Published : 27 Nov 2015 12:30 PM
Last Updated : 27 Nov 2015 12:30 PM
அனிமேஷன் திரைப்படங்களின் மகாராஜா என்றால் அது வால்ட் டிஸ்னிதான். ஆனால், டிஸ்னியின் அசைக்க முடியாத இந்த சாம்ராஜ்யத்தை ஒன்றுமேயில்லை என்று ஆக்கியது பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம். ஹாலிவுட்டுக்குக் கவுரவம் சேர்த்த ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசை அறிவியல் புனைவு திரைப்படங்களின் பிரம்மாவான ஜார்ஜ் லூக்காஸ் உருவாக்கிய நிறுவனம்தான் இந்த பிக்ஸார்.
1995-ம் ஆண்டு பிக்ஸாரின் உருவாக்கத்தில் வெளியான முதல் டாய் ஸ்டோரி அனிமேஷன் திரைப்படம் அனிமேஷன் ரசிகர்களைக் குடும்பம் குடும்பமாகத் திரையங்குகளில் குவித்தது. அதற்குக் காரணம் அதுவரை அனிமேஷன் படங்களில் இல்லாத ‘போட்டோ ரியலிஸ்டிக்’ தன்மையை இந்தப் படத்துக்காகவே கண்டறிந்த ‘ரெண்டர்மேன்’ (RenderMan) என்ற மென்பொருளைக் கொண்டு பிக்ஸார் சாதித்தது.
ரெண்டர்மேன் என்பது 2டியில் பென்சில் ஸ்கெட்ச் சித்திரங்களாக வரையப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் பொருட்களை 3டி தன்மைக்கு மிகத் துல்லியமாக மாற்றும் மென்பொருள். பிக்ஸாரின் ரெண்டர்மேன் மென்பொருள் மூலம் சாத்தியமான போட்டோ ரியலிஸம் என்பது, நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளிப்படுத்தும் நுட்பமான உணர்வுகளுக்கு இணையாக, 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களையும் நடிக்கவைத்து (ரெண்டரிங்) உயிர்கொடுப்பது. இதற்கு மேலும் வலுசேர்க்க அனிமேஷன் கதாபாத்திரங்கள் வாழ்வதாகச் சித்தரிக்கப்படும் இடங்கள், நிலப்பரப்புகளை வரைந்து உருவாக்காமல், ‘டேட்டா ஸ்கேன்’ தொழில்நுட்பம் மூலம் நிஜமான இடங்களையும், நிலப்பரப்புகளையும் படம்பிடித்து அனிமேஷனில் இணைப்பதை ரெண்டர்மேன் சாத்தியமாக்கியது.
டிஸ்னியின் ஞானோதயம்!
டாய் ஸ்டோரின் முதல் பாகத்தில் ரெண்டர்மேன் மூலம் பிக்ஸார் சாதித்த ‘போட்டோ ரியலிஸத்தை’ப் பார்த்த வால்ட் டிஸ்னி நிறுவனம் ஒரு முடிவுக்கு வந்தது. பிக்ஸார் கண்டறிந்த ‘ரெண்டர்மேன்’ இல்லாமல் உருவாகும் 3டி அனிமேஷன் படங்கள் இனி பார்வையாளர்களுக்குப் பிடிக்காமல் போய்விடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து, கடந்த 2006-ம் ஆண்டு பிக்ஸாரை விலைகொடுத்து வாங்கிக்கொண்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
டாய் ஸ்டோரியின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகிவிட்டன. டாய் ஸ்டோரிக்குக் கொஞ்சமும் சளைக்காமல் பைன்டிங் நீமோ, மான்ஸ்டர்ஸ் இங்க், அப், தி இங்கிரடிபிள்ஸ் உள்ளிட்ட மறக்க முடியாத அனிமேஷன் படங்களைத் தந்த பிக்ஸார், தற்போது உலக அனிமேஷன் ரசிகர்களுக்குத் தரவிருக்கும் படம்தான் ‘தி குட் டைனோசர்’. ‘எங்களது முந்தைய படங்களின் சாதனைகளையெல்லாம் இந்தப் படத்தின் மூலம் நாங்கள் மட்டுமே முறியடிப்போம்’ என்று சொல்வதைப் போல அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட் காட்சி களை உருவாக்கியிருக்கிறது பிக்ஸார் டீம். இந்தப் படத்தில் அவர்கள் செய்திருக்கும் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் ஜாலத்தைக் காணும் முன் அந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்.
கதையில் டிவிஸ்ட்!
டைனோசர்கள் சுமார் 6.6 கோடி ஆண்டுகள் முன்பு வரை வாழ்ந்தவை. பூமி எதிர்கொண்ட வால்நட்சத்திரத் தாக்குதல் ஒன்றால் அவை மடிந்திருக்கலாம் என்கிறது ஆராய்ச்சி. ஆனால், ‘தி குட் டைனோசர்’ படத்தில் அந்தப் பேரழிவு பூமியைப் பெரிதாகத் தாக்காமல் கடந்து சென்றுவிடுகிறது. இதனால் டைனோசர்கள் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றன.
அந்த டைனோசர் கூட்டத்தில் 11 வயதே நிரம்பிய ‘ஆர்லோ’ என்ற சைவ டைனோசர் குட்டி தனது தந்தையுடன் வாழ்ந்துவருகிறது. மூன்று பெரிய பனிமலைகளும் அழகிய சமவெளியும், பெருக்கெடுத்துப் பாயும் நதியும் கொண்ட ஆர்லோவின் பரந்து விரிந்த வாழ்விடம் இயற்கையின் பிரம்மாண்டமான காட்சிக் கூடம். அங்கே எதிர்பாராமல் நிகழும் நிலச்சரிவில் தனது தந்தையைப் பறிகொடுக்கும் ‘ஆர்லோ’ காட்டாற்று வெள்ளத்தில் பல நூறு கிலோ மீட்டர்கள் அடித்துச் செல்லப்படுகிறது. ஒருவழியாகப் பாறை ஒன்றால் தடுத்து நிறுத்தப்படும் ஆர்லோ தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பயத்துடன் அலைகிறது.
ஆர்லோ, ஸ்பாட் கதாபாத்திர ஓவியம்
அப்போது அதன் தவிப்பைக் காண்கிறான் ‘ஸ்பாட்’ எனும் குகைச் சிறுவன். முதன்முதலில் மனிதச் சிறுவனைக் காணும் ஆர்லோ தொடக்கத்தில் திகைத்தாலும் பிறகு அவனைத் தனது ‘பெட்’ நண்பனாக ஏற்றுக்கொள்கிறது. இந்த இடத்தில்தான் கதையில் தலைகீழ் டிவிஸ்ட். குட்டி டைனோசர்தான் இந்தக் கதையின் நாயகன். நிமிர்ந்து நடக்கக் கற்றுக்கொள்ளாத ஆதிகால மனித இனத்தைச் சேர்ந்தவன்தான் சிறுவன் ஸ்பாட். அதனால் அவன் தனது கைகளை, கால்கள்போல பாவிக்கிறான். ஒரு நாய்க்குட்டியைப் போலவே அவனது செய்கைகள் இருக்கின்றன. தனக்கு ஒரு நல்ல ‘பெட்’ கிடைத்துவிட்டதாக எண்ணும் ஆர்லோ, சிறுவன் ஸ்பாட்டைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறது.
இப்போது ஸ்பாட்டுடன் இணைந்து ஆர்லோ தன் வீட்டைக் கண்டுபிடிக்கப் பயணம் செய்கிறது. வழிநெடுக சாகசங்கள், காடு, மலை, சமவெளியில் மின்மினிப் பூச்சிகள் கூட்டம், விதவிதமான டைனோசர்களுடன் நகைச்சுவையான அனுபவம் என்று அவர்களது பயணம் தொடர்கிறது. இறுதியில் ஆர்லோவின் வீட்டைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கைகோத்த தொழில்நுட்பம்
இந்தப் படத்தின் கதையை மேலும் நான்கு பேருடன் எழுதி இயக்கியிருப்பவர் பீட்டர் சோன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கொரிய இனத்தவரான இவர், பிக்ஸார் படங்களில் 2டி படங்களை வரையும் ஓவியராகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கி, தற்போது இயக்குநராக வளர்ந்து நிற்கிறார். இந்தப் படத்தில் ஆர்லோவின் வாழ்விடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரைந்தவர் நோவா கோசெக் என்ற கான்செப்ட் ஓவியர்.
இந்த ஓவியத்தில் உள்ளதுபோன்றே மலைகளும், நதியும், சமவெளியும் உள்ள லொக்கேஷனைத் தேடிப் புறப்பட்டனர் இயக்குநர் சோனும் அவரது படக் குழுவினரும். இறுதியில் ஓவியத்தில் இருப்பதுபோன்ற இடங்களை அமெரிக்காவின் தேசியத் தாவரவியல் (Grand Teton National Park and Yellowstone National Park) பூங்காக்கள் இரண்டில் கண்டறிந்து அவற்றை டேட்டா ஸ்கேன் மூலம் 360 டிகிரி கோணங்களில் படம்பிடித்துக்கொண்டனர்.
அதேபோல் வழிதவறிய ஆர்லோவும் ஸ்பாட்டும் வீட்டைத் தேடித் திரும்பும் வழிக்கான லொக் கேஷனைத் தேடியபோது நம்ப முடியாத வகையில் ஒரு இடத்தை வட அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். அந்த லொக்கேஷனை வானிலிருந்து படப்பிடிப்பு செய்த 3டி டேட்டா ஸ்கேன் காட்சிகளை (60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு) அமெரிக்காவின் புவியியல் ஆய்வுதுறையிடமிருந்து (height field data scan from the U.S. Geological Survey) பெற்றுக்கொண்டனர். இந்த இரண்டு லைவ் லொக்கேஷன்களும்தான் படத்தில் போட்டோ ரியலிஸ்டிக் ரெண்டர்மேன் முறையில் கண்களை அள்ளும் கதைக்களமாக மாறியிருக்கின்றன.
இந்தக் கதையின் பிரதான கதாபாத்திரங்களான ஆர்லோவையும் ஸ்பாட்டையும் வரைந்தவர் மாட் நோல்டே. இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தவிர தங்கள் வால்களில் பறவைகளைப் போன்ற வண்ண வண்ண இறகுகளைக் கொண்ட கேலிச்சித்திரங்களை நினைவூட்டும் வெலோசிராப்டர்ஸ் (velociraptors), மாமிச உண்ணிகளான டீரெக்ஸ் டைனோசர்கள், உடல் முழுவதும் இருக்கும் தனது கொம்புகளில் பூச்சிகளையும் பறவைகளையும் சுமந்து செல்லும் நகைச்சுவை கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்டைரெக்சார் (Styracosaur)டைனோசர் உட்பட அனைத்துமே பிக்ஸாரின் ரெண்டர் மேன் மென்பொருளால் உயிர்பெற்றிருக்கின்றன. நிஜமான நிலக் காட்சிகளையும் 3டி அனிமேஷன் காட்சிகளையும் இணைத்து போட்டோ ரியலிஸ்டிக் முறையில் உருவாகியிருக்கும் ‘தி குட் டைனோசர்’ ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கப்போவது உறுதி.
360 டிகிரியில் படமாக்கப்பட்ட நிலவியல் காட்சிகள் 3டி அனிமேஷனுடன் இணைகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT