Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

ஓடிடி உலகம் - ‘மதில்’ மேல் புலி

சர்வ அதிகாரங்களும் பொருந்தியவர்களுடன், அவை எதுவும் வாய்க்கப் பெறாத சாமானியனால் மோத முடியுமா? தனது உரிமைக்காக சாமானியன் வெகுண்டெழும்போது அவனால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறது ‘மதில்’ திரைப்படம். தமிழ் புத்தாண்டையொட்டி ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கிறது இத்திரைப்படம்.

40 வருட வாழ்நாள் உழைப்பின் சேமிப்பைச் செலவழித்து தனது கனவு இல்லத்தை கட்டி முடிக்கிறார் லட்சுமிகாந்தன் (கே.எஸ்.ரவிகுமார்). குடும்பத்துடன் அங்கே மகிழ்வான வாழ்க்கையைத் தொடங்கும்போது, புதுவீட்டின் மதில் சுவரில் கிறுக்கிச் செல்லும் சில அரசியல் குண்டர்களால் லட்சுமிகாந்தன் இயல்பு கெடுகிறார்.

சாமானியனுக்கே உரிய சீற்றத்துடன் சுவர் கிறுக்கலை அவர் அழிக்க முயல்கிறார். ஆனால், சுவர் நெடுக தங்கள் அபிமான அரசியல்வாதியை வரைந்து வெறுப்பேற்றுகிறார்கள். இம்முறை காவல்நிலையம் வரை லட்சுமிகாந்தன் செல்ல, அந்த அரசியல்வாதியின் ஈகோ சிலிர்த்துக்கொள்கிறது. பெரிய பின்னணி ஏதும் இல்லாதபோதும் சாமானியனுக்கே உரிய ரோஷத்துடன் லட்சுமிகாந்தனும் வரிந்துகட்டுகிறார். கொக்கரிக்கும் அரசியல்வாதி, மதில் சுவரை இரவோடு இரவாக இடித்துத் தள்ளியதுடன், ரவிக்குமாரையும் அறைந்து அவமானப்படுத்துகிறான்.

அங்கேதான் சாமானிய லட்சுமிகாந்தன் தனக்கான அறச்சீற்றத்தின் எல்லையை உணரத் தலைப்படுகிறார். அதன்பின்னர் அதிகாரமிக்கவர்களுடனான மோதலில் வேறு வியூகம் கொள்கிறார். எதிராளியை நிர்மூலமாக்கும் ‘சினிமாத்தனமான’ விபரீதங்களில் இறங்காது, அளவான இடைவெளியில் நின்று நடைமுறையில் சாத்தியமாகும் சமர் புரிகிறார். இது போன்ற இடங்களில்தான் ‘மதில்’ திரைப்படம் தனித்து நின்று பார்வையாளர்களுடன் களமாடுகிறது.

கனவு இல்லத்தின் மதில் சுவரில் அநாமதேயர்கள் எதையாவது கிறுக்கியோ வரைந்தோ செல்வது என்ற சாதாரண புள்ளியில் தொடங்கும் கதை ‘என் சுவர் என் உரிமை’ என்கிற முழக்கத்தை வலுவாக பதியவைக்கிறது. ‘என் சுவர்’ என்பதில் சாமானியர்கள் தங்களின் சகல உரிமைகளையும் பொருத்திப் பார்க்கலாம். அந்த உரிமைக்கு பங்கம் நேரும்போது வீறு கொண்டெழும் சாமானியனின் சமயோசித போராட்டம் சர்வ வல்லமைகளையும் காலில் விழ வைக்கும் என்கிறது மதில்.

சாமானியர்களின் பிரதிநிதியாக தோன்றும் கே.எஸ். ரவிக்குமார் அதனைக் கனக்கச்சிதமாக பிரதிபலிக்கிறார். 58 வயது குடும்பத் தலைவர் திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரமாக தோன்றுவதும், இயல்பான காட்சிகளில் அதை அலுக்காது நகர்த்தி செல்வதையும் சிறப்பாக சாதித்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். மகளை சவக்கிடங்கில் தேடும்போதும், வில்லனிடம் அறை வாங்கி நிலைகுலையும் போதும் ரவிக்குமார் தனித்து தெரிகிறார். மைம் கோபிக்கு பல திரைப்படங்களிலும் பழகிய வில்லன் வேடம் என்பதால் அநாயசமாக வந்து செல்கிறார்.

நாடகக் குழு ஒன்றை நடத்துபவர் என்பதால் ரவிக்குமாரை சுற்றி காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா அடங்கிய நாடகக் குழுவினரின் காமெடி கச்சேரி எப்போதும் தொடர்கிறது. நாடக பாணியிலான அவர்களின் காமெடி சில இடங்களில் எடுபடாது போகிறது. சமூக விழிப்புணர்வுக்கான திரைப்படத்தில் நகைச்சுவையின் பெயரால் இடஒதுக்கீட்டை கிண்டல் வேறு செய்கிறார்கள்.

அதிகாரம் மிக்க எதிரியுடன் மோதுவதில் சாமானியனின் வியூகங்களை மதில் கவனமாக அலசி இருக்கிறது. சமூக ஊடகங்களின் மூலம் சாமானியர்கள் தங்கள் குரலை வலுவாக எதிரொலிக்க வைப்பதையும், யூடியூப் வாயிலாக சாதாரணர்கள் பிரபலமாவதையும் திரைப்படத்தில் பொருத்தமாக கையாண்டிருக்கிறார்கள். சாமானியர்களை முடிவெடுக்கத் தயங்கும் மதில் மேல் பூனையாக ஒப்பிடுவார்கள். ஆனால் மதில் திரைப்படத்தில், மதில் மேல் நிதானம் இழக்காத புலியை உலவ விட்டிருக்கிறார்கள்.

ஃபகத் ஃபாசிலின் பிராயசித்தம்

தாழ்வாரத்தில் தந்தையின் சடலம் கிடத்தப் பட்டிருக்கிறது. வீட்டுக்குள் குறுகுறுப்புடன் மகன் முடங்கிக் கிடக்கிறான். அறையை விட்டு வெளிவருமாறு அவனிடம் சொல்லும் அண்ணி, முகக்கவசம் அணிந்து வருமாறும் கேட்டுக்கொள்கிறாள். கரோனா காலத்தின் உபயமான முகக்கவசத்தை, உள்ளுறையும் மனதின் தத்தளிப்புகளை மறைப்பதற்கான முகமூடியாகத் தரிக்கும் இந்தக் காட்சி ‘ஜோஜி’ திரைப்படத்தில் சாதாரணமாக கடந்து போகிறது. ஆனால் கதையோட்டத்தில் அவை பாய்ச்சும் உணர்வுகளே ‘ஜோஜி’ திரைப்படத்தை கொண்டாட வைக்கின்றன.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, மொழிகளைக் கடந்து உலகமெங்கும் ரசிர்களை ஈர்த்ததன் மூலம், மலையாள சினிமாவின் புதிய அலைக்கு வலுசேர்த்திருக்கிறது ‘ஜோஜி’.

ரப்பர் தோட்டத்தின் மத்தியில் வீற்றிருக்கும் வீட்டின் சக்கரவர்த்தி குட்டப்பன் (பி.என்.சன்னி). எழுபதை வயதைக் கடந்தும் திடகாத்திர தேகமும் அதைவிட அதிக மன வலுவும் கொண்ட அந்த அப்பன், 3 மகன்களை உள்ளடக்கிய குடும்பத்தினருக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். விவாகரத்தாகி குடியில் விழுந்தாலும் அப்பா மீது அபரிமிதமான மரியாதை வைத்திருக்கும் மூத்த மகன் ஜோமோன் (பாபுராஜ்). அதிகார அடுக்கில் அடுத்திருக்கும் ஜெய்சனுக்கு (ஜோஜி முண்டகாயம்), தனது மனைவி பின்சியுடன் (உன்னிமாயா) தனிக் குடித்தனம் போவது நிராசையாகவே நீடிக்கிறது. இந்த வீட்டின் கடைக்குட்டியான ஜோஜி (ஃபகத் ஃபாசில்), பாதியில் விட்ட பொறியியல் படிப்பு, கைக்கெட்டாத கனவான் கனவு என விட்டேத்தியாய் சுற்றுகிறார். அடையாளச் சிக்கலும் அங்கீகாரம் இல்லாதும் அடிக்கடி கை நீட்டும் அப்பாவுக்கு எதிராக உள்ளுக்குள் ஜோஜியை குமைய வைக்கின்றன. அந்த நிராகரிப்புகளே அபாயகரமாய் உருமாறுகின்றன.

எதிர்பாரா தருணத்தில் குட்டப்பனை பக்கவாதம் தாக்க, அவர் இனி எழ வாய்ப்பில்லை என அந்த வீடு தனது பாவனைகளைக் களையத் தொடங்குகிறது. ஆனால் ஒரு அறுவை சிகிச்சையில் குட்டப்பன் இயல்புக்கு திரும்பத் தொடங்கியதில் வீடு விதிர்த்துப் போகிறது. அதுவரை பாதி கவிந்திருந்த இருட்டின் சாயல், வீட்டினுள் முழுமையாக படிய முயற்சிக்க, அடுத்தடுத்த குற்றச் சம்பவங்கள் அங்கே அரங்கேறுகின்றன.

ஜோஜிக்காக உடல் இளைத்த ஃபகத் ஃபாசில், நாயக பிம்பங்களை நொறுக்கி அதகளம் செய்திருக்கிறார். ஃபகத்துக்கு நிகரான அண்ணி கதாபாத்திரத்தை அதன் அழுத்தம் பிசகாது தூக்கிச் சுமக்கும் உன்னிமாயாவின் நடிப்பும் மெச்சத்தக்கது. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த வீட்டில் அடுக்களையே கதியாகக் கிடக்கும் அந்த அண்ணி, நிஜத்தில் ஜோஜியைவிட மோசமான நிராகரிப்புகளை சுமந்திருக்கிறாள். அவரே ஜோஜியின் நகர்வுகளை மறைமுகமாக தீர்மானிக்கும் சித்தரிப்புகள் படத்துக்கு பலம்.

ஷ்யாம் புஷ்கரனின் திரைக்கதை, துண்டுத் துண்டாய் விரியும் காட்சிகளில் இடைப்பட்டதை நிரப்பிக்கொள்ள வாய்ப்பளித்து பார்வையாளரின் ரசனைக்கும் மரியாதை செய்கிறது. தக்கையின் மீதான கண்களுடன், தூண்டிலும் கையுமாக ஜோஜி காத்திருக்கும் காட்சிகள், அவனுக்கும் அண்ணிக்கும் இடையிலான ‘நறுக்’ உரையாடல்களில் படிந்திருக்கும் அடுக்குகள் என இயக்குநர் திலீஷ் போத்தனின் பாணி விவரிப்புகள் ரசிப்புக்கு உரியவை. அதேபோல பார்வையாளர்களை சதா பரிதவிப்பில் வைத்திருக்கும் ஜஸ்டின் வர்கீஸின் இசை, பிரகாசமான கேரள இயற்கையின் வனப்புகளில் கதைக்கான இருண்மையை பொதித்து தந்திருக்கும் சைஜு காலித்தின் ஒளிப்பதிவு ஆகியன திரைப்படத்தின் தூண்கள்.

‘மகஷிண்டே பிரதிகாரம்’, ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் திலீஷ் போத்தன் - ஃபகத் ஃபாசில் வெற்றிக் கூட்டணி, ‘ஜோஜி’ திரைப்படம் மூலமாக ஹாட்ரிக் அடித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு, ‘இருள்’ திரைப்படத்தை தந்து ரசிகர்களை ஏமாற்றிய ஃபகத் ஃபாசில், ‘ஜோஜி' மூலம் அதற்கு பிராயசித்தம் செய்திருக்கிறார்.

தொடர்புக்கு: leninsuman5k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x