Last Updated : 11 Jun, 2021 03:13 AM

1  

Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

ஓர் இயக்குநரின் பிடிவாதம்!

ஏ.சி.திருலோகசந்தர்

ஐம்பதுகளின் மலையாள இலக்கியத்தில், நவீனத்துக்கான பாதையை அமைத்துத் தந்த நாவல், பி.கேசதேவ் எழுதிய ‘ஓடையில் நின்னு’. 1965-ல் அதைத் திரைப்படமாக்கினார் கே.எஸ்.சேதுமாதவன். அதில் ‘பப்பு’வாக நடிகர் சத்யன் வாழ்ந்திருந்தார். அந்த மலையாளப் படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பை பிழிந்து எடுப்பதற்காகப் பல மாற்றங்களைச் செய்தார் ஏ.சி.திருலோகசந்தர். சிவாஜியை ‘கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளியாகச் சித்தரித்த அந்தப் படம் ‘பாபு’.

1971, தீபாவளித் திருநாளில் வெளியாகி 100 நாள் கண்டது. தன்னைக் காசநோய் தின்றபோதும், வாழ்வின் கடைசி தருணம் வரை, தான் ஆதரித்தக் குடும்பத்தைக் காப்பாற்ற ரிக்‌ஷா இழுப்பார் பாபு. க்ளைமாக்ஸில் நோய் முற்றிப்போய்விட்டதைச் சித்தரிக்கும்விதமாக இருமல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. நுரையீரலே வெளியே வந்து விழுந்துவிட்டதோ என எண்ணும்விதமாக, இருமி நடித்தார் சிவாஜி.. ‘கட்.. கட்..’ என்று திருலோகசந்தர் கூறியும் கதாபாத்திரமாக உருமாறிப்போயிருந்த சிவாஜி தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அசோசியேட் இயக்குநரான எஸ்பி.முத்துராமன் ஓடிச்சென்று, சிவாஜியிடம் ஒரு சிறிய துண்டைக் கொடுத்து ‘அண்ணே ஷாட் ஓகே.. டைரக்டர் கட் சொல்லிட்டார்’ என்றார். அந்தத் துண்டை வாங்கி, வாயைத் துடைத்தார் சிவாஜி. துண்டில் உண்மையாகவே ரத்தம்!

வெட்ட மறுத்த இயக்குநர்

திருலோகசந்தர், ‘ஒத்தையில் நின்னு’ கதையை சிவாஜிக்காகத் தேர்வு செய்ய ஒரு முக்கியமான காரணம் இருந்தது. ‘பாபு’ படத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பு, திருலோகசந்தர் - சிவாஜி கூட்டணியில் வெளியான ‘தெய்வமகன்’ இந்திய சினிமாவையே கலங்கடித்திருந்தது. அதில், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகத்துக்கு மூன்று வேடங்கள். மூன்றிலும் தனக்குத் தானே போட்டியாக மாறியிருந்தார் சிவாஜி.

வங்க எழுத்தாளர் நிகர் ரஞ்சன் குப்தா எழுதிய ‘உல்கா’ என்கிற நாவல், வங்காளத்தில் முதன்முதலில் படமானது. அதன்பிறகு கன்னடம், இந்தியில் தழுவப்பட்டது. இதைத்தான் தமிழுக்கு ‘தெய்வமக’னாகக் கொடுத்தார் திருலோகசந்தர். மூலமொழி உட்பட, ஏற்கெனவே 3 மொழிகளில் படமாகியிருந்தாலும், தமிழில் தயாரான ‘தெய்வ மகன்’தான் முதன் முதலில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அவ்வளவு பெரிய பெருமையை அது அடைவதற்கு, தன்னுடைய திரைக்கதையை எப்போதும் நம்பும் ஏ.சி.திருலோகசந்தர் எனும் மாற்றில்லா ஆளுமையும் சிவாஜி கணேசன் எனும் நடிப்புப் பல்கலைக்கழகமும்தான் காரணம்.

கிராபிக்ஸ் இல்லாத அந்தக் காலத்தில் கேமராவை அசையாமல் ஒரே இடத்தில் நிலையாக வைத்து, மவுண்ட் செய்து, மூன்று தோற்றங்களையும் அடுத்தடுத்து, வெவ்வேறு ஒப்பனை, வெவ்வேறு நடிப்பு எனப் பிரித்து ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய சவால்! அதில் துல்லியம் கொண்டுவர காட்சியை திறமையாக வடிவமைத்த முதுகலைப் பட்டதாரி திருலோகசந்தர்.

மூன்று கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் இடம்பெறும் படத்தின் சிகரமான காட்சியை மிகுந்த சிரத்தையுடன் படமாக்கினார் திருலோகசந்தர். இறுதியில் எடிட்டிங் முடித்துவிட்டுப் பார்த்தால், அந்த ஒரு காட்சியின் நீளம் மட்டுமே ஏழு நிமிடங்கள். நீளத்தைக் குறைக்க வேண்டும் என்று எடிட்டர் பிடிவாதமாக நின்றார். ஆனால், அதைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்துவிட்டு, திருலோசந்தர் எடிட்டரிடம் சொன்னார்... “மூன்று பேருமே போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள்! இதில் யாரைக் குறைப்பது? நம்முடைய நடிகர் திலகம், உலகக் கலைஞனாக மாறிவிட்டதற்கு இந்த ஒரு காட்சி போதும்.. எனக்காக இந்தக் காட்சியை அப்படியே விட்டுவிடுங்கள்” என்று எடிட்டரிடம் கேட்டுக்கொண்டு கையெடுத்துக் கும்பிட்டார். அவ்வளவு மென்மையான இயக்குநர். திருலோகசந்தரின் பிடிவாதம் வீண்போகவில்லை. ‘அதைப் போன்றதொரு காட்சியமைப்போ, நடிகரோ, இனி தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை’ என்று விமர்சகர்கள் எழுதினார்கள். ‘தெய்வமகன்’ இந்திய சினிமாவில் எட்டமுடியாத உயரத்தைத் தொட்டது.

மருத்துவருக்குரிய அக்கறை

அப்படிப்பட்ட ‘தெய்வமகன்’ படத்தின் கூட்டணி, உடனடியாக மீண்டும் அமைந்தபோது, நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக, திருலோகசந்தர் தேர்ந்தெடுத்த கதைதான், சிவாஜி, ‘பாபு’வாக மாறிக்காட்டி, ரத்தம் சிந்திய ‘ஒத்தையில் நின்னு’. படப்பிடிப்பில் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் குட்டித் தூக்கம்போட்டு, ஒரே சிகரெட்டை ஆளுக்குப் பாதியாகப் புகைத்து, நடிகர் - இயக்குநர் என்கிற கிரீடங்களை உதறியெறிந்த இவர்களுடைய நட்பு மூலம், 25 சிறந்த ‘உணர்ச்சி’க் காவியங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தன.

சிவாஜி தன்னுடைய திரை வாழ்க்கையில் நடிப்பின் சிகரம் காட்டிய ‘தெய்வமகன்’ அவருக்கு உச்சமென்றால், ‘அன்பே வா’, எம்.ஜி.ஆர். எனும் சூப்பர் ஸ்டாரை அவருடைய ஃபார்முலாவிலிருந்து வெளியே இழுத்துப்போட்ட இயக்குநரின் திரைப்படம். தனது ஃபார்முலா கதையோட்டம் பற்றி சிறிதும் கவலைப்படமால் ‘நான் இந்தப் படத்தில் உங்களின் பொம்மை, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் என்னை ஆட்டி வைக்கலாம்’ என்று திருலோகச்சந்தருக்கு எம்.ஜி.ஆர். தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒரே திரைப்படம்.

ஏவி.எம்மின் கிரீடத்தில் வைரக்கல்லாக ஜொலிக்கும் அந்தப் படம் மட்டுமல்ல, திருலோகசந்தரின் ஒவ்வொரு படமும் கதாபாத்திரங்களின் ‘உளவியல்’ மீதே கட்டப்பட்டிருப்பதைக் காணமுடியும். கரணம் தப்பினால் மரணம் என்கிற ஆபத்தான கதைகளையும், கதாபாத்திரங்களையும் ஓர் உளவியல் மருத்துவருக்கே உரிய அக்கறையுடன் படைத்திருப்பார். எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், சிவகுமார் போன்ற கதாநாயகர்களை வைத்துப் படம் இயக்கியிருந்தாலும் நாயக வழிபாட்டு சினிமாவை புறந்தள்ளியவர் திருலோகசந்தர். அது மட்டுமல்ல, கதாநாயகர்களை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிய பெண் மையப் படங்களைத் தொடர்ந்து எடுத்தவர். அந்தப் பட்டியலில் இடம்பிடித்த ‘நானும் ஒரு பெண்’, ‘இரு மலர்கள்’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அவள்’, ‘பத்ரகாளி’ போன்ற படங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாஸ்டர் பீஸ்.

புரசைவாக்கத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, ஆற்காடு செங்கல்வராயன் திருலோகசந்தரை தவிர்த்துவிட்டு, தமிழ் சினிமாவின் பொற்காலத்தையும் ஏவி.எம். நிறுவனத்தின் வரலாற்றையும் யாராலும் எழுதிவிட முடியாது..

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x