Published : 12 Jun 2014 12:00 AM
Last Updated : 12 Jun 2014 12:00 AM

‘வில்லனாக நடிக்க விருப்பமில்லை’

‘மஞ்சப்பை’ படத்தில் தனது பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் ராஜ்கிரண். அந்த சந்தோஷத்தில் தனது மகனுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம்.

‘மஞ்சப்பை’ படத்தில் நீங்கள் ஏற்று நடித்த தாத்தா வேடம் உங்களுக்கு எந்த அளவுக்கு திருப்தியைத் தந்துள்ளது?

நான் ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் நடித்த பிறகு எங்கே சென்றாலும், “அப்பா.. நல்லாயிருக்கீங்களா..” என்று சொந்த அப்பாவை விசாரிப்பதைப் போல என்னை விசாரிப்பார்கள். அந்தப் படத்தில் இருந்ததைப் போல ஒரு அப்பா கிடைக்க மாட்டாரா என்று பலரும் ஏங்கியிருக்கிறார்கள். இப்போது ‘மஞ்சப்பை’ படத்தை பார்த்துவிட்டு, இப்படி ஒரு தாத்தா நமக்கு கிடைக்க மாட்டாரா என்று பலரும் ஏங்குகிறார்கள். ரொம்ப பேர் என்னை அவங்களோட சொந்த தாத்தாவாகவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. பலர் என்னை போனில் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். அந்த அளவிற்கு இந்தப் படமும் என் வேடமும் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

அப்பா, தாத்தான்னு இப்படி வித்தியாசமான கேரக்டர்கள் உங்களுக்கு எப்படி அமையுது?

நான் ஒரு படத்தில் நடிக்கும்போது, எந்த எதிர்பார்ப்போடும் நடிக்க மாட்டேன். இயக்குநர்கள் சொல்வது போல நடிப்பேன். அவ்வளவுதான். இயக்குநர்கள் அந்த பாத்திரங்களை என்னை நினைத்து உருவாக்குகிறார்கள். ‘நந்தா’ படத்தில் இயக்குநர் பாலா என்னிடம் என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டார்.அதேபோல் ‘பாண்டவர் பூமி’, ‘தவமாய் தவமிருந்து’ படங்களில் சேரன் என்னிடம் இருந்து என்ன வேண்டுமோ எடுத்துக்கொண்டார். அதே மாதிரி தான் எல்லாப் படங்களுமே. இப்படி என்னை வைத்து படம் செய்யும் இயக்குநர்கள் எல்லாருமே, தேவை என்ன என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்துவிடுகிறார்கள். நான் அதை அப்படியே உள்வாங்கி நடித்துக்கொடுக்கிறேன்.

எதன் அடிப்படையில் நீங்கள் படங்களைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். அதுல நல்லது சொன்னாலும் எல்லார்கிட்டயும் போய்ச் சேரும், கெட்டது சொன்னாலும் எல்லார்கிட்டயும் போய்ச் சேரும். இந்த ஊடகத்தில் எனக்குன்னு ஆண்டவன் ஒரு இடத்தைக் கொடுத்திருக்கான். அப்போ நான் அதை சரியா பயன்படுத்திக்கணும். சும்மா ஆட்டம், கேலி, கூத்து அதுக்கெல்லாம் போகாமல் ஒரு நல்ல கருத்துச் சொல்ல பயன்படுத்திக்கணும்னு நினைப்பேன். அதுதான் என் கொள்கை. முதல்ல இயக்குநர்கள்கிட்ட கதையைக் கேட்பேன். என் கொள்கைக்கு ஏற்றதா இருக்குதான்னு பார்ப்பேன். அப்படி இருந்தா உடனே ஓ.கே சொல்லிடுவேன்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்கு நரா இருந்த ராஜ்கிரண் காணாமல் போய் விட்டாரா?

அதுக்கு நல்ல கதை அமையணும். நான் முதலில் இயக்கி, தயாரிச்சு நடிச்சபோது கூட ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம்தான் கொடுத்தேன். 1991ல் ‘என் ராசாவின் மனசிலே’, 1993ல் ‘அரண்மனை கிளி’, 1995ல் ‘எல்லாமே என் ராசாதான்’. அவ்வளவு நேரம் எடுத்து பண்ணினதால்தான் எல்லாமே வெள்ளி விழாப் படங்களா கொடுக்க முடிந்தது. இதுவரைக்கும் யாருமே என்னோட சாதனையை முறியடிக்கலை. இப்போ தொடர்ந்து நடிப்பதால் இயக்குவதற்கு நேரம் இல்லை. ரெண்டு கதைகள் தயாரா வைச்சிருக்கேன். ஒன்று கணவன் மனைவிக்குள் நடக்கும் கதை, மற்றொன்று ‘மலைக்கள்ளன்’. சமூக மாற்றம் பற்றிய கதை. கூடிய விரைவில் ஆரம்பிப்பேன்.

இவ்வளவு வருஷமா சினிமாத் துறையில் இருக்கீங்க. ஏன் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை?

நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு வரலை. பஞ்சம் பிழைக்க வந்தேன். திரைப்பட விநியோக அலுவகத்தில் வேலை பார்த்தபோது தினமும் 4 ரூபாய் 50 காசு சம்பளம். அந்த வேலையில் உண்மையாக இருந்ததால் பதவி உயர்வு கிடைத்தது. தனியா திரைப்பட விநியோகம் பண்ணப் போறேன்னு சொன்ன உடனே என் முதலாளி 6000 ரூபாய் கொடுத்தார். அதை வைச்சு சினிமா விநியோகம் பண்ணி தயாரிப்பாளரா, இயக்குநரா வளர்ந்தேன். எனக்கு சுத்தமா நடிக்கவே வராது.

பாசம், பழி, பக்தி, உணர்ச்சி, வீரம், ரோஷம் இது எல்லாம் இயற்கையாவே எல்லா மனிதனுக்குள்ளயும் இருக்கிற விஷயங்கள். இயக்குநர்கள் சொல்கிறபோது அந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டறதோட சரி. நடிக்க தெரிந்தவர்களால் மட்டுமே வில்லனாக நடிக்க முடியும். வில்லனாக நடிப்பது ரொம்ப கஷ்டம். அதோட நடிப்பிற்கு கூட வில்லனாக எனக்கு விருப்பம் இல்லை

24 வருடங்களில் கம்மியான படங்கள் தான் பண்ணி இருக்கீங்க. ஷுட்டிங் இல்லாத நேரத்தில் என்ன பண்ணுவீங்க..?

எனக்கு 15 வருஷத்திற்கு முன்பு ஒரு குருநாதர் கிடைத்தார். அதற்கு பின்பு கல்யாணம், குழந்தை என்று என்னோட வாழ்க்கை மாறிவிட்டது. சினிமா ஷுட்டிங் இல்லாத நாட்களில் நான் வீட்டில்தான் இருப்பேன். என் மகன் நயினார் முகம்மதுடன் விளையாடுவதுதான் என் பொழுதுபோக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x