Last Updated : 11 Dec, 2015 11:29 AM

 

Published : 11 Dec 2015 11:29 AM
Last Updated : 11 Dec 2015 11:29 AM

காற்றில் கலந்த இசை 33: மூங்கில் வனம் இசைக்கும் கீதம்

திரைப்படங்களுக்கான இசையமைப்பு என்பது ஏனைய கலைகள்போலவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை உள்வாங்கும் திறனின் அடிப்படையில் அமைந்தது. ஒரு பாடலைக் கேட்கும்போதே இது சிறு நகரத்தில் நடக்கும் கதை, இது வயல்வெளி சார்ந்த கிராமத்தில் நடக்கும் கதை, இது மலையடிவார கிராமத்தின் கதை என்று பிரித்தறிய முடிகிறது என்றால், அந்தப் பாடல் இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து பிறந்தது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் திரைப்பாடல்களில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட இசைப் பின்னல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். மோகன், நளினி நடிப்பில் 1984-ல் வெளியான ‘மகுடி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குபவை. (படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் சுமாரானவை!)

அப்பாவித் தோற்றம், நன்கு முடியப்பட்ட குடுமி என்று நாட்டுப்புறப் பாடகன் வேடம் மோகனுக்கு. வேடம் சற்றும் பொருந்தவில்லை. எனினும், இளையராஜாவின் அருட்கடாட்சம் நிரம்பப் பெற்றதால், புகழ்பெற்ற பாடல்களுடன் தொடர்புடைய நடிகராகத் திகழும் மோகனுக்கு இப்படத்திலும் அழகான பாடல்கள் கிடைத்தன.

காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வழியும் கிராமிய இசைக் கலைஞனின் திறமையை ஒழுங்குபடுத்தும் பெண், கர்நாடக இசையை அவனுக்குக் கற்றுக்கொடுப்பாள். மெல்ல மெல்ல அவன் மீதான பரிவு காதலாக மலரும் காட்சியமைப்பு. ‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ எனும் பாடலை அந்தக் காட்சிக்குத் தந்தார் இளையராஜா. எஸ்பிபி, ஜானகி பாடிய இந்தப் பாடல் பாமர ரசிகனுக்குக் கர்நாடக இசையின் சுவையைப் பகிர்ந்தளித்த படைப்பு. திரைப்பாடல்களில் அபூர்வமாய்ப் பயன்படுத்தப்படும் ரசிகரஞ்சனி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது.

நீளமான பல்லவியை நாயகி பாட, அதைப் பிரதியெடுத்து நாயகன் பாட என்று பாடல் நீண்டுகொண்டே செல்லும். நிரவல் இசையில் வீணைக்கும், ஒற்றை வயலினுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். தொடர்ந்து புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையில் இசைப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து, பரந்த நிலப்பரப்பாக விரியும் வயலின் இசைக்கோவை என்று அற்புதங்களை நிரப்பியிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், நதியின் மேற்பரப்பில் நழுவிச் செல்லும் மெல்லிய நீர்ப்படலத்தைப் போன்ற ஒற்றை வயலின் இசையை ஒலிக்கவிடுவார்.

பின்னாட்களில் இளையராஜா வெளியிட்ட ‘ஹவ் டு நேம் இட்’ எனும் ஆல்பத்தின் சில கூறுகளை இப்பாடலில் உணர முடியும்.

இளையராஜா பாடிய ‘கரட்டோரம் மூங்கில் காடு’ பாடல், புல்வெளிகள், ஓடைகள், ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைக் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல். கிராமிய இசைக் கலைஞனின் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் எளிய, இனிய இசையுடன் பாடல் தொடங்கும். பச்சைப் புல்வெளிகளால் போர்த்தப்பட்ட குன்றுகளில் பட்டு எதிரொலித்து, அந்த நாட்டுப்புறப் பாடகனிடமே வந்து சேரும் கணத்தில், ‘கரட்டோரம் மூங்கில் காடு…’ என்று அவன் பாடத் தொடங்குவான். இயற்கையை நேசித்துக்கொண்டே வழிப்போக்கனைப் போல் அலைந்து திரியும் அந்த கிராமிய இசைக் கலைஞன், கண்ணில் படும் எல்லா விஷயங்களையும் வியந்து பாடுவதுபோன்ற காட்சியமைப்பு. எளிய, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் என்றாலே, ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பின்னியெடுக்கும் இளையராஜா இப்பாடலில் மிகக் குறைவான இசைக் கருவிகளையே பயன்படுத்தியிருப்பார். எனினும், நகர வாசனையின் தீண்டலுக்கு அப்பாற்பட்ட தொலைதூர கிராமத்தின் அழகை வர்ணிக்கும் பாடல் வரிகளும், இளையராஜாவின் குரலும் பாடலை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும்.

நிரவல் இசையில் பூச்செடிகளை அசைத்தபடி பரவிச் செல்லும் காற்றைப் போன்ற புல்லாங்குழல் இசையை ஒலிக்கவிடுவார். தடைகளற்ற வெளியில் காற்று அலைந்து திரியும் பகுதியில் அமைக்கப்பட்ட மின்சார ட்ரான்ஸ்பார்மரிலிருந்து வரும் மெல்லிய ரீங்காரம் ஒலிக்கும். அந்த ரீங்காரத்தை ஸ்வீகரித்துக்கொண்டு பாடலைத் தொடர்வான் கிராமத்துக் கலைஞன். ‘தொட்டாப் புடிக்கும் அந்த/ துடிக்காரன் போட்ட கம்பி/ சீமையிலே சேதி சொன்னா… இங்க வந்து பேசுதில்லே’ எனும் வரிகள் ஒரு கிராமத்தானின் வியப்பை இயல்பாகப் பதிவுசெய்யும்.

‘காட்டச் சுத்தி வண்டு பறக்குது…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பாடலுக்குள் மூழ்கித் திளைக்கும் களிப்பில் ‘உய்யாரா உய்யாரா உய்யார உய்யா’ எனும் வெற்று வார்த்தைகளைப் பாடுவான் பாடகன். வரப்பில் நடந்து செல்லும் பெண்கள் அந்த வார்த்தைகளைப் பாடியபடி கடந்து செல்வதைப் போன்ற பெண் குரல்களின் கோரஸ் ஒன்றை ஒலிக்கவிடுவார் ராஜா. அதைத் தொடர்ந்து எங்கோ குழந்தை அழும் சத்தமும், அதை அதட்டும் அதன் தாயின் குரலும் ஒலிக்கும்.

குழந்தையைத் திட்ட வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒரு சிறு தாலாட்டு பாடுவான் நாயகன். ‘… அத்தை அடிச்சா அம்மா இருக்கா, அழுவாதே… அந்த அம்மாவே அடிச்சிப்புட்டான்னு அழுவுறியா… கவலப் படாதடா’ எனும் ஆறுதல் வார்த்தைகளுக்குப் பின்னர், ‘என் பாட்டு இருக்கு அழுவாதே அதக் கேட்டு ஒறங்கு பொழுதோடே’ என்று பாடும்போது இளையராஜாவின் குரலில் இருக்கும் வெம்மை அத்தனை கதகதப்பைத் தரும். அந்தத் தாலாட்டில் மயங்கி உறக்கத்தைத் தழுவுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல, நாமும்தான்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x