Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM
சில பாடல்களைக் கேட்டால் நாம் கண்கள் சொருகும். உறக்கத்திலும் சில பாடல்கள் நம் மனத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இன்னும் சில பாடல்கள், இசை, வரிகள் ஆகியவற்றுடன் அதைப் பாடியவரின் குரலும் தீராத இனிமையுடன் நம்மைத் தொடரும். அப்படிப்பட்ட ஒரு குரல் பத்மலதாவுடையது.
தற்போது, தாமரையின் வரிகளில் ஜிப்ரான் இசையில் ‘மாறா’ படத்தில் இடம்பெற்று ஹிட்டடித்திருக்கும் `தீராநதி.. தீராநதி..’. என்கிற பாடலைப் பாடியிருக்கிறார் பத்மலதா. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துளு என பல இந்திய மொழிகளில் பாடிவரும் இவர், ‘ஒருநாள் கூத்து’ படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே’, ‘தனி ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணால கண்ணால’ உள்ளிட்ட பல பாடல்களில் உருகவைத்தவர். மேற்கத்திய பாணியிலான ஓப்ரா பாடும் முறையைக் கற்றுத் தேர்ந்திருக்கும் இவர், இந்துஸ்தானியையும் முறையாக கற்றிருக்கிறார். திரையிசை, சுயாதீன இசை ஆகிய இரண்டு வகைமைகளில் பிரகாசித்து வரும் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
குடும்பத்தில் நீங்கள்தான் முதல் தலைமுறை இசைக் கலைஞரா?
என்னுடைய தாத்தா பாடியபடியே நாடகங்களில் நடித்தவர். என்னுடைய அப்பா கர்னாடக இசையை முறையாகப் பயின்று, அகில இந்திய வானொலி நிலையத்தில் கலைஞராக இருந்தவர். அவர்களுக்குப் பின் சினிமா என்னைப் பிரபலப்படுத்தியிருக்கிறது.
உங்களின் இசைப் பயணம் எங்கிருந்து தொடங்கியது?
இசைக் குழுக்களில் பாடுவது, ‘கவர்-வெர்ஷன்’களைப் பாடுவது ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது போன்றவற்றின் வழியாக புதிய தலைமுறை பாடகர்கள் பலருக்கும் இன்று திரையுலகில் கவனம் கிடைக்கிறது. நான் சற்று மாறுபட்டவள். புதிய குரல் தேர்வுக்காக ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அங்கு சென்று பாடி முதல் வாய்ப்பு பெற்றேன். அந்தப் படத்தின் பெயர் `குருவம்மா’. சாகித்யா இசை அமைத்திருந்தார். தொடர்ந்து சிறிய அளவில் பல முயற்சிகள் செய்துவந்தேன். `குட்டிப்புலி’ படத்தில் பாடிய ‘அருவாக்காரன்’ பாடலுக்குப் பிறகே வெளியே தெரியத் தொடங்கினேன்
தனியிசைத் தொகுப்பு ஏதாவது வெளியிட்டிருக்கிறீர்களா, அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா?
நண்பர் அல்அலிமிர்சாக்குடன் இணைந்து நிறைய இசைப் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறோம். ஜாஸ், ப்ளூஸ், ப்ளு கிராஸ் போன்ற இசை வகைகளில் தமிழில் முயற்சி செய்து பார்த்திருக்கிறோம். `பாரதிதாசன் ப்ளூஸ்’ மதன் கார்க்கியின் ‘டூபாட்’டில் வெளிவந்தது. பிறகு ‘பிக் எஃப்.எம்’ வானொலியில் முதலிடத்தைப் பிடித்தது. அண்மையில்கூட `கந்த சஷ்டி கவசத்தை’ மேற்கத்திய செவ்வியல் வடிவமான ஓப்ராவில் பாடியிருக்கிறோம். வைரமுத்துவின் `ஓடை நீரில் மீன்கள் பின்னால் ஓடித் திரிந்தது ஒரு காலம்..’ என்னும் பாடலை பாடியிருக்கிறோம். இன்றைக்கு தனிப் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கின்றது.
`உத்தம வில்லன்’ படத்தில் - கமல்ஹாசன் வரிகளைப் பாடிய அனுபவம் எப்படி இருந்தது?
பாடுவதோடு அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பிரகலாத சரித்திரம்’ நாடகத்தில் பிரகலாதன் கதாபாத்திரத்துக்கு பின்னணியும் பேசினேன். கமல்ஹாசன் சார் எழுதிய `காதலாம் கடவுள் முன்’ பாடலை பாடியது மறக்கமுடியாத அனுபவம். அந்தப் பாடலை தெலுங்கில் நான் பாடியதைக் கேட்ட எஸ்.பி.பி. சார் பாராட்டிது மிகவும் பெருமையான தருணம். இந்த வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான், கமல் சார் இருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
வார்த்தைகளில் அர்த்தம், இசையின் நுணுக்கம் - உங்களை முதலில் ஈர்க்கும் விஷயம் எது?
வார்த்தைகளின் அர்த்தம்தான் இசையின் நுணுக்கத்துக்கு அடிப்படை என்பது என் கருத்து. ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய உணர்ச்சியைக் கொடுத்துப் பாடுவதன் மூலமே ஒரு பாடல் மேன்மை அடையும். அதற்குப் பிறகுதான் சங்கதிகள் சேர்ப்பது, ஆலாபனை செய்வது எல்லாம் வரும். `இறங்கியே வருகுது வாசல்வழி…’ என்று ‘மாறா’ படத்தின் `தீராநதி’ பாடலில் ஒரு வரி வருகிறது. அதில் `இறங்கியே’ என்கிற இடத்தில் மெட்டே கீழே வருவதுபோல் அமைத்திருப்பார் ஜிப்ரான்.
இசைத் துறையில் திறமையான பெண்கள் பலர் இருந்தும் தங்களை பாடகியாக மட்டுமே சுருக்கிக் கொள்வது எதனால்?
நிறைய பெண்கள் இன்று ‘ராப்’ பாடுகிறார்கள், சிலர் ‘பீட் பாக்ஸ்’ போட்டபடி பாடுகிறார்கள், சிலர் ‘அகபெல்லா’ பாணியில் பாடி அசத்துகிறார்கள். நிறைய பாணிகளில், நிறைய பெண்கள் இசை வானில் புதிய திறமைகளாக ஜொலிக்கின்றனர். அவரவருக்கு ஏற்ற பாணியில் பாடகியாகவும் பாடலை எழுதுபவர்களாகவும் சுடர்விடுகின்றனர்.
இசை வாத்தியம் ஏதாவது பழகி இருக்கிறீர்களா, எந்த வகையான பாடல்களைக் கேட்கப் பிடிக்கும்?
மேற்கத்திய செவ்வியல் பாணியில் பாடுவதற்கேற்ற `கார்ட்ஸ்’களை கீபோர்டில் வாசிக்கத் தெரியும், அவ்வளவுதான். இந்துஸ்தானியிலும் பாடுவதற்கு உதவும் அளவுக்கு ஆர்மோனியம் வாசிப்பேன். பழைய பாடலோ புதிய பாடலோ எந்த மொழி, எந்த வகைமையான பாடலாக இருந்தாலும் நிறைய கேட்பேன். கேட்பது ஒரு அகராதி போல. கேட்டு மகிழ்வதிலிருந்து எனக்கு தேவைப்படும் நுணுக்கங்களை எடுத்துக்கொண்டு அதை பயிற்சி செய்து பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT