Published : 20 Nov 2015 11:33 AM
Last Updated : 20 Nov 2015 11:33 AM
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான தர் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைத் தொடர்ந்து இளையராஜாவுடன் இணைந்து அற்புதமான இசைக் காவியங்களைத் தந்தார். இவர்கள் கூட்டணியில், 1982-ல் வெளியான திரைப்படம் ‘நினைவெல்லாம் நித்யா’. கார்த்திக், ஜீஜீ., பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் தொழிலதிபரின் மகனான சந்துரு (கார்த்திக்), பழங்குடியினப் பெண்ணான நித்யா(ஜீஜீ.)வைக் காதலிப்பான். ஏற்றத்தாழ்வின் கொடூரப் பார்வைக்கு இருவரும் பலியாகிவிடுவார்கள்.
ஆத்மார்த்தமான காதல் கதைக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா. பாடல்களில் மட்டுமல்ல, படத்தின் பின்னணி இசையிலும் காதல் மனதின் துடிப்பை இசையாக்கியிருந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவின் கவித்துவமான வரிகள் பாடல்களுக்குச் செறிவைச் சேர்த்தன. எஸ்.பி.பி.யின் பொற்காலத்தில் வெளியான ஆல்பம் இது.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, தந்தை நிர்வகித்து வந்த நிறுவனங்களின் பொறுப்பில் அமரவைக்கப்படும் சந்துரு, பொறுப்புகளிலிருந்து தப்பித்து நண்பர்களுடன் சுதந்திரமாக ஆடிப்பாடுவான். ஆப்பிரிக்க பாணி தாளக்கட்டுடன் உருவாக்கப்பட்ட ‘தோளின் மேலே பாரமில்லே’ எனும் இப்பாடலை தெறிக்கும் இளமையின் உற்சாகத்துடன் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பாடலின் முகப்பு இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் துணுக்கு, மாலை நேர ஒளியின் பின்னணியில் கூடாரங்களில் வசிக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்பை நினைவுபடுத்தும்.
இரண்டாவது நிரவல் இசையிலும் இந்தப் புல்லாங்குழல் இசையின் தொடர்ச்சி வரும். அதைத் தொடர்ந்து ‘தரரத் தரரத் தா’ என்று ஆர்ப்பரிக்கும் குதூகலத்துடன் சரணத்தைத் தொடங்குவார் எஸ்.பி.பி. 80-களில் வானொலி நிகழ்ச்சிகளின் முகப்பு இசையாக இப்பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. பழங்குடியினத் திருமண நிகழ்ச்சியொன்றில் பாடப்படும் ‘கன்னிப் பொண்ணு கைமேலே’ பாடலை மலேசியா வாசுதேவனும், பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள்.
முற்றிலும் வேறுவிதமான தாளக்கட்டுடன் தொடங்கி, வேறு திசையில் பயணிக்கும் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல் இளையராஜாவின் ராஜ முத்திரைகளில் ஒன்று. கரும்பச்சைப் பாறைகளில் தெறித்து ஓடி, கூழாங்கற்களின் மீது படரும் ஓடையைப் போல் தபேலா, டிரம்ஸின் கூட்டுக் கலவையின் தொடர்ச்சியாக ஜலதரங்கம். ஓடை நீரில் கால் நனைக்கும் சுகத்துடன் ஜானகியின் ஆலாபனை என்று வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்ட சுகந்தத்தைத் தரும் முகப்பு இசை அது.
நிரவல் இசையில் ஜலதரங்கம், பேஸ் கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு காவியத்தையே படைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், விட்டு விட்டு ஒலிக்கும் பறவையின் குரலை ஓடைக் கரையில் அமர்ந்து கேட்கும் சுகத்தை இசையாக வார்த்திருப்பார். நந்தவனம், பூஞ்சோலை போன்ற வார்த்தைகளுக்கு இசையால் வடிவம் கொடுத்த பாடல் இது.
எஸ்.பி.பி. பாடிய ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ பாடல் இப்படத்தின் மொத்தச் சூழலையும் சொல்லிவிடும். குடும்பத்தினரின் ஆதரவில்லாமல், கையில் பணமுமில்லாமல் தவிக்கும் கார்த்திக், அன்பைத் தவிர வேறு எந்த ஆபரணமும் இல்லாத தனது காதலியை ராஜகுமாரியாக வர்ணித்துப் பாடும் பாடல் இது. பல்லவியை எஸ்.பி.பி. தொடங்கியதும் வசந்தத்தின் வருகையை உணர்த்தும் புல்லாங்குழல் ஒலிக்கும்.
முதல் நிரவல் இசையில் வசந்தத்தின் இனிமையை உணர்த்தும் வயலின் இசைக்கோவை, கிட்டார் இசையைத் தொடர்ந்து களிப்பூட்டும் ஒற்றை வயலினை ஒலிக்கவிடுவார் இளையராஜா. கூடவே துள்ளலான டிரம்ஸ் தாளம். இளம் காதலர்களை வாழ்த்தும் இயற்கையின் பிரத்யேக மொழிபோல் அது ஒலிக்கும். பாடல் முழுவதுமே இயற்கையின் பேரழகைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார்.
இளையராஜாவின் பெரும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று எஸ்.பி.பி. பாடிய ‘பனிவிழும் மலர்வனம்’. பாடலின் தொடக்க வரியே பனிக்காலப் பூந்தோட்டத்தின் காட்சியை உணர்த்திவிடும். காதலில் உறைந்திருக்கும் மனம் மெல்ல மவுனத்தைக் கலைப்பதுபோல், கிட்டார் இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கும். ‘…உன் பார்வை ஒரு வரம்’ எனும் வரிகளை ஆமோதித்து ஆசி வழங்குவதுபோல், இயற்கை வயலின் இசைக்கோவையை வழங்கியிருப்பார் இளையராஜா.
வாவா பெடல் (wah wah pedal) எனப்படும் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டார் இளமைத் துள்ளலை இரட்டிப்பாக்கியிருக்கும். முதல் நிரவல் இசையில் புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையிலான உரையாடல்; அதைத் தொடர்ந்து, மெல்லிய வெயிலுக்கு நடுவே வீசும் தென்றலைப் போன்ற வயலின் இசைக் கீற்று; அதனுடன் கலக்கும் நறுமணத்தைப் போல் ஒரு வயலின் கோவை; எதிர்பாராத இடத்தில் ஒரு தபேலா தாளம் என்று திரையிசைப் பாடல் ஒன்றைச் சமகாலத்திலேயே காவியமாக்கும் அளவுக்கு அற்புதமான இசையமைப்பை இப்பாடலுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா. ’தழுவிடும்பொழுதிலே இடம் மாறும் இதயமே’ எனும் வரி வைரமுத்துவின் அசாத்திய கற்பனை.
காதலியின் பிரிவை நினைத்து வாடும் காதலன் பாடும் ‘நினைவெல்லாம் நித்யா நித்யா’ எனும் குறும்பாடலும் இப்படத்தில் உண்டு.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT