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் தரமான தமிழ் படங்கள் மிகவும் குறைவு. இந்த ஆதங்கத்தை நேர் செய்யும் வகையில் அண்மையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கின்றன. ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய பொதுப்புத்தியின் அலட்சியத்தை உலுக்கிய ’மேதகு’, ஆதிக்க வெறியர்களைச் சாடும் ‘மாடத்தி’ என, கனமான உள்ளடக்கத்துடன் வெளியாகி, விவாதங்களையும் பற்ற வைத்திருக்கின்றன.

மேதகு: ஒரு தலைவன் உருவான கதை

‘ஃபேமிலிமேன்’ வலைத்தொடரின் இரண்டாம் சீஸன், ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் என அண்மையில் ஓடிடியில் வெளியான இரண்டு படங்களிலும் ஈழப்போராட்டம் குறித்த கருத்தாக்கம் பொறுப்பின்றி கையாளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நிஜத்தில், ஈழத்தில் நடந்தது என்ன? ஈழ மக்களின் தரப்பு நியாயங்கள் எவை என்பது பற்றிய புரிதலில் தற்போதைய தமிழ்நாட்டு தலைமுறைக்கும் பிற இந்திய மாநிலத்தினருக்கும் நிறையவே போதாமைகள் உண்டு. அவற்றுக்கு விடை தரும் முயற்சியாக மேதகு திரைப்படம் அமைந்திருக்கிறது.

சிங்களர் - தமிழர் இடையிலான இனவாத மோதலில், திருப்புமுனையான ஒரு முக்கியப் போராளி இயக்கத்தின் விதை எப்போது விழுந்தது, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற போராளி எப்படி உதயமானார், அறவழியிலிருந்த தமிழர்களின் போராட்டம் எந்தப் புள்ளியில் ஆயுதமேந்திய மறவழிக்கு மடைமாறியது என்பதையெல்லாம் ஆழமான விவரணைகளோடு ஓர் உயிர்ப்புமிக்கத் திரைப்படத்துக்குரிய எளிய மொழியில் சொல்லியிருக்கிறது ‘மேதகு’.

பிரபாகரன் பிறந்ததில் தொடங்கி, கையில் ’துவக்கு’ ஏந்தி அவர் களமாடிய முதல் சம்பவம் வரையாக ‘மேதகு’ முதல் பாகம் விவரிக்கிறது. பிரபாகரன், யாழ்ப்பாண மேயர் துரையப்பா, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா என முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு சிறப்பாகவும் தோற்றப் பொருத்தத்துடனும் அமைந்துள்ளது. அதிலும் இளவயது பிரபாகரனாக தோன்றும் குட்டி மணியின் ஆழமான பார்வையும் உடல்மொழியும் அபாரம்!

ஏராளமான விவரிப்புகள், சம்பவங்கள் நிறைந்த கால் நூற்றாண்டுக் கதையை சுருங்கச் சொல்வதற்கு மதுரை தெருக்கூத்து உத்தியை உபயோகித்திருப்பது ரசிக்க வைக்கிறது. அழிவின் விளிம்பிலிருக்கும் கூத்துக் கலை ‘மேதகு’ மூலம் மீண்டும் ஆக்சிஜன் பெறவும் வாய்ப்பாகலாம். திரைப்படம் பேசும் அரசியலுக்கு அப்பால், கலை வடிவிலும் மேதகு பாய்ச்சல் காட்டியுள்ளது. சுமார் அறுபது லட்சம் பட்ஜெட்டில் சவால்கள் மிக்க கதையை, பெரிதாய் குறை காண முடியாத வகையில் சினிமாவாக உருவாக்கியிருப்பது வரவேற்புக்குரியது. அவ்வகையில் கதைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் ‘மேதகு’ படத்தின் இயக்குநர் கிட்டு. ரியாஸின் ஒளிப்பதிவு, பிரவீன் குமாரின் இசை இரண்டும் திரைப்படத்தின் தூண்கள். பறையொலிப் பின்னணியில் ’தமிழுக்கு அமுதென்று பேர்..’ எனும் பாவேந்தரின் பாடல் காதுகளில் இன்னமும் ரீங்கரிக்கிறது.

படத்தின் பட்ஜெட் காரணமாக ஆவணப் படத்தின் சாயல் சில இடங்களில் துருத்தலாகத் தெரிவதை சிறு குறையாகச் சொல்லலாம். ஆனால் ஈழ மக்களின் வலியையும் மொழியையும் திருத்தமாக சொன்ன அரசியல் பார்வையில், எளிமையும் செறிவுமான திரைக்கலையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் முன்மாதிரிப் பாய்ச்சல் என ’மேதகு’ படத்தைப் பாராட்டலாம். கூடவே அண்மைக்கால அரைகுறை சித்தரிப்புகளுக்கு முத்திரை வசனத்தின் பாணியிலே ‘திருப்பி அடி’த்திருக்கிறார்கள்.

மாடத்தி: ஆதிக்கத்தின் பார்வைப் பறிப்பவள்

தமிழ் சினிமா சூழலில் கட்டுடைப்பு என்பது எப்போதாவதுதான் நிகழும். அண்மையில் அது ‘மாடத்தி’யால் நிகழ்ந்திருக்கிறது.

கவிஞரும் ஆவணப்படப் படைப் பாளியுமான லீனா மணிமேகலையின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியாகி யிருக்கும் ‘மாடத்தி’, பார்த்து முடித்த பின்னரும் தொந்தரவு செய்யக்கூடியது. சாதியம், பெண்ணியம் என ஒன்றுக்கும் மேலான அடுக்குகளில் மடல் விரித்திருக்கும் ‘மாடத்தி’யை உள்வாங்குவதற்கு தனி மனநிலை தேவைப்படுகிறது.

தொட்டால் தீட்டு என்கிற பெயரில் ஒடுக்கப்பட்டிருக்கும் சமூகங்களை அறிவோம். ’பார்த்தாலே தீட்டு’ என்று அந்த ஒடுக்கப்பட்டோராலும் ஒதுக்கப்படும் சமூகமான புதிரை வண்ணார் மத்தியிலிருந்து மாடத்திக்கான கதையை நெய்திருக்கிறார் லீனா மணிமேகலை. ஊர்ச் சாதியினர் பார்வையில் விழாதிருக்க இரவில் மட்டுமே புழங்குவதும், ஊராரின் அழுக்குத் துணிகளை வெளுப்பதே பிறவிப் பயனாக பணிக்கப்பட்ட மக்கள் அவர்கள். நிலமற்று, தடமற்று வாழும் அந்த அவலச் சமூகத்தின் துயரங்களை, ‘இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா..?’ என்பவர்களின் முகத்திலறைந்து சொல்கிறாள் ‘மாடத்தி’.

அழுக்கை வெளுக்கும் குடும்பத்தில் பதின்பருவத்து பட்டாம்பூச்சியாய் வலம்வருகிறாள் சிறுமி யோசனா. கூட்டுக்குள் அடங்காத மகளை, கவலை நிரம்பிய வசவுகளால் அர்ச்சிக்கும் தாய் வேணி. இவ்விரு பெண்களைச் சுற்றி கதை நகர்கிறது. ஊர் விலக்கியபோதும் பரந்திருக்கும் காடும், அருவியும், வானமும், மழையும், பறவைகளும், விலங்குகளும் யோசனாவை ஆரத்தழுவிக் கொள்கின்றன. யோசனாவின் சிறகடிப்புகள் அனைத்துமே நிராகரிப்பின் மறுபக்கத்தில் பெருவெடிப்புகளாகின்றன.

சாதிய அடக்குமுறையை பேசுவதற்கு நிகராக ஒரு பெண்ணின் மலர்ச்சியை சொல்ல முயன்றதிலும் ‘மாடத்தி’ வித்தியாசப்படுகிறது. முழுதாக ஆணுடல் பார்த்த குறுகுறுப்பில் பதுங்கி சிலிர்க்கும் பருவப் பெண்ணின் உலகமும் அவளது தொடர் தவிப்புகளும் அதற்கு ஓர் உதாரணம்.

பார்த்தால் தீட்டு என்று ஆதிக்க சாதி ஆண் நிகழ்த்தும் பாலியல் வன்முறை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்திலிருந்து அவலங்களை கடத்துகிறது. அந்த நீண்ட காட்சி, நாகரீக சமூகத்தை குற்ற உணர்வு கொள்ளச் செய்யும். அதே போன்ற ஆதிக்க வெறிக்கு சிறுமியும் பலிகொள்ளப்பட்டு. பின்னர் சிறு தெய்வமாகும் மாடத்தி, பார்த்தாலே தீட்டு என்று பழித்த ஊராரின் பார்வையை ஒட்டுமொத்தமாக பறிக்கவும் செய்கிறாள்.

மேதகுவின் கூத்துக்கலை போலவே ‘மாடத்தி’யின் கதை, வரைகலை சித்தரிப்புகளின் உத்தியை பயன்படுத்துகிறது. புழுக்கமூட்டும் கதையில் காடு, மலை என குளிர்ச்சியான ஒளிப்பதிவும், அவசியமான இடங்களில் மட்டுமே ஒலிக்கும் கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் பெரும் பலம். ஆனால் அடுத்தடுத்து தொடரும் காட்சிகள் ஒன்றோடொன்று ஒட்டாத தன்மை தென்படுவதை தவிர்த்திருக்கலாம். மாடத்தியாக வரும் சிறுமி அஜ்மினா காசிம், தாய் வேணியாக தோன்றும் செம்மலர் அன்னம் ஆகிய இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்களும் நிறைவு தந்திருக்கிறார்கள்.

சிறு திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காதது போல, ஓடிடி வெளியீடு என்ற போதும் முன்னணி தளங்களின் புறக்கணிப்பை அடுத்து அதிகம் பிரபலமாகாத செயலிகள் மூலமே மேதகுவும் (BS Value), மாடத்தியும் (NeeStream) பார்வையாளர்களை சென்று சேர்ந்திருக்கின்றன. இரண்டுமே ஆதரிக்க வேண்டிய படைப்புகள்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x