Published : 27 Jun 2014 11:17 AM
Last Updated : 27 Jun 2014 11:17 AM
காதலுக்கு அடுத்தபடி இந்தியத் திரைப்படங்களில் முக்கியத்துவம் பெறும் சென்டிமெண்ட் அண்ணன் தங்கைப் பாசம். பேசாப் படங்களின் காலத்தில் கூட இடம்பெற்ற இந்த சென்டிமென்ட், பின்னர் தமிழ், இந்தித் திரைப்படங்களின் வெற்றி சூத்திரங்களில் ஒன்றாகக் காலம்தோறும் கையாளப்பட்டு வந்திருக்கிறது.
காட்சியமைப்பின் அடிப்படையில் பல சிறந்த அண்ணன் - தங்கைப் படங்களைப் பட்டியலிடுவது சாத்தியம் என்றாலும் பாடல்களைப் பொறுருத்தவரை, ஒப்பீடு இல்லாத பாடல் என்று தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு பாடலை மட்டுமே கூற முடியும் என்பது மிக்க வியப்புகுரியது.
அண்ணன்-தங்கைப் பாசத்தைப் பிழிந்து எடுத்துப் பேழையில் வைத்த, கண்ணதாசனின் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்ற பாசமலர் படச் சொல்லடுக்குத் தமிழ்ப் பாட்டுக்கு நிகராகச் சோகம் அக்கறை ஆகிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்திப் பாடல் நீண்ட காலம் இல்லாமல் இருந்தது.
தமிழ்த் திரைப்படம் வெளிவந்த வெகு காலத்திற்குப் பின்னர் தேவ் ஆனந்த் ஜீனத் அமன் நடிப்பில் ஆர்.டி. பர்மன் இசையில் ஆனந்த பக் ஷி எழுதிய ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற படத்தின் பாடல் மூலம் அந்த குறை நீங்கியது.
அந்தப் பாடல் இதுதான்...
ஃபூலோன்-கா, தாரோன்-கா ஸப்கா கஹ்னா
ஹை ஏக் ஹஜாரோன்-மே, மேரி பஹனா ஹை.
சாரி உமர் ஹமே சங் ரஹனா ஹை.
ஜப்ஸே மேரி ஆங்க்கோன் ஸே ஹோ கயீ து தூர்
தப்ஸே ஸாரே ஜீவன் கே ஸப்னே ஹை சூர்
ஆங்க்கோன் மே நீந்த் நா, மன்மே ச்சேனா ஹை.
ஏக் ஹஜாரோன்....
இதன் பொருள்.
மலர்கள், நட்சத்திரங்கள் கூறுகின்றன
ஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை
வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாய்
இருக்க வேண்டியவர்கள்.
எப்பொழுது நீ என் கண்களிலிருந்து தொலைவில் சென்றாயோ
அப்பொழுதே வாழ்வின் எல்லாக் கனவுகளும் நொறுங்கிவிட்டன.
விழிகள் உறங்கவில்லை மனதின் நினைவு இல்லை.
மலர்கள் பார், நாம் இருவரும்
ஒரு கொடியின் இரு மலர்கள்,
நான் (உன்னை) மறக்கவில்லை
நீ எப்படி என்னை மறந்து போனாய்
வா என் அருகில், சொல் உனக்கு என்ன என்ன சொல்ல வேண்டுமோ (அதை)
மலர்கள்...
வாழ்க்கையின் துக்கங்களைக் கண்டு
இப்படிப் பயப்படலாகாது
உண்மைகளிலிருந்து இப்படி
ஒளிந்து ஓடக் கூடாது .
சுகத்தை விரும்பினால் துக்கத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்
மலர்கள், நட்சத்திரங்கள் கூறுகின்றன
ஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை.
இப்பொழுது,
மிகையான கவி அழகுடன் அமைந்த கண்ணதாசனின் பாசமலர் படப் பாடல்.
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான்
என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில்
பறந்து சென்றான்
ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்
(கலைந்திடும் கனவுகள்)
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில்
மாமன் தெய்வம் கண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று
அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்.
இரு மொழிகளிலும் பாடலின் சந்தர்ப்பங்களும் அவற்றின் பின்னணிகளும் மிகவும் வேறு பட்டிருந்தாலும் தங்கை மீது கதாநாயக அண்ணன் வெளிப்படுத்தும் கலப்பில்லாத எல்லையற்ற பாச உணர்வின் அடிப்படையில் இரு மொழிப் பாடல்களும் இணைந்திருப்பது கவனிக்கத் தக்கது. கண்ணதாசனின் வரிகள் அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு தெய்விகத் தன்மையை அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT