Last Updated : 25 Jun, 2021 04:12 AM

3  

Published : 25 Jun 2021 04:12 AM
Last Updated : 25 Jun 2021 04:12 AM

மறக்கப்பட்ட ஆளுமை; செருகளத்தூர் சாமா: நாடகமே உலகம்...

நாற்பதுகள் வரையில், கடவுளர்களே தமிழ் சினிமாவில் முக்கியக் கதாபாத்திரங்கள். குறிப்பாக கிருஷ்ணரும் நாரதரும் இல்லாமல் எந்தப் படமும் சோபிக்கவில்லை. கிருஷ்ணர் வேடத்துக்கு அங்கலட்சணம் மட்டுமல்ல; சங்கீத ஞானத்துடன் பாடி நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். என்.டி.ராமராவை 17 படங்களில் கிருஷ்ணராகப் பார்த்திருக்கிறோம். நரசிம்ம பாரதி கிருஷ்ணர் வேடத்துக்காகப் பிறந்த இன்னொரு நடிகர். இந்த இருவருக்கும் முன்னால், 40-களில் கிருஷ்ணர் வேடம் என்றால், அது கச்சிதமான தெய்வாம்சத்துடன் பொருந்தியது செருகளத்தூர் சாமாவுக்குத்தான். 11 படங்களில் கிருஷ்ணராக வாழ்ந்தார்.

பாடகர், நடிகர், கதை - வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஒரு பன்முகக் களஞ்சியமாக விளங்கினார் செருகளத்தூர் சாமா. பாடல்களால் நிறைந்திருந்த திரைப்படங்களின் காலத்தில், திரை நடிப்பு எனும் வகை எப்படி இருக்க வேண்டும் என்பதைச் செய்துகாட்டிய யதார்த்த நடிப்பின் முன்னோடி. அலட்டல் இல்லாத உடல்மொழியாலும் நல்ல தமிழ் உச்சரிப்பாலும் ‘சபாஷ் சாமா’ என்று சொல்ல வைத்தவர்.

நாயகனை விஞ்சிய குணச்சித்திரம்

1935-ல் ‘பவளக்கொடி’ தொடங்கி மூன்று சுமார் படங்களில் நடித்திருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், நான்காவதாக ஒய்.வி.ராவ் இயக்கத்தில் நடித்த ‘சிந்தாமணி’ திரைப்படம்தான் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. மதுரையிலும் சென்னையிலும் ‘சிந்தாமணி’ 50 வாரங்களைக் கடந்து ஓடியது. இதன் நினைவாகப் படத்தைத் தயாரித்த ராயல் டாக்கீஸின் உரிமையாளரால் மதுரையின் கீழவெளி வீதியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டதுதான் ‘சிந்தாமணி’ திரையரங்கம்.

‘சிந்தாமணி’ படத்தில் மொத்தம் 26 பாடல்கள். அவற்றில் மூன்று பாடல்கள் பெரும் வெற்றிபெற்றதை எடுத்துக்காட்டுகிறார் முதுபெரும் திரை விமர்சகர் திரையோகி. கதாநாயகன் எம்.கே.டி. பாடிய ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி’, கதாநாயகி அஸ்வத்தம்மா பாடிய ‘ஈன ஜென்மம் எடுத்தேன் என் ஐயனே’. இந்த இரண்டு பாடல்களுக்கும் ஈடுகொடுத்த அந்த மூன்றாவது வெற்றிப் பாடல் ‘ ‘நாடகமே உலகம்.. நாளை நடப்பதை யாரறிவார்?’. செருகளத்தூர் சாமா பாடி, நடித்த பாடல்.

“ ‘நாடகமே உலகம்’ என்கிற புகழ்பெற்ற வரி ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியருடையது; ‘நாளை நடப்பதை யாரறிவார்?’ என்கிற வரி இந்தியப் பாரம்பரிய தத்துவத்தின் சாரம். ஒரு துணை நடிகருக்கு, கதாநாயகனுக்கு இணையாக தத்துவப் பாடல் கொடுக்கப்பட்டிருந்த ‘சிந்தாமணி’ படமும் செருகளத்தூர் சாமாவின் நடிப்பும் சிறுவனாக இருந்த என்னைக் கவர்ந்தன” என்று, படத்தின் கதாநாயகனை விட்டுவிட்டு அதில் நடித்த சாமாவை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார் அசோகமித்திரன்.

சுதந்திரத்துக்கு முந்தைய திரையுலகின் யதார்த்தத் சித்திரத்தை தன்னுடைய ‘கரைந்த நிழல்கள்’ நாவலின் வழியாகப் படைத்துக்காட்டியவர். ’சுண்டல்’ என்கிற அவரது சிறுகதையில் இடம்பெற்றுள்ள ‘பெருங்களத்தூர் சம்பு’ என்கிற கதாபாத்திரம், செருகளத்தூர் சாமாவின் திரைப் பயணத்தை நினைவுபடுத்திச் செல்வதைப் பார்க்கலாம். ‘சிந்தாமணி’யில் கதாநாயகன் பில்வமங்களும் கதாநாயகி சிந்தாமணியும் பெறும் படிப்பினைக்குச் சற்றும் குறையாமல், அதைத் தன் மனைவி ருக்மணியை பூலோகம் அழைத்துவந்து உணர்த்தும் கிருஷ்ணராகவும் சாதுவாகவும் கதாநாயகனை விஞ்சும் குணச்சித்திரமாக சாமாவின் நடிப்பு ஏற்படுத்தும் தாக்கம் தனித்துவமானது.

கடவுளும் மனிதனும்

‘சிந்தாமணி’ படத்துக்கு பாடல்களை எழுதி, இசையமைத்த பாபநாசம் சிவனிடம் ‘நாடகமே உலகம்.. நாளை நடப்பதை யாரறிவார்?’ என்பதை பாடலின் இறுதிவரியாக வைத்துக்கொள்ளலாமா என்று பாடிக்காட்டி அனுமதிபெற்றார் சாமா. அவர், ‘நாடகமே உலகம்’ என்கிற ஷேக்ஸ்பியரின் வரியைப் பயன்படுத்தியதற்கு ஒரு காரணமுண்டு. சாமா ஷேக்ஸ்பியர் நாடங்கள் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். வசனம் எழுதும் வாய்ப்புக் கொடுக்கும்படி சவுண்ட் சிட்டி நாராயணனால், ஒய்.வி.ராவுக்கு சிபாரிசு செய்து அனுப்பப்பட்டார். சாமாவின் பாடும், நடிக்கும் திறமையைப் பார்த்து ‘பாமா பரிணயம்’(1936) படத்தின் மூலம் கதாநாயகன் (கிருஷ்ணர்) ஆக்கினார் ஒய்.வி.ராவ். அடுத்து இயக்கிய ‘சிந்தாமணி’ படத்துக்கு இணை வசனம் எழுத வைத்ததுடன் மீண்டும் கிருஷ்ணராக நடிக்கவும் வைத்தார்.

‘சிந்தாமணி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோதே எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாகவும் அவருடைய தந்தை மகாகவி கம்பராக செருகளத்தூர் சாமாவும் நடித்து வெளியானது ‘அம்பிகாபதி’ (1937). அதுவும் ஒரு வருடத்துக்கு மேல் ஓடி, சாதனை படைத்தது. அதேபோல், ராஜா சாண்டோ இயக்கத்தில், தியாகராஜ பாகவதர் அம்பலவாணராக நடித்த ‘திருநீலகண்டர்’ (1939) படத்தில், சிவபெருமானாகவும் சிவனடியாராகவும் இரண்டு தோற்றங்களில் வருவார் சாமா. தான் கொடுத்துவிட்டுச் செல்லும் கலயத்தை தொலைத்துவிடும் பாகவதரை மிரட்டு மிரட்டென்று மிரட்டி, நடிப்பில் அவரை நடுநடுங்க வைத்துவிடுவார் சாமா.

ஏற்பது கடவுள் வேடம் என்றால் அதற்குரிய தெய்விகமும் சாந்தமும் சாமாவின் நடிப்பில் முழுமையாகக் குடிகொண்டுவிடும். மனிதக் கதாபாத்திரம் என்றால் அதன் குணத்துக்கு ஏற்ப நம் மனதைக் கொள்ளையடித்துவிடுவார். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஜெமினியின் ‘நந்தனார்’ (1942). ‘இசையரசு’ எம்.எம்.தண்டபாணி தேசிகரை நந்தனாராகவும் செருகளத்தூர் சாமாவை வேதியராகவும் நடிக்க வைத்து இயக்கினார் பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் ஆன முருகதாசா. அதில், சாமா, தஞ்சாவூர் பாணி மிராசுதாரராக மிடுக்கான நடிப்பைத் தந்து அசத்தியது படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

ஒப்பனைக் கலை வழியே...

‘நந்தனா’ரில் சாமாவின் நடிப்பை, கல்கி, ‘குண்டூசி’ கோபால் உள்ளிட்ட அந்நாளின் கறார் விமர்சகர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், குடவாலை அடுத்த செருகளத்தூரின் மிராசுதார் வைத்தியநாத ஐயரின் முதல் மகனாக ஜூன் 26, 1904-ல்பிறந்தார். ஐந்து வயதிலேயே தாயை இழந்ததால், தஞ்சைவூர் நகரத்தில் வசித்துவந்த தாய்மாமாவின் வீட்டில் வளர்ந்தார். அங்கே பள்ளி இறுதி வகுப்பையும் கர்னாடக சங்கீதத்தையும் கற்றுக்கொண்ட சாமா, ’பாகவத மேளா’ நாடகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கோயில் திருவிழா சமயத்தில் நடித்துவந்தார். ஆனால், அவருடைய கலையார்வத்துக்கு அது போதவில்லை. திருமணத்துக்குப் பின் வேலைதேடி தனது தம்பியுடன் சென்னையில் குடியேறினார்.

முதலில் ஜெமினி ஸ்டுடியோவில் பாடக நடிகராகச் சேர்ந்துவிட முயன்றார். அது கைகூடவில்லை. பின்னர், நேசனல் மூவிடோன் ஸ்டூடியோவில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வந்த தன்னுடைய தூரத்து உறவினரான ராஜு மாமா என்பவரிடம் 2 வருட காலம் உதவியாளராக இருந்து ஒப்பனைக் கலையைக் கற்றுக்கொண்டார். புதிய ஸ்டுடியோக்களின் வருகையால் நேஷனல் மூவிடோன் ஸ்டுடியோ படுத்தது. அதன்பின்னர், மேக்-அப் வேலையை விட்டுவிட்டு நல்ல சம்பளத்துக்கு சென்னை காஸ்மோபொலிட்டன் கிளப்பில் கிடைத்த எழுத்தர் வேலையில் அமர்ந்தார்.

அந்தக் கிளப்புக்கு அவ்வப்போது வருகை தந்தார், தமிழ் சினிமாவின் முதல் ‘சவுண்ட் ஸ்டுடியோவை’ சென்னையில் உருவாக்கிய சிவகங்கை ஏ நாராயணன். சாமாவின் அழகிய கையெழுத்தையும் ஒப்பனைக் கலை அறிவையும் கேள்விப்பட்டு, தன்னுடைய ஸ்டுடியோவுக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாமா, ஏ.நாராணயன் இயக்கி, அவருடைய மனைவி குணா ஏ.நாராயணன் ஒலிப்பதிவு (sound recordist) செய்த ‘னிவாச கல்யாணம்’ படத்தில் நாரதராக நடித்து, தன்னுடைய நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தின் கதாநாயகன் பி.எஸ்.னிவாச ராவுக்கு மேக்-அப் போட்டவர் நம்முடைய செருகளத்தூர் சாமாதான். அதன்பின்னர், ‘சிந்தாமணி’ இவரது நடிப்பையும் பாடும் திறமையையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து இவரைப் பிரபலமாக்கியது.

தயாரிப்பும் இயக்கமும்

நடிப்பு, பாட்டுடன் தன்னுடைய எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பாமல், மூன்று படங்களை அடுத்தடுத்து தயாரித்து இயக்கினார் சாமா. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த பழமையான நேஷனல் மூவிடோன் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து, அதை ‘பாரத் மூவிடோன்’ என பெயர் மாற்றம் செய்தார். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மீதிருந்த காதலால், அவருடைய ‘மெர்சென்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தை, அதே கதாபாத்திரப் பெயர்களுடன் ‘ஷைலாக்' (Shylock -1940) என்கிற தலைப்பில் தயாரித்து இயக்கி, வில்லன் கதாபாத்திரமான ஷைலாக்கினையும் அவரே ஏற்று நடித்தார். மிகச் சிறந்த முயற்சியாக இருந்தும் படத்துக்கு வரவேற்பு இல்லை.

அடுத்த படமாவது தன்னைக் காப்பாற்றும் என்று நம்பிய ‘ராஜஸுய’மும்’ (1942) அவரைக் கைவிட்டது. இந்த இரு படங்களின் நஷ்டத்திலிருந்து மீளமுடியால்போய், ‘ராஜா பர்த்ருஹரி’ பாதி படமாகியிருந்த நிலையில் அப்படியே கைவிடப்பட்டது. ‘ஷைலாக்' படத்தின் பாட்டுப் புத்தகத்துடன் முழுமையான திரைக்கதையையும் அச்சிட்டு, ஒரு அனா விலைக்குக் கொடுத்தார் சாமா. அதற்குமுன் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை இப்படி யாரும் வெளியிட்டிருக்கவில்லை.

திரையுலகம் தனக்குக் கொடுத்த பொருள் அனைத்தையும் மீண்டும் திரையுலகுக்கே திரும்பக் கொடுத்த இந்த அசல் கலைஞன், தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு, ஓர் இடைவெளிக்குப் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். கடைசியாக எஸ்.பாலசந்தரின் ‘அவனா இவன்’ படத்தில் ஏழைத் தகப்பனாக நடித்திருப்பார். ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், ‘மெட்ராஸ் ஸ்டேட் சங்கீத நாடக சங்க’த்தின் நிதியுதவியை நாடினார். அந்த உதவி அவரை வந்தடையும்முன்பே சாமா மறைந்தார். ‘நாடகமே உலகம்.. நாளை நடப்பதை யாரறிவார்?’ என்று அவர் பாடிய பாடல்.. அவரது வாழ்க்கையின் இறுதித் தருணத்துக்கும் பொருந்திப்போனது பெரும் சோகம். நாளை அவரது 117-வது பிறந்த நாள்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x