Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM
சாதிய ஆதிக்கம், ஆணாதிக்கம் என பிற்போக்கில் ஊறிய ராஜஸ்தான் மாநில குக்கிராமம் அது. கெம்பூர் என்கிற அந்த கிராமத்தில் பிறந்து வளரும் ஏழைச் சிறுமியான பிரேர்ணா, அங்கே வாழும் அடித்தட்டு குடும்பம் ஒன்றின் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கிறாள். அந்த வயதுக்கே உரிய துறுதுறுப்பு. படிப்பிலும், விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம். ஆனால், சீருடையும், பாடப் புத்தகமும் இல்லாததால் தினசரி தனது தம்பியைக் கொண்டுபோய் விடுவதுடன் அவளது பள்ளி ஏக்கம் அறுபடுகிறது.
லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான ஜெசிகா, தனது தந்தையின் பூர்வாசிரமம் தேடி கெம்பூர் கிராமத்துக்கு வருகிறார். அங்கே பிரேர்ணா -ஜெசிகா இடையிலான சந்திப்பு இயல்பாக நடக்கிறது. சீருடையைப் பரிசளித்து சிறுமி மீண்டும் பள்ளி செல்ல ஜெசிகா உதவுகிறார். அந்த கிராமத்துக் குழந்தைகள் பலரும் பலகையில் சக்கரம் பொருத்தி விளையாடுவதைப் பார்க்கும் ஜெசிகா அவர்களுக்கு முறையான ஸ்கேட்டிங் விளையாட்டை அறிமுகம் செய்கிறார். ஜெசிகாவின் அமெரிக்க சிநேகிதன், அவளுடைய வேண்டுகோளை ஏற்று அந்த கிராமத்துக் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் கற்றுத் தர வந்துசேர்கிறான். தொடக்கத்தில் தடுமாறும் பிரேர்ணா பின்னர், ஸ்கேட்டிங் விளையாட்டில் பித்தாகிப் போகிறாள்.
ஒரு கிராமத்துச் சிறுமி, முன்பின் கேள்விப்பட்டிராத விளையாட்டில் ஈர்ப்பு வருவதற்கானக் காரணத்தை உணர்த்துமிடத்தில், கதையின் மையம் சுழலாய் பார்வையாளரை உள்ளிழுத்துக்கொள்கிறது. தனது தளைகளிலிருந்து விடுபட்டு ஒரு பறவையின் சுதந்திரத்தோடு, காற்றில் சீறிச் செல்ல உதவும் சறுக்குப் பலகை விளையாட்டை அவள் ஆழமாய் நேசிக்கிறாள். சில நேரங்களில் ஒரு மாயக் கம்பளமாகவும் அந்தப் பலகையை அவள் பாவிக்கிறாள்.
கிராமத்துக் குழந்தைகள் வீதிகளின் குறுக்கும் நெடுக்குமாகச் சறுக்கு பலகைகளில் பறக்க, கொந்தளிக்கும் கிராமம் விளையாட்டுக்கு தடை போடுகிறது. ஜெசிகா தனது நண்பர்களுடன் சேர்ந்து, ராஜஸ்தானின் முதல் சறுக்குப் பலகை விளையாட்டுக்கான பூங்காவை கெம்பூரில் நிர்மாணிக்க முயல்கிறார். அரசும் அரசியல்வாதிகளும் கைவிரிக்க, சீமாட்டி ஒருவர் உதவ முன்வருகிறார். பொட்டல்காட்டில் உருவெடுக்கும் சர்வதேச தரத்திலான பயிற்சி களத்தில் குழந்தைகள் முன்னைவிட உற்சாகமாய் சறுக்குப் பலகை கற்றுத் தேர்கிறார்கள்.
ஆனால் ஆரம்பம் முதலே பிரேர்ணாவின் விளையாட்டு ஆர்வத்தை எதிர்த்து வரும் தந்தைக்கு, மகள் படிதாண்டிய புதிய காரணம் ஒன்றும் கிடைத்துவிட, திருமண ஏற்பாட்டின் பெயரால் அவளை முடக்க முயல்கிறார். சிறுமியின் விருப்பத்துக்கு எதிரான திருமண முகூர்த்தமும் ஸ்கேட்டிங் விளையாட்டுக்கான தேசியப் போட்டியும் கெம்பூரில் ஒரே நாளில் வருகின்றன. அன்றைய தினம் என்ன நடந்தது என்ற எளிய எதிர்பார்ப்புக்கு விடை சொல்வதுடன் திரைப்படம் நிறைவடைகிறது.
கிராமத்துச் சிறுமியாக தோன்றும் ரேச்சல் சஞ்சிதா, எண்ணெய் காணாத பரட்டைத் தலையும், கண்ணில் மின்னும் வெகுளித்தனமுமாய் ஈர்க்கிறார். லண்டன் வம்சாவளி ஜெசிகாவாய் அம்ரித் மெஹரா, சீமாட்டியாக தோன்றும் வஹிதா ரஹ்மான் என பெண் மைய திரைப்படத்தின் பெண் கதாபாத்திரங்களும் கச்சிதம். ஆனால் சர்வதேச ரசிகர்களுக்கான இந்தியத் திரைப்படங்களை எடுப்பவர்களின் வழக்கமான தடுமாற்றத்துக்கு அறிமுக இயக்குநர் மஞ்சரி மகிஜனியும் ஆளானதில் ஒரு முழுமையான அனுபவத்தை திரைப்படம் தரவேண்டிய இறுதிக்கட்டத்தில் தடுமாறுகிறது. பார்வையாளர்களை நெக்குருக வைக்கும் முயற்சியாக, சில இடங்களின் செயற்கைத்தனமும், மிகை நடிப்பும் உறுத்துகின்றன.
ஜெர்மன் சமூக செயற்பாட்டாளரான உரிக் ரெய்ன்ஹார்ட் என்ற பெண்மணியால் மத்திய பிரதேசம் ஜன்வார் கிராமத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு ஸ்கேட்டிங் பூங்கா உருவானது. அதன் மூலம் அந்த விளையாட்டில் சாதனை நட்சத்திரமாக உயர்ந்த ஆஷா என்கிற ஆதிவாசி சிறுமியின் கதையை உரியவர்களுக்கான அங்கீகாரமின்றி திரைப்படமாக்கி இருப்பதாய் ஒரு குற்றச்சாட்டும் உலவுகிறது. கைக்கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இன்னமும் சற்றும் மெனக்கெட்டிருந்தால் ‘ஸ்கேட்டர் கேர்ள்’ மேலும் தரமிக்க படைப்பாக மிளிர்ந்திருக்கும்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT