Published : 25 Dec 2015 12:27 PM
Last Updated : 25 Dec 2015 12:27 PM
அகலமான தொப்பி, இடுப்பு பெல்ட்டில் துப்பாக்கி, முழங்கால் வரை நீளம் கொண்ட பூட்ஸ் அணிந்து குதிரை மீது பவனிவரும் கதாபாத்திரங்கள் கவ்பாய் படங்களில் பிரசித்தம். ‘வெஸ்டெர்ன்’ படங்கள் என்றறியப்படும் இவ்வகைப் படங்கள் தமிழிலும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. எம். கர்ணன் இயக்கி ஜெய்சங்கர் நடித்த பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
கர்ணனைத் தவிர வேறு சிலரும் இவ்வகைப் படங்களை முயன்றிருக்கிறார்கள். பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நடப்பதாகவே ‘வெஸ்டெர்ன்’ கதைகள் அமைக்கப்பட்டன. ஆனால், தமிழில் காலம், இடம், கலாச்சாரம் என்பவற்றையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கலந்துகட்டி அடித்த ‘கவ்பாய்’ படங்கள்தான் வெளியாகியிருக்கின்றன. ரஜினி நடித்த ‘நான் போட்ட சவால்’ அவற்றில் ஒன்று. புரட்சிதாசன் என்பவர் இயக்கி 1981-ல் வெளியான இப்படம், வெஸ்டெர்ன் படமாகவும் அல்லாமல், சமூகப் படமாகவும் அல்லாமல் ஏனோதானோ என்று எடுக்கப்பட்டது.
தோல்விப் படம்தான். ஆனால், இப்படத்துக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்கள் படத்தின் தலைப்பை ரசிகர்களின் நினைவில் தேக்கிவைத்திருக்கின்றன.
ஹாலிவுட் மற்றும் இத்தாலி (ஸ்பாகெட்டி!) வெஸ்டெர்ன் படங்களின் இசைவடிவத்துக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்த இசை யமைப்பாளர் என்னியோ மாரிக்கோன். இவர் பங்கேற்ற படங்களில் பின்னணி இசைக்குப் பிரதான இடம் இருந்தது. அவர் உருவாக்கிய ‘தீம் மியூஸிக்’ பல, உலக அளவில் பிரசித்தமானவை. ‘தி குட் தி பேட் அண்ட் தி அக்லி’ படத்தின் டைட்டில் மற்றும் பிரதான தீம் இசையைக் கேட்காத திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது.
கிட்டார், விசில், ஆண் குரல்களின் ஹம்மிங், டிரம்ஸ், டிரம்பெட், பான்ஜோ என்று வறண்ட பாலை நிலத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் இசை அவருடையது. அவரது இசையின் தாக்கம் பலரிடம் உண்டு. ‘நான் போட்ட சவால்’ படத்தில் டி.எல். மகாராஜன் பாடிய ‘நெஞ்சே உன் ஆசை என்ன…’ எனும் பாடல், வெஸ்டெர்ன் இசையின் தாக்கத்தில் உருவானது எனலாம். இப்பாடலை இயக்குநர் புரட்சிதாசனே எழுதியிருந்தார். இலங்கை வானொலியின் பொற்காலத்தில் வாழ்ந்தவர்கள், இப்பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது.
உத்வேகம், உற்சாகம், ஆர்ப்பரிப்பு என்று எழுச்சியூட்டும் இசையை இப்பாடலில் வழங்கியிருப்பார் இளையராஜா. டிரம்ஸ் சிம்பல்ஸின் சிலும்பலுடன் சாகசப் பயணத்தைத் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில், தேவாலய மணி, சாகசங்களுக்குத் தயாரான ஆண் குரல்களின் முரட்டு ஹம்மிங், டிரம்பெட் போன்ற இசைக் கலவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அழுத்தம் நிறைந்த காற்றைக் கிழிக்கும் வீரியக் குரலில் பாடலைத் தொடங்குவார் மகாராஜன். ‘நீ நினைத்தால் ஆகாததென்ன…’ எனும் வரிகளைப் பாடும்போது அவர் குரலில் வைராக்கியம் மிளிரும்.
முதல் நிரவல் இசையில் டிரம்பெட் முழக்கத்துக்குப் பின்னர், கிலுகிலுப்பைகளின் ஒலிக்கு மேலாக வயலின் இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் ராஜா. அரிசோனா நிலப்பகுதியையும், தமிழகத்தின் சமவெளிகளையும் ஒருசேர நினைவுபடுத்தும் வகையிலான இசை அது. வித்தியாசமான உணர்வைத் தரும் அந்த இசையைத் தொடர்ந்து ஒலிக்கும் ஜலதரங்கமும், புல்லாங்குழலும் இது இந்திய அதாவது, தமிழ் நிலத்தில் நிகழும் பாடல்தான் என்று சொல்லிவிடும்.
வெளுத்து வாங்கும் வெயிலின் நடுவே நம்மைத் தழுவிச் செல்லும் தென்றலின் குளுமையை, அந்தப் புல்லாங்குழல் இசை உணர்த்தும். இரண்டாவது நிரவல் இசையில் ‘ஹா.. ஹூ’ எனும் ஆண் குரல்களின் கோரஸ் இப்பாடலின் ‘வெஸ்டர்ன்’ தன்மைக்கு மேலும் வலுசேர்க்கும். ‘சதர்ன்’ கவ்பாயாகக் குதிரை மீது வரும் ரஜினியின் உடல்மொழி ரசிக்க வைக்கும். ரஜினியின் ‘ஓபனிங்’ பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு.
இப்படத்தில் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடிய ‘சுகம் சுகமே… தொடத் தொடத் தானே’ பாடல், அதிகம் கவனிக்கப்படாத அற்புதமான பாடல். இயற்கையின் குளுமையைக் கொண்ட பல பாடல்களை மலேசியா வாசுதேவனை மனதில் வைத்தே இளையராஜா உருவாக்கியிருக்க வேண்டும். வாசுதேவனின் குரலில் மழைக்காலப் பருவத்தை நினைவூட்டும் பாடல்களில் இதுவும் ஒன்று.
கருமேகங்கள் சூழ்ந்த பரந்த வெளியில் மழைக்காகக் காத்திருக்கும் தருணத்தை இப்பாடலின் முகப்பு இசை காட்சிப்படுத்தும். நிரவல் இசையில் வழக்கமான ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் ராஜா. பேஸ் கிட்டார் கொடி மீது படபடத்து அமரும் பட்டாம்பூச்சியைப் போன்ற மெல்லிய புல்லாங்குழலை ஒலிக்க விடுவார். அதைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக்கோவையும் அதனூடே சிதறும் ஜலதரங்கமும் மென்மை எனும் உணர்வின் ஒலிவடிவங்கள்.
இரண்டாவது நிரவல் இசையில் காதலின் களிப்புடன் ஒரு கிட்டார் துணுக்கு ஒலிக்கும். இந்தப் படம் இந்தியில் டப் செய்யப்பட்டது எப்போது என்று தெரியவில்லை. 90-களில் இந்தி சேனல் ஒன்றில் இப்பாடலின் இந்தி வடிவத்தைப் பார்க்க முடிந்தது. தமிழ் நிலத்திலிருந்து வந்த இனிமையான அந்தப் படைப்பின் சுவையை எத்தனை வட நாட்டு ரசிகர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியவில்லை. உணர்ந்தவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகள்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT