Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM
தமிழ் சினிமாவைத் தரமுயர்த்தியதில் பாலு மகேந்திராவுக்கும் அவருடைய மாணவர்களுக்கும் தனித்த பங்குண்டு. அப்படிப்பட்டவர் பிறந்து, வளர்ந்த தாய்மண்ணில், அவரது படைப்பாளுமையை நிரந்தரமாக நினைவுகூரும் வகையில் ஓர் அரிய செயலைச் செய்திருக்கிறார்கள் வட இலங்கையில் சினிமாவை நேசிக்கும் இளைஞர்கள் சிலர். சினிமாவுக்கான நூலகம் ஒன்றைத் தொடங்க முடிவுசெய்த அவர்கள், அதற்கு பாலு மகேந்திராவின் பெயரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு உணர்வுபூர்வமாக அர்ப்பணம் செய்துள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இளவயதில், இலங்கையில், சிங்களத் திரையுலகில் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். அதற்குப் பிறகுதான் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து, புனே திரைப்படக் கல்லூரியில் முறைப்படி சினிமா பயின்று, தென்னிந்தியாவின் தலைசிறந்த திரை ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்தார்.
பாலு மகேந்திராவின் ஏழாம் நினைவு நாள் நெருங்கிவரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் கிளிநொச்சியில் ‘பாலு மகேந்திரா நூலகம்’ தொடங்கப்பட்டது. ஈரானியத் திரைப்பட இயக்குநர் மஜீத் மஜிதி, சிங்கள சினிமாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான பிரசன்ன விதானகே, இந்தியாவிலிருந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா, இலங்கையின் மூத்த நாடக ஆளுமை மெளனகுரு சின்னையா ஆகியோர் இந்த நூலகத்தின் இணையவழித் தொடக்கவிழாவில் பங்கேற்றனர். பாலு மகேந்திரா குறித்த தமது கருத்துக்களையும் நினைவுகளையும் அப்போது பகிர்ந்துகொண்டனர்.
நூலகத்துக்கு வித்திட்ட பட்டறை
’பட்டறை’ என்னும் பெயரில் நடத்தப்பட்டத் திரைப்பட பயிற்சிப் பட்டறைதான் இப்படி ஒரு நூலகம் தொடங்கப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. பாலு மகேந்திரா சென்னையில் நடத்திவந்த திரைப்படப் பயிற்சிப் பள்ளிக்கு ‘பட்டறை’ என்றுதான் பெயரிடப்பட்டிருந்தார் என்பது சுவாரஸ்யப்பொருத்தம்.
2020 மே மாதத்தில் கரோனா பெருந் தொற்று உச்சத்திலிருந்த நிலையில், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இதற்காக ஒன்றிணைந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணையோடு திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோருடன் இணையவழிக் காணொலி உரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். இலங்கையிலிருந்து பலர், தமிழகத்திலிருந்து சிலர் என 600-க்குமேற்பட்டோர் இந்த உரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்றனர். நடிகர்கள் நாசர், விஜய் சேதுபதி, இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், நலன் குமாரசாமி, சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகே, இலங்கையில் பிறந்து கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இயக்குநர்கள் லெனின்.எம்.சிவம், ரஞ்சித் ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் இதில் பங்கேற்று உரையாற்றினர்.
இழப்புகளுக்கு நடுவில் ஒரு நூலகம்
நான்கு மாதங்கள் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடம் கிடைத்தது. “திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் திரைப்பட இயக்குநராகிவிட முடியாது. ஒளிப்பதிவாளராவதற்குக் கையில் கேமரா வைத்திருப்பது மட்டும் போதாது. ஓரிடத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட நூலகத்துடன் கூடிய கல்வி, உரையாடலின் மூலமாகவே சினிமா குறித்த அறிவை, பயிற்சியைப் பெறவும் அதைத் தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ளவும் முடியும். அதைச் செய்வதற்கான வளங்கள் எங்களிடம் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் இப்படி ஒரு நூலகத்தைத் தொடங்கும் யோசனை பிறந்தது” என்கிறார் பாலு மகேந்திரா நூலகத்தின் தலைவர் ரம்யா டெரோன்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்த 2009 வரை தமிழர்கள் அதிகமாக வசித்துவந்த வடக்கு மாகாணம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகராக அறியப்பட்டது. போருக்குப் பிந்தைய சூழலில் அங்கு வாழும் மக்கள் தமது பொருளா தாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கப் பாடுபட்டு வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் போரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆறா ரணங்களும் அதற்காக எஞ்சியிருக்கும் மக்களின் தொடர் போராட்டமும் நடந்தபடியேதான் இருக்கின்றன. தலைநகர் கொழும்புவிலிருந்து வடக்கு மாகாணத்துக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலை போர் நினைவுச் சின்னங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு அப்பால் உள்ள கிராமங்களில் போர் விட்டுச் சென்ற இழப்புகளைத் தாங்கியபடி தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்கே கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றின் முதல் தளத்தில்தான் பாலு மகேந்திரா நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
“இந்த நூலகத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது அது மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த பாலு மகேந்திரா சாரை கெளரவப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். தன்னுடைய அபாரத் தொழில்நுட்ப வல்லமையின் மூலம், தென்னிந்திய சினிமாவில் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் சாதாரணமானவை அல்ல” என்கிறார் மென்பொருள் பொறியாளரான ரம்யா. அவரும் இந்தக் குழுவில் உள்ள மற்ற இளைஞர்களும் தன்னார்வலர்களாக நேரம் ஒதுக்கி இந்த நூலகத்தை நிர்வகிக்கின்றனர்.
இலங்கை முழுமைக்கும்...
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பாலு மகேந்திரா நூலகத்தில், அதற்குள் 10,000 நூல்களும் டிவிடிக்களும் சேகரிக்கப் பட்டுவிட்டன. இவை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் பங்களித்தவை. பாலு மகேந்திரா குடும்பத்தினரும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை நல்கியுள்ளனர். இந்த நூலகக் குழுவினர் இலங்கைத் தீவின் பல்வேறு பகுதிகளில் தடம்பதிக்கத் திட்டமிட்டுவருகின்றனர். வடக்கு, கிழக்கு மாவட்டங்களுடன் நின்றுவிடாமல் வடக்கில் வாழும் இஸ்லாமியர்கள், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும், வாசிப்பும் கலையார்வமும் மிக்க சிங்கள இளைஞர்கள், மலையகத் தமிழர்கள் என பல்வேறு சமூகப் பிரிவினரை தம்முடன் இணைத்துக்கொண்டு பயணிக்க விரும்புகின்றனர்.
“இலங்கைத் தீவில் ஒரு தனித்துவம் மிக்க தமிழ் சினிமா பண்பாட்டை வளர்த்தெடுக்க விரும்புகிறோம். அதேநேரம் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாமல் இலங்கையின் மற்ற பகுதிகளின் கதைகளையும் எங்கள் திரைப்படங்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறோம். வருங்காலத்தில் கிராமப்புறங்களுக்கு சினிமா வளங்களைக் கொண்டுசெல்வதற்கான நடமாடும் நூலகங்களை உருவாக்க இந்தக் குழு திட்டமிட்டுள்ளது” எங்கள் நடமாடும் நூலகங்கள் வழியே கிராமங்களில் கிளாசிக் திரைப்படங்களைத் திரையிடுவோம்.
அதேபோல், இந்த நூலகத்தின் வழியாகப் பெண்கள் திரைப்படத் தொழில்நுட்பத்தைப் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறோம்.” என்கிறார் ரம்யா. தன் திரைப்படங்களில் பல மறக்க முடியாத ஆளுமை மிக்க பெண் கதாபாத்திரங்களைப் படைத்தளித்த பாலு மகேந்திரா இதனால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார்.
நன்றி: ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில் சுருக்கமாக - ச.கோபாலகிருஷ்ணன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT