Published : 13 Nov 2015 12:16 PM
Last Updated : 13 Nov 2015 12:16 PM
கதாபாத்திரத்துக்காக முழுமையான அர்ப்பணிப்பைத் தரும் நடிகர்களில் ஒருவர் ஆடுகளம் கிஷோர். ‘ஹரிதாஸ்’ படத்துக்குப் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘யாத்ரீகன்'. “இந்தப் படத்துக்காக நேபாளத்தில் உள்ள ஒரு புத்த மடாலயத்தில் நுழைய வேண்டியிருந்தது. ‘மொட்டையடித்து, அவர்களது உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி’ என்று மடத்தின் நிர்வாகி கறாராகச் சொல்லிவிட்டார். நிஜமாகவே மொட்டையடித்து பவுத்ததுறவியின் உடையை அணிந்து உள்ளே சென்றார் கிஷோர். அவரோடு நானும் அப்படித்தான் உள்ளே நுழைந்தேன்” என்கிறார் யாத்ரீகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்.
படத்தின் தலைப்பு தேடலும் கவித்துவமும் நிறைந்ததாக இருக்கிறதே... இது என்ன கலைப்படமா என்றால்.. “ இல்லை ஒரு மனிதனின் விறுவிறுப்பான வாழ்க்கை” என்று படத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
பயணமே கதை
இது 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக் கதை. கதையின் நாயகன் ஆதி. ஒருமுறை சிறை செல்ல நேர்கிறது. நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட அவனது கால்களும் கண்களும் விடுதலைக்காக ஏங்குகின்றன. அந்த அறைக்குள் உலகம் பற்றிய பல கேள்விகள் அவனுக்கு அலையடிக்கின்றன. விடுதலை கிடைத்ததும் தன் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி அவன் பல இடங்களுக்குப் பயணம் செய்கிறான்.
பயணம் ஒரு நீர்ச்சுழல் போல அவனை இழுத்துச் செல்கிறது. அலைகிறான்; திரிகிறான்.. முடிவில் அவன் பெற்ற விடைகள் என்ன என்பதுதான் கதை.” என்றவர் ஆதியாக நடிக்க கிஷோரை விட்டால் எனக்குச் சரியான தேர்வாக வேறு யாரும் தோன்றவில்லை எனும் இயக்குநர். கிஷோருடன் சாயாசிங், ‘டூரிங் டாக்கீஸ்' சுனுலட்சுமி, ‘கடல்' சரண் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள் என்கிறார்.
இதுவரை
“ ‘யாத்ரீகன்’ படப்பிடிப்புக்காக இதுவரை நேபாளம், காங்க்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, ,காலிம்பான் போன்ற இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தித் திரும்பி வந்திருக்கிறோம். இதேபோல் இன்னும் ஆறு இடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது” என்றார் இயக்குநர் ஜெயபால்.
நேபாளத்தில் ஒரு புத்த மடாலயத்துக்குச் சென்று பவுத்தம் பற்றிய ஒரு காட்சியைப் படமாக்க விரும்பினோம். இது தொடர்பாக அவர்களிடம் பேசவிரும்பியபோது மடத்தின் உள்ளே நுழைய வேண்டும் என்றால் தலை மழித்து துறவியின் உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி என்று கூறிவிட்டார்கள்.
கிஷோர் இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவரா? அப்போதே தலையை மழித்துக்கொண்டு உள்ளே சென்று அவர்களைச் சந்தித்தார். அங்கேயே அந்தக் காட்சியைப் படமாக்கித் திரும்பினோம்.
புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என பவுத்தம் உரைக்கும் இந்தப் பதங்களுக்குப் பொருள் பலவாறு கூறப் பட்டாலும் நமது பவுதீக வாழ்க்கையில் அவை எப்படிப் பரிணாமப்படுத்தப்பட வேண்டும் என்கிற உண்மையான விளக்கத்தைப் பவுத்த துறவிகள் நேரடியாகக் கூறப் படமாக்கினோம். அதோடு நின்றுவிடவில்லை. புத்த பூர்ணிமா தினத்தன்று படப்பிடிப்பு நடத்தி ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலத்தையும் பதிவு செய்து திரும்பியிருக்கிறோம்.” என்று கூறும் இயக்குநர்
‘ ‘நாயகனின் கேள்விகளுக்கு விடை தேடும் ‘யாத்ரீகனைத்' தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பயண அனுபவமாகப் படையல் செய்வோம்'' என்கிறார்.
தொழில்நுட்பக் குழு
தனது தொழில்நுட்பக்குழு பற்றிப் பேசும்போது
“எனது ஒளிப்பதிவாளர் வி.வெங்கடேஷ் ஜீவாவின் மாணவர். இது அவருக்கு இரண்டாவது படம். என்றாலும் இதுவே எனக்கு முதல் படமாக அமைந்திருக்கக் கூடாதா என்று ஏக்கத்துடன் அவர் கூறும் அளவுக்குக் கதையிலும் காட்சியமைப்பிலும் கரைந்து படமாக்கியிருக்கிறார். படத்தில் வரும் லொக்கேஷன்கள் கதாபாத்திரங்களைப் போல மிளிரும்; அவை ரசிகனோடு உறவாடும்.
ஒளிப்பதிவுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு இசைக்கும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ஜி.ரங்கராஜ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சென்னையில் இசைப்பள்ளி நடத்தி வருகிறார். கலை இயக்கத்தைக் கவனித்துக் கொள்பவர் சாபு சீனு. இவர் சாபுசிரிலின் மாணவர். நாக் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் சோமசேகர ரெட்டி, இவர் பழம்பெரும் தெலுங்குப்படத் தயாரிப்பாளர் நாகேஸ்வர ரெட்டியின் மகன்.” என்றவரிடம் இப்படியொரு கதையை முதல் படமாக எடுக்க எப்படித் துணிச்சல் வந்தது என்றால் “அதற்கு என் படம் பதில் சொல்லும்” என்கிறார்.
‘‘இந்தக் கதையை தங்கள் கதையாக ரசிகர்கள் உணர்வார்கள். காரணம் நாயகன், அவன் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள், இயற்கை இவை அனைத்தும் சுவாரஸ்யத்தின் தோரணங்களாக ரசிக்க வைக்கும். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும். இவை பார்க்கும் ஒவ்வொருவரையும் கதையுடன் நேரடியாகத் தொடர்புபடுத்திவிடும். கண்ணதாசன் சொன்னதுபோல நம் அனைவரது வாழ்க்கையும் ஒரு பயணம்தானே? '' என்று முடித்தார் இயக்குநர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT