Published : 27 Nov 2015 12:18 PM
Last Updated : 27 Nov 2015 12:18 PM
ரன்பீருக்கும் காத்ரீனாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரன்பீரின் முன்னாள் காதலியான தீபிகா, தான் அனுமதிக்கும்போதுதான் ரன்பீரின் திருமணம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
காதல் முறிந்த பிறகும், ரன்பீரும் தீபிகாவும் நட்பைத் தொடர்ந்துவருகின்றனர்.
“என் வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்வி இது. எனக்குத் திருமணத்தின் மீது முழு நம்பிக்கையிருக்கிறது. நான் திருமணம் செய்துகொள்ளும்போது, அதை நிச்சயமாக உலகத்துக்கு அறிவிப்பேன்” என்று சொல்லியிருக்கிறார் தீபிகா.
தற்போது, ‘தமாஷா’படத்தைப் பிரபலப்படுத்தும் பணிகளில் ரன்பீரும் தீபிகாவும் பிஸியாக இருக்கின்றனர்.
ரன்பீர் ‘சாவரியா’ படத்திலும், தீபிகா ‘ஓம் சாந்தி ஓம்’ படத்திலும் 2007-ல் அறிமுகமானார்கள்.
“எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. ‘சாவரியா’ செட்டிலிருந்து தீபிகா ‘ஓம் சாந்தி ஓம்’ செட்டுக்குச் செல்வதை நேற்றுதான் பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடின உழைப்பால், இன்று நாங்கள் ஆசைப்பட்ட இடத்தை அடைந்திருக்கிறோம்” என்கிறார் ரன்பீர்.
‘தமாஷா’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
‘அவரால் அது முடியாது’
‘இன்றைய பாலிவுட்டில் கதாநாயகிகள்’ என்ற தலைப்பில் ‘என்எஃப்டிசி’ யின் ‘ஃபிலிம் பஜார்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அனுராக் பாசு அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
“நடிகர்கள், இயக்குநர்களின் ஆளுமை அவர்கள் பணியாற்றும் படங்களில் நிச்சயம் வெளிப்படும். ஆனந்த்தால் ‘தனு வெட்ஸ் மனு’ எடுக்க முடியும். விகாஸால் ‘குயின்’ படம் எடுக்க முடியும். ஆனால், ரோஹித்தால் அப்படி எடுக்க முடியாது. ஏனென்றால், இதில் உங்கள் ஆளுமையும், பெண்களை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதும் அடங்கியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார் அனுராக் பாசு.
“ இரண்டு, மூன்று படங்கள் பெண்களை மையப்படுத்தி வந்துவிட்டதாலேயே, பாலிவுட்டில் பெண்களை மையப்படுத்திப் படங்கள் எடுப்பது டிரெண்டாகிவிட்டது என்று சொல்ல முடியாது. இதை இனிவரும் ஆண்டுகளில்தான் தீர்மானிக்க முடியும். பெண்கள் படங்கள் இயக்குவதற்கும், திரைக்கதை எழுதுவதற்கும் இன்னும் அதிக அளவில் முன்வரும்போதுதான் நிலைமை மாறும்” என்கிறார் அனுராக்.
‘டெல்லி பெல்லி’ இரண்டாம் பாகம்
2011-ல் வெளியான ‘டெல்லி பெல்லி’ படத்துக்கு பார்ட்-2 எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் அபிநய் தேவ். ‘பிளாக் காமெடி ‘படமான இது, பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ‘சேட்டை’என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. ‘டெல்லி பெல்லி’ படத்துக்கு அடுத்த பாகம் எடுப்பதைப் பற்றி தீவிரமாகப் பேசிவருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் அடுத்த பாகம் வெளியாவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அபிநய். ஆமிர் கான் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் இம்ரான் கான், குணால் ராய் கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
“அடுத்த பாகத்தைப் பற்றி ஆமிரிடமும், திரைக்கதையாசிரியர் அக்ஷத்திடமும் பேசிவிட்டேன். கடந்த முறையைவிட இந்த முறை விரைவாகப் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். எங்களுடைய ‘டெல்லி பெல்லி’ திரைப்படம் வித்தியாசமான ‘காமெடி’படங்கள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தது” என்று சொல்கிறார் இயக்குநர் அபிநய்.
‘ஃபிட்னஸ் முக்கியம்’
ஷர்மிளா தாகூரின் மகளும், நடிகையுமான சோஹா அலி கான், பாலிவுட்டில் ஜிம்முக்குப் போகும் பழக்கம் கடந்த பத்து ஆண்டுகளில்தான் உருவானது என்று தெரிவித்திருக்கிறார். “என் அம்மா, அந்தக் காலத்தில் பிகினி அணிந்து நடித்திருக்கிறார். ஆனால், அப்போது யாரும் ஜிம்முக்குச் சென்றதில்லை. இப்போது உருவாகியிருக்கும் இந்த டிரெண்டை வரவேற்கலாம். இதனால், ஆரோக்கியமாகவும் இருக்க முடிகிறது. அதற்காக, எடை குறைக்க வேண்டும் என்று ஒரேடியாக பட்டினி இருப்பதும் தவறு. ‘ஃபிட்னஸ்’ என்பது உங்களுடைய வாழ்வை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வதாக இருக்க வேண்டும்” என்று சொல்கிறார் சோஹா அலி கான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT