Published : 20 Nov 2015 11:36 AM
Last Updated : 20 Nov 2015 11:36 AM
தரமான ரசனையை நோக்கி மக்களைத் திருப்பும் வேலையைச் செய்துவரும் இந்திய ‘ஆஃப்பீட்’(off-beat) திரைப்படங்களைத் தந்த முன்னோடிகள் சிலரைப் பற்றி பார்த்தோம். இதுபோன்ற படங்களை எடுத்த குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோரைக் கடந்த வாரம் அறிந்துகொண்டீர்கள். இந்தப் பட்டியலில் குறிப்பிடத் தக்க மற்றொருவர் குரு தத்.
பெயரை மாற்றிக்கொண்ட கலைஞன்
முப்பத்தொன்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த குரு தத், இவர்களை விடச் சற்றே வித்தியாசமானவர்.பெங்களூருவில் பிறந்தவர். சிறுவயது முதலே கல்கத்தாவில் வளர்ந்தார். அறிவுஜீவியாகவே வாழ்ந்தவர். வசந்த குமார் சிவ்ஷங்கர் படுகோனே என்ற இயற்பெயருக்குப் பதில், குரு தத் என்ற பெயரை கல்கத்தாவில்தான் வைத்துக்கொண்டார். இதனாலேயே, இவர் ஒரு பெங்காலி என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
பூனாவின் பிரபாத் பில்ம் கம்பெனி என்ற பிரபல ஸ்டுடியோவில் மூன்று வருட ஒப்பந்த வேலையில் 1944-ல் சேர்ந்தார் குரு தத். அதற்கு முன்னர் டெலிஃபோன் ஆபரேட்டராக இருந்தார். இந்த ஸ்டுடியோவில் சேர்ந்த பின்னர்தான் திரைப்பட ஆர்வம் அவருக்குள் எழுந்தது. பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அங்கே தனது வாழ்நாள் நண்பராக மாறிய தேவ் ஆனந்தின் நவ்கேதன் நிறுவனத்தில் தனது முதல் படத்தை (பாஸி - 1951) இயக்கினார்.
மறுபடியும் அதே நிறுவனத்தில் தேவ் ஆனந்தை வைத்து அவர் இயக்கிய ‘ஜால்’ இரண்டாவது படமாக அமைந்தது. இதன்பின்னர் ‘பாஸ்’, ‘ஆர் பார்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55’ ஆகிய படங்களில் அவரே நாயகனாக நடித்து இயக்கினார். இப்படங்கள், இந்தித் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக குரு தத் இயக்கியவை. எனவே ஜனரஞ்சகப் படங்களாகவே இவை விளங்கின.
‘பியாஸா’
இந்தப் படங்களுக்குப் பின்னர் இவர் இயக்கிய ‘பியாஸா’என்ற திரைப்படம்தான் இன்றளவும் குரு தத்தின் பெயரை உலகெங்கும் கொண்டுசேர்த்தது. ஒரு ஏழைக் கவிஞன், அவனது கல்லூரிக் காதலி, இவனது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு இவனைக் காதலிக்கத் தொடங்கும் ஒரு பாலியல் தொழிலாளி, கல்லூரிக் காதலியின் கணவன் ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு, இயல்பான, உணர்வுபூர்வமான ஒரு கதையைப் படமாக்கியிருந்தார் குரு தத்.
ஒரு கட்டத்தில் அவரது கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் கருதப்படும். இவரைச் சுற்றியிருக்கும் அனைவரும் சுயநலவாதிகள் என்பதைப் புரிந்துகொண்டு, தன்னை விரும்பிய பாலியல் தொழிலாளிப் பெண்ணுடன் இறுதியில் கிளம்பும்படியான கதை. ஸாஹிர் லுத்யான்வி என்ற புகழ்பெற்ற கவிஞரின் கதையில் இருந்து எடுத்த சில அம்சங்கள் இப்படத்தின் இயல்புத்தன்மையை உறுதிப்படுத்தின. படம் மிகுந்த பிரபலமடைந்தது.
இப்படத்துக்குப் பின்னர் குரு தத்தின் ‘காகஸ் கி பூல்’ வெளியாகியது. அச்சமயத்தில் படுதோல்வி அடைந்தாலும், பின்னாட்களில் திரைப்பட ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்த படங்களில் அதுவும் ஒன்று. இந்தப் படத்தில் ஒரு திரைப்பட இயக்குநராக குரு தத் நடித்திருப்பார். மனைவியின் குடும்பத்தினர் இவரை இளப்பமாக நடத்துவார்கள்.
காரணம், அச்சமயத்தில் திரைப்பட இயக்குநர் என்பது சமூகத்தில் அந்தஸ்து குறைந்த வேலையில் இருப்பவர் என்று கருதப்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருக்கும் ஒரு நபர், எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்த ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி, அவள்மீது காதல் கொள்ளும் கதை. இதனால் ஏற்கெனவே திருமணமான அவரது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இவரது மகள் இறைஞ்ச, அப்பெண் மனம்மாறி, கதாநாயகி வாழ்க்கையைத் துறந்து ஒரு பள்ளியில் ஆசிரியை ஆகிவிடுகிறாள். அனைவரும் அவரை விட்டுப் பிரிந்த நிலையில் குடிக்கு அடிமையாகி, இறுதியில் இயக்குநர் நாற்காலியில் இவர் உயிரை விடுவதோடு படம் முடியும்.
திரையும் வாழ்வும்
நிஜ வாழ்விலும் இதேபோல் தனது முப்பத்தொன்பதாம் வயதில், மதுபானத்தோடு அளவுக்கதிகமாகத் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் 1964 அக்டோபர் பத்தாம் தேதி இரவில் குரு தத் இறந்துபோனார். இதற்கு முன்னரே இரண்டு முறைகள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்த நான்கு இயக்குநர்கள் இந்தியாவின் ஜனரஞ்சகத் திரைப்படங்களை வேறு ஒரு நிலைக்கு உயர்த்தினார்கள். அதுவரை ஆடல்கள், பாடல்கள், சண்டைகள் என்று இருந்த திரைக்களம், இவர்களது இயல்பான படங்களால் தாக்கம் பெற்று, திரை ரசிகர்களது ரசனையின் தரத்தை உயர்த்தியது. தமிழ்நாட்டில் கூட இவர்களின் பாதிப்பு நிலவியது. பாலசந்தர் படங்களில் ரிஷிகேஷ் முகர்ஜியின் பாதிப்பை சர்வநிச்சயமாக உணர முடியும். இவர்களின் படங்கள், நாம் மேலே பார்த்தபடி, சென்னையில் கூட நன்றாக ஓடியிருக்கின்றன.
இவர்கள் விட்டுச்சென்ற பாதையில்தான் இந்தியாவின் ஆஃப்பீட் திரைப்படங்கள் இன்றும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பாலு மகேந்திரா, மகேந்திரன், சுதீர் மிஷ்ரா, அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், விக்ரமாதித்ய மோட்வானே, ராஜ்குமார் குப்தா, சுஜோய் கோஷ், ரிதுபர்ணோ கோஷ், கிரீஷ் கர்நாட், ஷாஜி கருண், புத்ததேவ் தாஸ்குப்தா மற்றும் பல இயக்குநர்கள் தற்சமயம் இந்தியாவின் திரைப்படங்களை உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமே. இந்தப் பட்டியலில் மணிகண்டன், வெற்றிமாறன், பிரம்மா ஆகியோர் இணைந்துள்ளது, தமிழிலும் இனி அருமையான ஆஃப்பீட் மற்றும் கலைப்படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையை உறுதி செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT