Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM
பொதுமுடக்கத்தால் வீடுகளில் தனித்திருப்போர் அவ்வப்போது தமக்குள்ளாகவும் தனிமையில் விழ வாய்ப்பதுண்டு. தனிமையின் அலையடிக்கும் இந்தத் அனத்தல்களுக்கு அப்பால், சுயத்தை உணரும் விகசிப்பு, அக ஆய்வு செய்துகொள்ளும் தருணங்களும் நிகழ்வதுண்டு. இப்படி நினைவுகளின் வெளியில் பெண்டுலமாய் ஊசலாடு வதில் அலாதி விருப்பம் கொண்டோர், நினைவுகளை அறிவியல் புனைவில் தோய்க்கும் ‘சோலோஸ்’ என்கிற அமேசான் பிரைம் வீடியோவின் அமெரிக்க ஆந்தாலஜியை நின்று நிதானமாக ரசிக்கலாம்.
தலா அரைமணியில் நீளும் ஏழு குறும்படங்கள் இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்றிருக்கின்றன. பொதுமுடக்கப் பின்னணியில் அதன் வரையறைக்கு உட்பட்டு ஒவ்வொன்றையும் வெவ்வேறு தொனிகளில் திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார்கள். மனிதப் பேராசையில் நீளும் மரபியல்சோதனை, காலவெளிப் பயணம், கோள்களைக் கடக்கும் பிரபஞ்ச ஆய்வு, மனிதனின் எந்திர நகல்கள், நினைவுகளை பிரதியெடுப்பதன் வழியே இறப்பை ஏமாற்றும் முயற்சிகள் என அடுத்தக்கட்ட அறிவியல் சாத்தியங்கள் பலவற்றின் பின்னணியில் கதைகள் விரிகின்றன.
லியா: வீட்டின் நிலவறையில் வருடக்கணக்கில் தனிமையில் அடைந்திருந்து, ஆயிரத்துக்கும் மேலான படிப்பினைகளின் வழியே, தனது எதிர்காலப் பிரதியை தொடர்புகொள்ள முயற்சிக்கும் இளம் அறிவியல் ஆய்வாளர் லியா. இடையே மருத்துவ பராமரிப்பில் இருக்கும் தாயின் நோய் தீர்க்கவும் உறுதிகொள்கிறார். ஐந்தாண்டு மூத்த எதிர்காலப் பிரதியுடன், ஐந்தாண்டு இளைய கடந்தகால பிரதியையும் ஒரு சேர சந்திக்கும் நிகழ்கால லியா, தனது நோயுற்ற தாய்க்காக எதிர்பார்க்காத முடிவை தீர்மானிக்கிறார். முக்காலத்தின் ஒரே நபர்கள் வாக்குவாதத்தில் முட்டிக்கொள்ளும் காட்சிகளில் லியா கதாபாத்திரத்தை ஏற்றுள்ள ஆன் ஹாத்வே வாயடைக்கச் செய்கிறார்.
டாம்: புற்றுநோயால் இளம் வயது மரணத்தை எதிர்கொள்ளத் தயாரான டாம், குடும்ப நலனுக்காக தன்னுடைய எந்திர நகலை பெரும் செலவில் தருவிக்கிறான். அறிமுகமாகும் அந்த நகலுடன் தனது தாய், குழந்தைகள் குறித்த நினைவுகளை உணர்வுபூர்வமாய் ‘தன்னிடம்’ பகிர்ந்துகொள்கிறான். அதிருப்தியில் தொடங்கும் உரையாடல் மெல்ல நெகிழ்ந்து முறுவலிக்கவும், உடையவும் செய்கிறது.
பெக்: புதிரான பிரபஞ்ச ஆய்வில், தனியாளாக ஒருவழி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் 71 வயது மூதாட்டி பெக். விண்வெளி ஓடத்தின் ஒரே துணையான வழிகாட்டும் குரலுடன் உரையாடுகிறார். தத்துப் பிள்ளையாக கண்டடைந்த பெற்றோரை பிரிந்தது, கூச்ச சுபாவத்தால் நேசத்தை பறிகொடுத்தது என இளமையின் நினைவுகளுடன், தன்னுடைய இருப்பு, சக மனிதர்களால் கண்டுகொள்ளப்படாத முதுமையாக கடந்துசெல்லும் அவலத்தையும் சொல்கிறார்.
சாஷா: அடுத்தடுத்த பெருந்தொற்றுப் பரவல் அலைகளால் ஆண்டு கணக்கில் முடங்குகிறார்கள் தற்காலத் தலைமுறையினர். அவர்களைப் பீடிக்க வாய்ப்புள்ள மிகப்பெரும் உளவியல் பிரச்சினையை ஆராய்கிறது ’சாஷா’. வைரஸ் தாக்குதலிலிருந்து உயிர் தப்ப, தனது சொத்தை இழைத்து வனாந்தர வீட்டில் தனிமை சிறை வைத்துக்கொள்கிறாள் சாஷா. அவளுக்கு உதவியாக இருக்கும் செயற்கை நுண்ணறிவுக் குரல், வெளியுலகம் இயல்புக்கு திரும்பிவிட்டதாக அறிவுறுத்திய பின்னரும் 23 வருடங்கள் பழகிய தனிமையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள முடியாது தவிக்கிறாள் சாஷா.
ஜென்னி: சிறகுகள் முளைத்த சித்தரிப்புடன் அழகு தேவதையாக அறிமுகமாகிறாள் ஜென்னி. எவருக்கோ, எதன்பொருட்டோ காத்திருக்கும் இடைவெளியில் நம்முடன் கலகலப்பாக பேசுகிறாள். மனித மனத்தின் கசடுகளையும் மகத்துவத்தையும் ஒரு சேர பரிமாறும் அந்தத் தனி உரையாடலின் முடிவில் ஜென்னியின் துயரமும், நினைவுகளின் மீதான அறிவியல் தாக்குதலையும் உருக்கமாய்ச் சொல்கிறார்கள்.
நேரா: தனியாக வாழும் ஒரு நிறைமாத கர்ப்பிணி. அவசரகால தகவல் தொடர்புக்கும் வழியின்றி பொதுமுடக்கம் மேலும் முடக்கிப் போடுகிறது. அதிநவீன அறிவியலின் துணையால் சுயமாய் கருத்தரித்த அப்பெண், பிரசவத்தையும் தனியாளாய் சந்திக்கிறாள். செயற்கைக் கருவுறுதலின் விநோதப் பிழையால், பிறந்த மகனிடம் அவள் சந்திக்கும் விசித்திரங்களே கதை. மனித எதிர்பார்ப்புகளை ஊடறுக்கும் அறிவியல் அபத்தங்களை பயமுறுத்தலுடன் பகடி செய்கிறது ‘நேரா’.
ஸ்டூவர்ட்: டிமென்சியா நோயின் பாதிப்பில் நினைவுகள் தேயும் முதியவரை அரசின் சுகாதார பணியாளர் என்ற அறிமுகத்துடன் இளைஞன் ஒருவன் சந்திக்கிறான். கடலலைகளின் முன்னிலையில் தொடரும் அவர்களின் உரையாடலில் அதுவரையிலான அத்தியாயங்களை பிணைத்திருக்கும் சுவாரசிய இழை வெளிப்படுகிறது. கூடவே, எதிர்காலத்தில் நினைவுகளை பெரும் பொக்கிஷமாய் பாதுகாப்பதும் திருடக் கொடுப்பதுமான சாத்தியங்களையும் விவரிக்கிறது.
பெரும்பாலான அத்தியாயங்கள், ‘ஒரே இடத்தில் அடைத்திருக்கும் ஒற்றை நபர்கள்’என எழுத்திலும் நடிப்பிலும் ஏக சவால்கள் நிறைந்திருப்பவை. சலசலவென பேச்சு ஓட்டத்திலே காட்சிச் சட்டகங்களை நகர்த்தி அலுப்பை தவிர்ப்பதற்கான முயற்சியில் மோர்கன் ஃப்ரிமேன், ஆன் ஹாத்வே, ஹெலென் மிரன், ஊசோ அடுபா, அந்தோனி மேக்கி, கான்ஸ்டன்ஸ் வூ, டான் ஸ்டீவென்ஸ், நிகோல் பெகாரி என எம்மி முதல் ஆஸ்கர் வரை விருதுகளை குவித்தவர்களை பயன்படுத்தி கதாபாத்திரங்களில் பொருத்தியிருக்கிறார்கள்.
பிறரோடு நம்மையும், சுயத்தோடு தனிநபரையும் பிணைத்திருப்பவை அவரவர் நினைவுகளே. நன்மை செய்யும் பெருந்தொற்றென நம்மை பீடித்திருக்கும் இந்த நினைவுகளே நாம் உயிர்த்திருப்பதையும் உறுதி செய்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT