Last Updated : 25 Dec, 2015 11:57 AM

 

Published : 25 Dec 2015 11:57 AM
Last Updated : 25 Dec 2015 11:57 AM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: தேவனின் கருணை இன்றே கைகளிலே...

இந்திய மொழிகள் எல்லாவற்றை விடவும் பரப்பிலும் தளத்திலும் இணையற்றது என பலர் கருதும் இந்தி மொழித் திரைப் பாடல்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் பாடல்களோ கிறிஸ்துவைப் பற்றிய பாடல்களோ இல்லை. இந்த நிலைக்கு முற்றிலும் மாறாக, கருத்து, இசை மற்றும் குரல் வளம் போன்ற அனைத்து அம்சங்களிலும் ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய, ஏராளமான இனிமையான கிறிஸ்துமஸ் / கிறிஸ்து பற்றிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் உள்ளன.

வியக்க வைக்கும் அளவு எளிமையும் இனிமையும் கூடிய சொற்களில் கிறிஸ்துமஸ் உணர்வை நமக்குள் ஏற்படுத்தும் கண்ணதாசன் பாடல் ஒன்றையும் அந்தச் சூழலின் வெகு தொலைவில் மங்கலாகத் தெரியும் பார்வையாக விளங்கும் இந்திப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்.

இந்திப் பாடல்:

படம்: ஷாந்தார் (பேரழகு)

பாடலாசிரியர்: ராஜேந்திர கிஷன்

பாடியவர்: கிஷோர் குமார்

இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்.

பாடல்:

ஆத்தா ஹை ஆத்தா ஹை

சாண்டா கிளாஸ் ஆத்தா ஹை

ஏக் ஹிரன் கி பக்கி பர்

கீத் சுனாத்தா ஆத்தா ஹை

மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி கிறிஸ்துமஸ்

பொருள்.

வருகிறார் வருகிறார் சாண்டாகிளாஸ் வருகிறார்

மான் பூட்டிய வண்டியில் அமர்ந்து கொண்டு

தேன் இசைப் பாடல் பாடிக்கொண்டு

வருகிறார் வருகிறார் சாண்டாகிளாஸ் வருகிறார்

மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி கிறிஸ்துமஸ்

உலகத்தில் உள்ள உன்னத பொம்மைகளை

உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்

நீலம், மஞ்சள் மெஜந்தா நிறங்களில்

உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்

குண்டு மாப்பிள்ளை, ரப்பர் மனைவி

தொண்டு கிழவன் துவண்ட கிழவி

டுக் டுக் ஆடும் குரங்கு

டக் டக் வாசிக்கும் கரடி

என்றைய தினம் கண்மணிக் குழந்தைகள்

எழுந்து காலையில் தங்கள்

தலையணை கீழே இருக்கும்

பொம்மையை எடுத்துக்கொண்டு

வெளியே ஓடுவார்கள்

அன்றைய தினம் அதை அனைவருக்கும் காட்டி

ஆடிப் பாடி அவர்கள் சொல்வார்கள் - என்ன தெரியுமா

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

போகிறார் போகிறார் சாண்டாகிளாஸ் போகிறார்

அடுத்த ஆண்டு விரைந்து மறுபடி வருவார்

இந்த இந்திப் பாடலின் வரிகளுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாத உயரத்தில் நாம் பார்க்கும் தமிழ்த் திரைப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

படம்: கண்ணே பாப்பா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்: பி. சுசீலா

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல்:

சத்திய முத்திரை கட்டளை இட்டது

நாயகன் ஏசுவின் வேதம்

கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது

பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்

அந்தத் தூதுவன் ஆடிய விளையாடல்

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்

மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்

மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ

தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே

அவன் ஆலயம் என்பது நம் வீடு

மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்

வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்

ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே

நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே

அவன் பாதங்கள் கண்டால் அன்போடு

ஒரு பாவமும் நம்மை அணுகாது

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x