Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM
ஆஸ்கர் திருவிழா முடிந்துவிட்டது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பிரத்யேக ஆவணப்படங்களின் வரிசை’யில் கடந்த செப்டம்பரில் வெளியான ’மை ஆக்டோபஸ் டீச்சர்’ 93-வது ஆஸ்கர் திருவிழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. முன்னதாக பிரிட்டனின் ‘பாஃப்டா’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்க கடல்சார் உயிரினங்களுக்கான செயற்பாட்டாளர் க்ரைக் போஸ்டர். ஆழ்கடலில் மூழ்கி ஆய்வுசெய்பவருமான இவர், பல்வேறு ஆவணப்படங்களிலும் பங்கேற்றிருக்கிறார். பால்ஸ் விரிகுடாவில் கடல் அலை தாலாட்டும் தனது வீட்டிலிருந்து கடற்பூண்டு செறிந்த ஆழ்கடலுக்குள் அன்றாடம் மூழ்கித் திரும்புவது அவரது வழக்கம். அப்படியான ஆழ்கடல் தரிசனத்தில் ஒருநாள் சாதாரண ஆக்டோபஸ் ஒன்றை எதிர்கொள்கிறார். வழக்கமான கடலடி உயிரினங்களைவிட அந்த ஆக்டோபாஸ் அவரைச் சற்று அதிகமாக ஈர்க்க நெருங்கிப் படம்பிடிக்கவும் தொடங்குகிறார்.
சக ஆக்டோபஸ்கள் ஏதும் அருகில் இல்லாதபோதும் அந்த ஒற்றைப் பெண் ஆக்டோபஸ் தனக்கான உலகத்தில் உற்சாகமாய் வலம் வருகிறது. கிளிஞ்சல் ஓடுகளை உடல் மேல் தரித்துக்கொண்டு இரைக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறது. ஓய்ந்த பொழுதில் தனது இரையான மீன் குஞ்சுகளுடன் போக்குக்காட்டி விளையாடுகிறது. தன்னை இரையாக்க முயலும் பைஜமா சுறாவிடமிருந்து உயிர் தப்புவதற்காக அதன் முதுகில் தொற்றுவது வரை பல வித்தைகளைச் செய்கிறது. சுறாவால் ஒரு கரம் துண்டாக அது வளரும் வரை சோர்ந்திருக்கிறது. இப்படி அத்தனையையும் அருகிலிருந்து ரசிக்கும் க்ரைக் என்கிற மனிதனை அவ்வப்போது கண்டுகொள்ளவும் செய்கிறது. அச்சம் தணிந்த நாளில் நெருங்கி அவர் கரம்தொட்டு விளையாடவும் செய்கிறது.
ஒரு நாள் எங்கிருந்தோ வரும் ஆண் ஆக்டோபஸ் உடன் நெருங்கி முயங்குகிறது. குஞ்சுகள் பொரிக்கும் வரை உடல் இளைத்து பாறையிடுக்கில் தவமிருக்கிறது. பின்னர் தனது கடமை முடிந்தது என்பதுபோல விட்டேத்தியாய் எதற்கோ காத்திருக்கிறது. இம்முறை சுறாவைக் கண்டதும் ஓடிப் பதுங்காது இயற்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்து மறைகிறது. அறிவியல்பூர்வமான ஆவணப்படமாக அன்றி முழுநீள உணர்வுபூர்வமான திரைப்பட உணர்வையே ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ தருகிறது. மென் மனமுடையவர்களைக் கலங்கச் செய்யும் காட்சிகளும் வருகின்றன.
சுமார் ஒரு வருட காலம் தொடர்ச்சியாய் மேற்கொண்ட படப்பதிவுகளைத் தொகுத்து ஒன்றரை மணி நேர ஆவணப்படமாகச் செதுக்கி இருக்கிறார்கள். க்ரைக்குடைய மனைவியான ஸ்வாதி தியாகராஜன் தயாரிப்பில் இணைந்திருக்கிறார். ஸ்வாதி சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர். அந்த வகையில் இவ்வருட ஆஸ்கர் அங்கீகாரப் பட்டியலில் இந்தியர் ஒருவர் பெயரும் சேர்ந்திருக்கிறது. க்ரைக் - ஸ்வாதி தம்பதியர் அட்லாண்டிக் ஆழ்கடல் உயிரினங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறார்கள். ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ ஆவணப்படமும் அந்த வரிசையில் உரிய திரைப்படக் குழு உதவியுடன் உருவாகித் தற்போதைய ஆஸ்கர் வரை சாதித்துள்ளது.
ஓடிடியில் ஆஸ்கர் படைப்புகள்
இரண்டாம் அலைப் பெருந்தொற்றுக் காலத்தில், பெரும்பாலான ஆஸ்கர் விருது படைப்புகளை வீட்டிலிருந்தே கண்டுகளிப்பதற்கும் ஓடிடி தளங்கள் உதவுகின்றன.
நெட்ஃபிளிக்ஸில்: ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ (My Octopus Teacher) - சிறந்த ஆவணப்படம், ‘டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two Distant Strangers) - சிறந்த குறும்படம், ‘இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ’ (If Anything Happens I Love You)- சிறந்த அனிமேஷன் குறும்படம், ‘மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம்’ (Ma Rainey's Black Bottom) - சிறந்த ஆடை வடிவமைப்பு,சிறந்த ஒப்பனை சிகை அலங்காரம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்ற படங்களைக் காணலாம்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில்: ‘நோமட்லேண்ட்’ (Nomadland) - சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (சூலோ ஜாவோ), சிறந்த நடிகை ( ஃபிரான்சஸ் மெக்டார்மன்ட்), ‘சோல்’ (Soul) - சிறந்த அனிமேஷன் திரைப்படம், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்ற படங்களைக் காணலாம்.
யூட்யூப் சமூகக் காணொலியில்: ‘கொலேட்டி’ (Colette) - சிறந்த ஆவணக் குறும்படத்தை இலவசமாகக் காணலாம். யூதாஸ் அன்ட் த பிளாக் மெசய்யா (Judas and the Black Messiah) - சிறந்த பாடல் (ஃபைட் ஃபார் யூ) மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகர் (டேனியல் கலூயா) விருது பெற்ற படத்தைக் கட்டணம் செலுத்திக் காணலாம்.
அமேசான் பிரைம் வீடியோவில்: ‘சவுண்ட் ஆஃப் மெட்டல்’ (Sound of Metal) - சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலித்தொகுப்புக்கான விருது பெற்ற படத்தைக் காணலாம். அதேபோல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதுபெற்ற டெனட் (Tenet), சிறந்த சர்வதேசத் திரைப்படத்துக்கான விருதை வென்ற டென்மார்க்கின் ‘அனதர் ரவுண்ட்’ (Another Round), சிறந்த குணச்சித்திர நடிகைக்கான (யு-ஜங் யூன்) விருதை வென்ற ‘மினாரி’ (Minari), சிறந்த நடிகர் (ஆண்டனி ஹாப்கின்ஸ்) மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை விருதுகளை வென்ற ‘த ஃபாதர்’ (The Father), சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதை வென்ற ‘பிராமிசிங் யங் வுமன்’ (Promising Young Woman) ஆகிய திரைப்படங்களைக் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT