Published : 25 Nov 2015 10:55 AM
Last Updated : 25 Nov 2015 10:55 AM

சினிமா எடுத்துப் பார் 35: ‘மயங்குகிறாள் ஒரு மாது’

ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தை வாங்கத் தயங்கினார்கள். திருச்சியைச் சேர்ந்த விநியோ கஸ்தர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு களை அடுக்கி வைத்துக்கொண்டு ‘கிளை மாக்ஸில் கதாநாயகி இறப்பது போல மாற்றிக் கொடுங்கள். உடனே படத்தை வாங்கிக்கொள்கிறேன்’ என்றார். நானும், பஞ்சு அருணாசலமும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியைக் கொன்றுவிடக் கூடாது. தவறை மன்னித்து வாழ வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந் தோம். தயாரிப்பாளர் விஜயபாஸ்கரிடம் படம் தொடங்குவதற்கு முன்பே, இதை சொல்லியிருந்ததால் அவரும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை.

பல வகையில் பணத்தை புரட்டி னோம். படப்பிடிப்பு முடிந்தது படத்தை சென்சாருக்கு அனுப்பினோம். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரி எங்களை அழைத்து பாராட்டி, ‘யூ’ சான்றிதழ் கொடுப்பதாகக் கூறினார்.

பஞ்சு அவர்கள் என்னை அழைத்து, ‘‘ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிகாரியிடம் அந்த பருவக் கோளாறு காட்சிகளைப் பற்றி கேட்டுவிடுங்கள்’’ என்றார். நான் சென்சார் அதிகாரியிடம் சென்று ‘‘படத் துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து காதலர் கள் தனிமையில் இருக்கும் காட்சிகளைக் குறைப்பீர்கள் என்று நினைத்தோம்!’’ என்றேன். அதற்கு சென்சார் அதிகாரி, ‘‘படத்தில் திருப்புமுனையே அந்தக் காட்சிதான். இளம் வயதில் தவறு செய் தால் அதன் பின்விளைவு என்ன என் பதை உணர்த்துகிறது. அதனால்தான் அக் காட்சியை வெட்டவில்லை. எல்லோரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என் பதற்காக ‘யூ’ சான்று கொடுத்தோம்’’ என் றார். கதைக்கு சம்பந்தமில்லாமல் கவர்ச் சியாக, அசிங்கமாக வைத்தால்தான் சென்சாரில் கட் செய்வார்கள் என்பதை அன்று புரிந்துகொண்டோம்.

‘சினிமா எடுத்துப் பார்’ என்ற சவாலை ஏற்று பல சங்கடங்களுக்கு மத்தியில் படத்தை வெளியிட்டோம். தவறு செய்த பெண்ணை மன்னித்து வாழ வைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கிளை மாக்ஸை மாற்ற சொன்ன திருச்சி விநி யோகஸ்தரும் படத்தை பார்த்துவிட்டு ‘‘நீங்க ஜெயிச்சீட்டீங்க முத்துராமன் சார். உங்க கிளைமாக்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்’’ என்றார்.

படத்தில் ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலை எழுதியிருந்த கண்ண தாசன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, படம் எனக்குப் பெரிய தாக்கத்தை கொடுக் கிறது. சுஜாதா கதாபாத்திரம் கண் முன் னேயே சுற்றி சுற்றி வருகிறது. வித்தி யாசமான படமாக எடுத்துவிட்டீர்கள்’’ என்று என்னையும் பஞ்சுவையும் பாராட்டி னார். தம்பிகளுக்கு அண்ணன் கொடுத்த ஆஸ்கர் விருதாக அதை எடுத்துக்கொண் டோம். பட்ட கஷ்டமெல்லாம் படத்தின் வெற்றியில் கரைந்து போனது. இளங்கோ கலை மன்றம் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் வெற்றிக்கு விழா எடுத்தது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் விருது கொடுத்தார். புதியவர்களை ஊக்குவித்த இளங்கோ கலை மன்றத் துக்கும், இளங்கோ வீரப்பனுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியது.

காவிய கவிஞர் வாலி என் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக் கிறார். இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு படம் ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ மணியனின் கதை. திரைக்கதை, வசனம், பாடல்கலை வாலி எழுதியிருந்தார்.

கணவன், மனைவியை கவனிக் காமல் இருந்தால் மனைவி தவறான வழிகளில் போக வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன படம். கதாபாத்திரத்தின் விரகதாபத்தை அள வுக்கு அதிகமாக சொன்னதால் படத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங் களுக்கு வருத்தம். அதைவிட வருத்தம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் எல்லா படங்களுக்கும் எடிட்டரான ஆர்.விட்டல்.

எழுத்தாளர் பிலகிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, குடும்பப் பின்னணி கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். அந்தக் கதைதான் ‘ஒரு கொடி யில் இரு மலர்கள்’. அந்தப் படத்துக்கு வசனம் வாலி சார்தான். அந்தப் படத்தின் வசனம் கவிதையாகவே இருந்ததைப் பலரும் பாராட்டினார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயத் தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ படத்தின் வேலைகள் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தன. அதற்கு வசனம் எழுதுவதற்காக வாலி சார் சேலத்துக்கு வந்திருந்தார். என் குழுவினர் என்னிடம் வந்து ‘வாலி சார் இரவு நேரத்தில் அள வுக்கு அதிகமாக மது அருந்துகிறார்’’ என்றார்கள்.

அடுத்த நாள் அவரை சந்தித்து, அதைப் பற்றி கேட்டேன். ‘‘யார் சொன்னது, யார் சொன்னது?’’ என்று வியப்பாக கேட்டார். ‘‘நாம் இருப் பது சினிமா துறை. இங்கே ரகசியம் எல்லாம் எட்டுத் திக்குக்கும் தெரிந்து விடும்’’ என்று கூறினேன். நான் ‘கனிமுத்து பாப்பா’ படத்தை இயக்கும் நேரத்தில் வி.சி.குகநாதனின் அலுவலகத்துக்கு எதிர்வீடுதான் வாலி வீடு. மாலை நேரத்தில் வாலி சாரோடு பேசிவிட்டு, அவர் மனைவி ரமண திலகம் கொடுக் கும் காபியை குடித்துவிட்டு, அவர் மகன் பாலாஜியோடு விளையாடுவேன். இதனால் நான் வாலி சார் குடும்பத்தில் ஒருவனாகியிருந்தேன். அந்த உரிமை யோடு அவரிடம் பேசினேன்.

‘‘உங்கள் குடும்பத்தில் ஒருவ னாக சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந் தீர்கள். உங்கள் கவிதைகளையும், பாடல் களையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அடையும் அள வுக்கு உங்கள் எழுத்துக்கள் இருக்கின் றன. நீங்கள் குடிக்கு அடிமையாக லாமா? உங்கள் மனைவி ரமண தில கத்தையும், மகன் பாலாஜியையும் நினைத்துப் பாருங்கள்’’ என்று மன அழுத்ததுடன் எடுத்துச் சொன்னேன்.

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘இனிமேல் எந்தச் சூழலிலும் குடிக்க மாட்டேன்’’ என்று என் கையில் அடித்து சத்தியம் செய்தார். அன்று முதல் வாலி குடிப்பதை விட்டுவிட்டார். இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. வாலியின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருமுறை வாலியைப் பார்த்தபோது, ‘‘என்னய்யா, நாங்க எவ்வளவோ சொல்லியும் குடிப்பதை நிறுத்தாத நீ, இப்போ எப்படி நிறுத்தினே?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நடந்ததை எடுத்து கூறி யிருக்கிறார். வாலி சார் கைகளில் இரண்டு சாக்லேட்டை கொடுத்த எம்.ஜி.ஆர் ‘ஒன்று உனக்கு. இன்னொன்று முத்துராமனுக்கு!’’ என் றாராம். இந்த சம்பவத்தை துக்ளக் பத்திரிகையில் வாலியே எழுதியிருந்தார்.

இன்றைக்கு உங்களோடு இதைப் பகிர்ந்துகொள்ள காரணம், தற்போது குடிப் பழக்கம் குடும்பத் தலைவர்களை, தொழிலாளர்களை, மாணவர்களை சீரழித்து வருகிறது. அதனால் தமிழ்க் குடும்பங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. அடுத்த தலைமுறை முழுவதும் குடிக்கு அடிமையான தலைமுறையாக ஆகிவிடுமோ என்கிற பயம் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு வருத்தமான மனநிலையில் என் கண்களில் கண்ணீர் வந்து, அந்த துக்கம் எழுதவிடாமல் தடுக்கிறது. அதனால் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சந்திப்போம்.

- இன்னும் படம் பார்ப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x