Published : 11 Dec 2015 11:50 AM
Last Updated : 11 Dec 2015 11:50 AM
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தப் பெரு மழையால் திரண்டுவந்த தண்ணீரால் நிரம்பி வழிந்தது செம்பரம்பாக்கம் ஏரி. முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஏரியின் வெள்ள நீர், அடையாற்றின் கரைகளை மீறி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வெள்ளத்தையே கண்டறியாத கரையோர வசிப்பிடங்களை நள்ளிரவில் புகுந்த வெள்ள நீர் ஆக்கிரமிப்பு ராணுவம்போல் முற்றுகையிட்டது. மக்கள் போகுமிடமின்றி வீடுகளில் சிறைப்பட்டனர்.
தண்ணீர், பால், உணவு போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மக்கள் அல்லல்பட்டார்கள். கூவம் ஆற்றிலும் இதே நிலைதான். சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தின் மேலே தண்ணீர் ஓடியது. அந்தக் காட்சிகளின் தொகுப்பைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது ஹாலிவுட் படத்தை அது மிஞ்சிவிட்டது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சும்மா சொல்லக் கூடாது, நமது தொலைக்காட்சி அலைவரிசைகளும் தங்களது மொத்த வித்தையையும் காட்டி ஒரு திகில் பட எஃபக்டைக் கொடுத்தன. இப்படிப்பட்ட பேரழிவுகளை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்…
நோவா காத்த உயிர்கள்
நோவா என்னும் அமெரிக்கத் திரைப்படம் 2014-ம் ஆண்டில் வெளியானது. டாரன் அரனொவ்ஸ்கி இயக்கிய இந்தப் படம். உலகம் அதி பயங்கர வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்தபோது, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நோவா, ஒரு பேழையை (கப்பலை) உருவாக்குகிறார். அதில் விலங்குகள் பறவையினங்களின் ஒரு ஜோடி உயிர்களைக் காப்பாற்றி வைத்து உலகில் உயிர்கள் அழியாமல் பார்த்துக்கொண்டார் என்பது பைபிளில் வரும் கதை. அதையே திரைக்கதையாக்கியிருக்கிறார் அரனொவ்ஸ்கி, பள்ளியில் படித்த காலத்திலேயே அவரைக் கவர்ந்திருக்கிறது இந்த பைபிள் கதை.
13 வயதில் உலகத்தின் அழிவை நோவாவின் கண்களால் பார்த்து, கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் அவர். படம் பண்ணும்போது நோவாவின் கதையைத் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதைப் படமாக எடுத்து வெளியிட்டார் அவர். ரஸ்ஸல் குரோ நோவாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். சுமார் 125 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டபோது அது வெளியான திரையரங்கில் வெள்ளம் பாய்ந்தது. திரையரங்கின் ஐஸ் மெஷினில் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டது.
புயலில் சிக்கிய கப்பல்
‘டிராய்’ படத்தை இயக்கிய வோல்ஃப்கேங் பீட்டர்ஸன் இயக்கி, 2000-ல் வெளியான திரைப்படம் ‘த பெர்ஃபெக்ட் ஸ்ட்ராம். 1991-ம் ஆண்டில் வட அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் புயலின்போது வட அட்லாண்டிக் கடலில் ஆண்ட்ரியா கெய்ல் என்னும் மீனவப் படகில் மாட்டிக்கொண்ட மீனவர்களைப் பற்றிய கதை இந்தப் படம். பிடித்த மீன்களோடு புயலையும் கடுமையான அலைகளையும் துணிச்சலோடு எதிர்கொண்டு கரைக்குத் திரும்பும் நம்பிக்கையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் அதனால் ஏற்பட்ட போராட்டமுமே இந்தப் படம்.
இயக்குநர் மிருகங்களை வதைக்கக் கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட எந்த மீனும் இயற்கையான மீன் அல்ல. அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஜார்ஜ் க்ளூனி இந்தப் படத்தில் கேப்டன் பில்லி டைன் என்னும் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆண்ட்ரியா கெய்ல் கப்பல் உரிமையாளர்கள் தங்களிடம் உரிமை பெறாமல் தங்கள் பெயரைப் பயன்படுத்தியதாக படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்கள்.
சுனாமியில் சிதறிய குடும்பம்
இந்தியப் பெருங்கடலில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுனாமி ஏற்பட்டது. அப்போது தாய்லாந்தின் கடற்கரை நகருக்கு விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த மரியா பெலான் என்பவரது குடும்பம் சுனாமியில் சிக்கி அவதிப்பட்ட கதையை ‘த இம்பாஸிபிள்’ என்னும் பெயரில் படமாக்கியிருந்தார் இயக்குநர் யுவான் அண்டோனியோ பயோனா. உண்மைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மரியா இந்தப் படத்தின் படமாக்கல் முழுவதுமே உடனிருந்திருக்கிறார். நடந்த சம்பவத்தை அவர் விவரித்ததன் அடிப்படையிலே படம் காட்சியாக்கப்பட்டிருந்தது. ஆழிப் பேரலை கடற்கரையின் ரிஸார்டைப் புரட்டிப் போட்ட காட்சிகள் அனைத்துமே ஒரு முறைதான் படமாக்கப்பட்டன. அந்த செட்டை அமைக்கச் செலவு அதிகமானதால் மறுபடியும் படமாக்க முடியவில்லை.
பூமியைத் தாக்கும் நட்சத்திரம்
பேர்ல் ஹார்பர், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற பல கலக்கல் ஹாலிவுட் படங்களின் மூலம் நன்கு அறியப்பட்ட மெக்கேல் பே இயக்கிய படம் ‘ஆர்மகெடான்’. பூமியின் மீது சிறிய கோள் ஒன்று மோத உள்ளது என்பது நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குத் தெரிய வருகிறது. அந்தத் தாக்குதலிலிருந்து புவிப் பந்தைக் காப்பாற்ற விண்வெளி வீரர் குழு ஒன்றை நாசா அனுப்புகிறது. இந்தப் பின்னணில் பரபரவென நகரும் படம்தான் இது. சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம், நல்ல விமர்சனங்கள், அட்டகாசமான வசூல் என்று எல்லா விதங்களிலும் சாதித்த இந்தப் படங்கள் தவிர ‘டீப் இம்பாக்ட் (1998), ‘எர்த்குவேக் (1974), அவுட்பிரேக் (1995), த ஹேப்பனிங் (2008), 2012 (2009), வோல்கனோ (1997), த டே ஆஃப்டர் டுமாரோ (2004), ஏர்ஃபோர்ட் (1970), டுவிஸ்டர் (1996)… என அநேக படங்கள் பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
நம்பிக்கை தரும் கதைக்களம்
இயற்கைச் சீற்றங்களால் பேரழிவுக்குள்ளாகும்போது வாழ்க்கை என்றால் என்னவென்று உணர நாம் முற்படுகிறோம். வாழ்க்கை குறித்த விடை தெரியாத எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் அறிய நாம் விரும்புகிறோம். அப்படியொரு வாய்ப்பை இயற்கைச் சீற்றங்கள் நமக்கு வழங்குகின்றன. அவற்றால் ஏற்படும் பேரழிவு அதோடு சம்பந்தப்படாதவர்களுக்கும் வாழ்வு குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. நாம் தப்பிவித்துவிட்டோம் நம்மை இறைவன் காப்பாற்றிவிட்டார் என அவர்கள் நம்புகிறார்கள்.
அதனால்தான் பேரழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களை உலக அளவில் ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அவையும் பெரிய அளவிலான வெற்றியைப் பெறுகின்றன. அத்தகைய படங்களைப் பார்க்கும்போது, அவற்றின் கதாபாத்திரங்கள் படும் துன்பத்தை ஒப்பிடும்போது, நமது துயரம் அதைவிடப் பெரிதல்ல என்னும் எண்ணத்தையும் பாதுகாப்பே இல்லாத இந்த உலகத்தில் நமக்குச் சிறிதளவாவது பாதுகாப்பு கிடைக்கிறதே என்ற எண்ணத்தையும் அவை தருகின்றன என்கிறார் அமெரிக்க உளவியல் பேராசிரியர் டாக்டர் ஜூலி நோரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT