Last Updated : 20 Nov, 2015 11:40 AM

 

Published : 20 Nov 2015 11:40 AM
Last Updated : 20 Nov 2015 11:40 AM

பக்கத்து வீடு: சூடான சுயசரிதை

இந்திய வணிக சினிமா வரலாற்றில் கேங்ஸ்டர் படங்கள் தொடங்கி பேய்ப் படங்கள் வரை பல்வேறு வகைகளில் வெற்றிகளைக் குவித்து புதுமைகளைப் புதுத்தியவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தெலுங்கில் இயக்கிய ‘சிவா’, இவரது முதல் திரைப்படம். தமிழில் ’ உதயம்’ என்ற தலைப்பில் வெளியாகி வெற்றிபெற்றது. மிகையோ, நம்ப முடியாத சாகசங்களோ இல்லாமல் ஒரு உக்கிரமான திரைப்படமாக அதை உருவாக்கி முழு இந்தியாவையும் கவனிக்க வைத்தார்.

ஒரு கட்டத்தில் தெலுங்கிலிருந்து இந்திக்குச் சென்ற ராம் கோபால் வர்மா, மும்பை நிழலுலகத்தின் செயல்பாடுகளையும் அதில் இயங்கும் அதிகார உறவுகள், ஆசாபாசங்களையும் வைத்து யதார்த்தத்திற்கு நெருக்கமாக ‘சத்யா’, ‘கம்பெனி’, ‘சர்க்கார்’ என தொடர்ந்து முத்திரை பதித்தார். காதல் ரசம் சொட்ட ‘ரங்கீலா’, திடுக்கிடும் திகிலுக்கு ‘பூத்’ என்று வெற்றிகளை அள்ளினார்.

வலுவான திரைக்கதை மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைப் படைப்பதில் திறன்பெற்ற ராம் கோபால் வர்மா, ஒரு கட்டத்தில் ஆர்.ஜி.வி. பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தொழிற்சாலை போல படங்களைத் தயாரிக்கவும் இயக்கி வெளியிடவும் தொடங்கினார். புதிய கேமரா தொழில்நுட்பங்களில் காட்டிய சிரத்தையைத் திரைக்கதையில் காட்டாத நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிப்படத்தைக் கூட கொடுக்க முடியாத நிலையில் தனது சுயசரிதையை ‘கன்ஸ் அண்ட் தைஸ்’(Guns and Thighs) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடவுள்ளார்.

ஏற்கெனவே தனது இணையதளத்தில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் தெலுங்கில் ‘நா இஸ்டம்’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. தனது சிந்தனைகள், அனுபவங்களைப் பட்டவர்த்தனமாக எழுதியதன் மூலம் தேர்ந்த எழுத்தாளராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அயன் ராண்ட், ஆல்பர்ட் ஹிட்ச்ஹாக், ஸ்ரீதேவி பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் இன்றும் இணையதளத்தில் அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

“நான் அமிதாப் பச்சனை ‘முட்டாள்’ என்று அழைத்தபோது, ‘நிழலுகத்துடன் எனது உறவு, ‘எனது திரைவாழ்க்கையில் பெண்கள்’என சில அத்தியாயங்களின் தலைப்புகளைத் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தை ரூபா பதிப்பகத்தார் வெளியிடவுள்ளனர். தனது படங்கள் வழியாகச் செய்திகளில் இடம்பெற முடியாவிட்டாலும் தனது சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் புத்தகங்கள் வழியாகத் தொடர்ந்து தனது பெயரை ஊடகங்களில் தக்கவைத்திருக்கிறார் வர்மா.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x