Last Updated : 28 May, 2021 06:40 AM

1  

Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

ஒரே ஒரு பொய் ஓடவிடும்! - ராதாமோகன் நேர்காணல்

நம்மைச் சுற்றிலும் விதவிதமான மனிதர்கள் இருந்தாலும் நாம் பார்த்தும் பார்க்காமல் இருந்துவிட்ட கதாபாத்திரங்களை நமக்குக் கண்டுபிடித்துத் தருபவர் இயக்குநர் ராதாமோகன். கடைசியாக, ‘காற்றின் மொழி’ இவரது இயக்கத்தில் பெண்மொழி பேசியது.

சமையலறையின் அனல் அலையிலிருந்து.. பண்பலை வானொலி அறிப்பாளராக உருமாற்றம்பெறும் விஜி கதாபாத்திரத்தின் ‘ஹலோஓ...ஓ...’ என்கிற குரல் இன்னும் ரசிகர்களின் காதுகளில் ஆறுதலின் அடையாளமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. தனக்கென்று தனி பாணியும் அதில் யதார்த்தமும் பொதிந்து தரும் ராதாமோகன், முதல் முறையாக ஓடிடி திரைக்காக இயக்கியிருக்கும் படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

உணர்வுபூர்வமான ஒருவரிக் கதை, கதைக்களன், கதாபாத்திரங்களை கண்டறியும் உங்களுடைய சூட்சுமத்தை பகிருங்கள்..

அதை விளக்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு கதைக்கான பொறி தோன்றும்போதே, இது எனக்கான கதை என்று உள்ளுணர்வே சொல்லிவிடும். அதற்கு முழுமையான திரைக்கதையை நம்மால் எழுதமுடியும் என்று தொடக்கத்திலேயே தோன்றிவிடும். வேறு சில பொறிகள் நன்றாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு அவை ஒரு மில்லிமீட்டர்கூட நகராது.

உங்களுடைய படங்களில் காதலை கௌரவமான இடத்தில் வைத்திருப்பவர் நீங்கள். உறவுகளுக்கு இடையிலான பிணைப்பு, முரண்கள், மோதல்களைப் பார்க்கும்போது 60-களின் பீம்சிங், கே.எஸ்.ஜி. போன்ற இயக்குநர்களின் நீட்சி என உங்களைக் கூறலாமா?

அவர்கள் செய்த சாதனைகளின் உயரமே வேறு. சிலருக்குத் துப்பறியும் கதைகளும் ஆக்‌ஷன் கதைகளும் பிடிப்பதுபோல, எனக்கு, உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களையும் மோதல்களையும் பேசும் கதைகள் பிடிக்கும். சிறுகதை, நாவல், திரைப்படம் என அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றில் மூழ்கிவிடுவது பிடிக்கும். பள்ளிக் காலத்தில், உறவுச் சிக்கல்களும் முரண்பாடுகளும் மிகுந்திருக்கும் தி.ஜானகிராமனின் நாவல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பின்னாளில், கே.பாலசந்தரின் படங்கள் ஏற்படுத்திய தாக்கமும் இணைந்துகொண்டது.

வாழ்க்கையில் இயல்பாக இழையோடும் நகைச்சுவைத் தருணங்களை எப்படி ஒரு திரைக்கதைக்குள் பொருத்துகிறீர்கள்? கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்ற நினைத்திருக்கிறீர்களா?

கஷ்டமான நாட்கள், கஷ்டமான கால கட்டங்களைக் கடக்க உதவுவதே மனிதர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுதான். வீடு, வேலை செய்யும் இடம் தொடங்கி நிஜவாழ்க்கையில் கண்ணியமான நகைச்சுவை இயல்பாகப் பிறக்கும் சூழ்நிலைகள் நிறைய..! ஆனால், பலசமயம் அவற்றை நாம் நகைச்சுவை என்று உணராமல் கடந்து வந்துவிடுகிறோம். நகைச்சுவையை கதைக்கு வெளியே தனி ‘ட்ராக்’காகப் பயன்படுத்துவதில் எனக்கு விரும்பமில்லை.

அதுவும் கூட வழக்கொழியும் கட்டதுக்கு வந்துவிட்டது. மனிதர்களும் கதாபாத்திரங்களும் வேறில்லை எனும்போது ஒரு திரைக்கதையில் வரும் கதாபாத்திரங்களிடமும் நகைச்சுவையும் இருக்கும்தானே? இக்காட்டான சூழ்நிலையிலும்கூட நகைச்சுவையும் வெளிப்படும்தானே? கிரேஸி மோகன் சார், மௌலி சார், சோ சார் போன்ற ஆளுமைகளின் நகைச்சுவை பாணிகளும் ஆக்கங்களும் எனக்குப் பிடித்தமானவை. கிரேஸி மோகன் சாருடன் இணைந்து பணியாற்ற விரும்பியிருக்கிறேன். ஏனோ அது அமையாமல் போய்விட்டது.

தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சியூட்டிய பல படங்களைத் தந்த பன்முக ஆளுமை வீணை எஸ். பாலசந்தர். அவருடைய ‘பொம்மை’ என்கிற படத்தின் அதே தலைப்பில் ஒரு படத்தை இயக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.. அது பற்றி கூறுங்கள்..

அது எனக்கே ஒரு மாறுதலான படம்; சவாலும் கூடத்தான். இதிலும் உணர்வுகள்தான் பிரதானம் என்றாலும் அவை வேறொரு தளத்தில் இருக்கும். நான் இதுவரை செய்து வந்த படங்களின் வகையிலிருந்து விலகி வேறொரு வகைமையில் கொடுக்க முயன்றிருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா கதாநாயகன். எஸ்.ஜே.சூர்யாவும் நீங்களுமா என்று பலரும் ஆச்சர்யமாகக் கேட்டார்கள். ஆனால், அந்தக் கதாபாத்திரத்துக்கு அவர் மட்டுமே பொருத்தமானவர். இது திரையரங்குக்காக எடுப்பட்டுவரும் படம். பெரும்பகுதி வேலைகள் முடிந்துவிட்டன.

‘மலேஷியா டு அம்னீஷியா’ என்கிற தலைப்பு சொல்லும் கதையை விட, ட்ரைலர் சொல்லும் கதையை விட, படத்தின் கதையை நீங்கள் சொல்வதே சரியாக இருக்கும்...

இது முழுக்க முழுக்க ஓடிடி தளத்துக்காகவே எடுக்கப்பட்ட படம். ‘உப்புக் கருவாடு’ படத்துக்குப் பிறகு முழு நீள நகைச்சுவைப் படம். கரோனா பெருந்தொற்றின் துயரச் செய்திகளைக் கேட்டுக் கேட்டு கடும் மன அழுத்தத்தில் இருக்கும் பார்வையாளர்கள் குடும்பத்துடன் மனம் விட்டுச் சிரிப்பதற்கான ஒரு படம். மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இளைஞன். அவனுக்கு ஒரு ஆத்ம நண்பன். நாயகன் அல்ப விஷயம் ஒன்றுக்காக சொன்ன ஒரு பொய் விபரீதத்தில் முடிந்துவிடும். பொய் என்று சொல்லத் தொடங்கிவிட்டால் அவற்றின் தொடர் சங்கிலி பாம்புபோல் சுற்றிக்கொள்ளும். அதிலிருந்து வெளியேறத் துடிக்கும் கதாநாயகனின் பிரயத்தனம்தான் கதை.

பிரகாஷ் ராஜ், இளங்கோ குமாரவேல், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், போன்றவர்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறீர்களே...

எல்லோருமே எனக்குச் சிறந்த நண்பர்கள். அபாரமான நடிப்பாற்றல் கொண்ட கலைஞர்கள். தங்கள் மீது குத்தப்பட்ட ‘டைப் காஸ்ட்’லிருந்து வெளியே வந்தவர்கள். நானும் அவர்களுக்குரிய கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதேபோல், இவர்களில் யாராவது ஒருவர் எனது படங்களில் இல்லாமல் போனாலும் ‘என்ன ஆச்சு?’ என்று அக்கறையாக விசாரிக்கும் அளவுக்கு பார்வையாளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த எதிர்பார்ப்பின் பின்னணியில் அவர்களுக்காக எழுதப்படும் கதாபாத்திரங்கள் வெற்றியாக அமைந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

‘மலேஷியா டு அம்னீஷியா’வில் வைபவ் - வாணி போஜன் ஜோடி எப்படி அமைந்தது?

கதைக்கு வைபவ் பக்காவாகப் பொருந்துவர் என்று நான்தான் தேர்வு செய்தேன். பின்னர், இந்தப் படத்துக்கு அவரே தயாரிப்பாளராக மாறியபோது ‘கதாநாயகியாக வாணி போஜனைக் கேட்டுப் பார்க்கலாமா?’ என்றார். எனக்கு அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தது. கதையைக் கேட்டு, விருப்பத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டார், தமிழ் தெரிந்த, மிகத் திறமையான, வசீகரமான நடிகை. அவரைப் போலவே கருணாகரனும் எம்.எஸ்.பாஸ்கரும் படத்துக்கு மேலும் இரண்டு தூண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x