Published : 20 Nov 2015 11:08 AM
Last Updated : 20 Nov 2015 11:08 AM
கே.எஸ். கோபால கிருஷ்ணன்
கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கிய முதல் படம் ‘சாரதா. அதை இப்போது பார்க்கும்போது எப்படி ஒரு புதிய இயக்குநரால் அந்தக் காலத்தில் இப்படி ஒரு வித்தியாசமான படம் எடுக்க முடிந்தது என ஆச்சரியமாக இருக்கும். ஸ்ரீதர் வசனகர்த்தாவாக இருந்த காலத்தில் அவருக்கு ‘அமரதீபம்’போன்ற படங்களில் வசன உதவியாளராக இருந்தவர் கே.எஸ்.ஜி. பின்னர் இவரே வசனகர்த்தாவாக உயர்ந்து கிருஷ்ணன் பஞ்சுவின் ‘தெய்வப்பிறவி’ படத்துக்கு வசனம் எழுதினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்களும் எழுதியிருக்கிறார். மல்லியம் என்ற கிராமம்தான் அவரது சொந்த ஊர். தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் திலகம்’என்று பட்டம் பெறும் அளவுக்கு 1960-களில் கொடி கட்டிப் பறந்தார். அவர் புகழ்பெற்ற அளவுக்கு அவர் மீதான வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.
கோபக்கார இயக்குநர்
இவரது படங்களுக்குப் பெண்கள் அதிகம் வருவார்கள். கதைக்கருவைப் பொறுத்தவரை இவர் எடுத்த ‘செல்வம்’ முழுக்க பாலியல் சார்ந்தது. நாற்பது வருடங்களுக்கு முன் ’செல்வம்’எதிர்கொண்ட கடும் விமர்சனம் சொல்லி முடியாது.
கே.எஸ்.ஜி எனப்படும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உச்சத்தில் இருந்த காலத்தில் ‘மிகுந்த வாய்த்துடுக்கு உள்ளவர்; யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவார்; விநியோகஸ்தர்களிடம் முகத்தில் அடித்தாற்போல பேசி விடுவார்’ என்றெல்லாம் பேச்சு நிலவியது.
சாதாரணக் கதாசிரியராய் இருந்தபோதே ஏ.வி.எம் ஸ்டூடியோவில் கே.எஸ்.ஜி சுவாரசியமாக டீ குடித்தவாறே ஒரு படத்தின் கதையில் குறிப்பிட்ட காட்சியொன்றை உணர்ச்சிவசப்பட்டு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஏ.வி.எம் செட்டியாரிடம் அனிச்சையாக, டீ குடித்த ‘கப்’பைக் கொடுத்துவிட்டாராம்.
‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் எஸ்.எஸ்.ஆர் எழுதிய கடிதம். சிவாஜி வாசிக்க வேண்டும். முண்டா பனியன் நாலு முழ வேட்டியுடன் செட்டில் இயக்கும் கே.எஸ்.ஜி 'நீங்கள் கடிதத்தை வாசிக்கிற முகபாவம் கொடுத்தால் போதும். ராஜேந்திரன் குரலில் படத்தில் ஓவர்லேப் செய்துகொள்வேன்' என சொல்லியதும் “ யோவ் கூனா கானா நானே என் குரல்ல பேசிடுறேனே” (சிவாஜி செல்லமாக ‘கூனா கானா’ என்றுதான் கே.எஸ்.ஜி-யைக் கூப்பிடுவாராம்) என்று சிவாஜி கூற, மூக்குப்பொடியை உறிஞ்சிய கே.எஸ்.ஜி “இது என் படம், நான் டைரக்டர். நான் சொல்றபடி செய்யுங்க” என்றவாறே நிற்காமல் மற்ற விஷயங்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாராம்! சிவாஜி சிரித்துவிட்டாராம்!
‘பேசும் தெய்வம்’ படப்பிடிப்பில் சிவாஜி ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறார். மற்ற நடிகர்களையெல்லாம் பத்மினி உட்பட நடிக்கிறபோது பாராட்டும் கே.எஸ்.ஜி தன்னை மட்டும் பாராட்டுவதேயில்லை. சிவாஜி நடித்து முடித்ததும் அடுத்த ஷாட் போய்விடுவார் இயக்குநர். குழந்தை போல ஏங்கி சிவாஜி கேட்டிருக்கிறார்: “ஏன்டா கூனா கானா! என் நடிப்பைப் பாராட்ட மாட்டியா? மத்தவங்கள மட்டும்தான் பாராட்டுவியா?” கே.எஸ்.ஜி. இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் கண்கலங்கிப்போய்ச் சொன்னாராம். “நீங்க எப்பவுமே என் எதிர்பார்ப்புக்கும் மேலே மிகவும் அற்புதமாக, ரொம்பப் பிரமாதமாக நடித்துவிடும்போது உங்களைப் பாராட்ட எனக்கு என்ன தகுதியிருக்கிறது?” இதைக்கேட்டு சிவாஜி அழுதுவிட்டாராம்!
கே.எஸ்.ஜி-க்குப் பிடித்த நடிகர்
இவரது பல படங்களில் எஸ்.வி. ரங்காராவ் நடித்திருக்கிறார். ‘சாரதா’ தொடங்கி, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘கற்பகம்’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பேசும் தெய்வம்’, ‘கண் கண்ட தெய்வம்’ என்று எத்தனையோ படங்கள் ரங்காராவ் நடிப்பால் பெருமைப்படுத்தப்பட்டவை. ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் ரங்காராவ், எஸ்.வி. சுப்பைய்யா, பத்மினி எல்லோரும் அருமையாக நடித்திருப்பார்கள்.
இந்தப் படம் மீண்டும் ரங்காராவ், சுப்பையா இருவரும் மறைந்த பின் (ரங்காராவ் 1974-ல் மறைந்தார்;1980-ல் சுப்பையா மறைந்தார் )பல வருடம் கழித்து சிவாஜி, தேங்காய் சீனிவாசன்,கே.ஆர். விஜயா நடிப்பில் ‘படிக்காத பண்ணையார்’ என்ற தலைப்பில் கே.எஸ்.ஜி-யால் இயக்கப்பட்டு வெளியானது. கதை சொல்லும்போதும் சரி, காட்சியை விளக்கும்போதும், நடிகர்கள் நடிக்கும்போதும் உணர்ச்சிவசப்பட்டு கே.எஸ்.ஜி அழுதுவிடுவார்.
நடிகர்களை வாட்டியெடுத்தவர்
‘குறத்தி மகன் படத்தில் கே.எஸ்.ஜி என்னை ஒரு ஓரமா நிறுத்திட்டார் அண்ணே..’ என்று ஆர்.சி.சக்தியிடம் கமல் ஹாசன் அழுதிருக்கிறார்.
கே.ஆர். விஜயாவைப் போலவே சாவித்திரியையும் ‘ஆயிரம் ரூபாய்’ படத்தில் குறவர் இனப் பெண்ணாக நடிக்க வைத்திருக்கிறார். ‘கை கொடுத்த தெய்வம்’சாவித்திரிக்கு மிகவும் முக்கியமான படம்.
‘பணமா பாசமா?’ படத்தில் எஸ்.வரலட்சுமி, பகவதி, விஜய நிர்மலா மூவரும் பின்னியெடுத்திருப்பார்கள்.
அந்த பணத்திமிர் மாமியார் வரலட்சுமி, பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ‘அலேக்’ நிர்மலா என்று பேர்பெற்று ‘எலந்த பயம் எலந்த பயம்’ பாட்டின் மூலம் கொடிகட்டினார் விஜய நிர்மலா.
‘பணமா பாசமா?’மாமியார் ரோலுக்கு எஸ்.வரலட்சுமி நடிப்பு முதலில் இயக்குநர் கே.எஸ்.ஜிக்கு கொஞ்சமும் திருப்தியே இல்லையாம். சாவித்திரியிடம் போய் “வரலட்சுமி சரியில்லை. நீதான் அந்த ரோலை பிரமாதமாகச் செய்ய முடியும்” என்று கெஞ்சியிருக்கிறார். ஜெமினி கணேசனுக்கு மாமியாராகச் சாவித்திரி!
சாவித்திரி பதில்: “வாத்தியாரே! நான்தான் அந்த மாமியார் ரோல் செய்தே ஆக வேண்டும் என்று நீங்க நினைச்சா ஹீரோவ மாத்திடுங்க.”
கே.எஸ்.ஜி-க்கு ஹீரோவை மாற்ற விருப்பமே இல்லை.
குருதட்சிணை
கற்பகம் ஸ்டூடியோ நிறுவப்பட்ட இடம் அப்போது இவருக்கு கே.ஆர். விஜயா கொடுத்தது. மிக காஸ்ட்லியான குருதட்சிணை. அதை நெகிழ்ச்சியுடன் கே.எஸ்.ஜி குறிப்பிடுவார். ‘இந்த உலகத்திலேயே சம்பாதித்த சொத்தை மற்றவருக்குத் தானமாக கொடுத்தவர் கே.ஆர்.விஜயாதான்’ என கே.எஸ்.ஜி நன்றியோடு உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிடுவார்.
திரையுலகில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த, செயலூக்கம் மிகுந்த இயக்குநர் ஒருவர் முப்பது ஆண்டு களுக்கும் மேலாக எப்படி மக்கள் கவனத்திலிருந்து முழுமையாக விலகி மறைய முடிந்திருக்கிறது என்பது திரையுலகம் கண்ட விசித்திரங்களில் ஒன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT