Published : 27 Nov 2015 12:46 PM
Last Updated : 27 Nov 2015 12:46 PM
இந்தக் காலத்துச் சிறுவர்களின் சிந்தனையும் செயல்பாடும் அதிசயத் தக்கதாக உள்ளதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. சமீபத்தில் தஞ்சை அருளானந்த நகரில், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினத்தன்று இந்தக் குறும்பட ஷூட்டிங் அரங்கேறியது.
குறும்பட இயக்குநராக அவதாரமெடுத்த ஒரு சிறுவன், தன் வயதொத்த ஐந்து சிறுவர்களை ஸ்மார்ட் மொபைல் ஃபோன் கொண்டு அதட்டி, மிரட்டி இயக்கிக்கொண்டிருந்தான் - ரெடி, நடி, ஸ்டார்ட் கேமரா என்று ஆரவாரமாகத் தொடங்கியது ஷூட்டிங்.
முதல் டேக் - நடிகர்களுக்கு உற்சாகச் சிரிப்பை அடக்க முடியவில்லை. இயக்குநருக்கு செம கோபம் வர, ‘டேய், சிரிக்காம வாங்கடா’ என்று உத்தரவு பறக்கிறது. டென்ஷனாகும் இயக்குநரைப் பார்த்து ‘கூல்.., கூல்’ என்று நடிகர்கள் நக்கலடிக்கின்றனர். இரண்டாவது டேக் ஆரம்பமாகிறது - அண்ணனும் தம்பியுமாக இரு சிறுவர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது எதிரிலிருந்து வரும் சற்றே பெரிய சிறுவன் ஒருவன் தம்பியின் மீது உரசியபடி நடந்து போகிறான். தன் தவற்றை உணர்ந்து உடனேயே அவன் ‘சாரிடா’ என்று மன்னிப்புக் கேட்கிறான். “சாரி‘டா’வா? டா வா?” என்று அந்தச் சிறுவன் பொங்கி எழ, இருவருக்கும் அடிதடியாகிறது. இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அண்ணன்காரன், தம்பிக்கு ஆதரவாகக் களம் இறங்க, முட்டல், மோதல், தள்ளல் என்று காட்சி விரிவடைகிறது.
அந்த நேரம் பார்த்து மேலும் இரண்டு சிறுவர்கள் அந்தப் பக்கம் வருகின்றனர். சகோதரர்களால் கீழே தள்ளப்பட்டுக் கிடக்கும் தமது நண்பனைக் கண்டதும் இவர்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. இவர்களும் சமரில் இறங்குகின்றனர். அப்புறம் என்ன, ஒரே புழுதிப் புயல்தான்! கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் தோற்றன போங்கள்!
சகோதரர்களின் பெரும்பான்மைப் பலம் குறைந்துபோனதால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி, ஒரு வழியாக முறைப்புடன், விறைப்புடன் ‘நண்பர்களாகவே’ பிரிகின்றனர்.
“படத்துக்கு என்ன தலைப்பு, ‘நண்பேன்டா’வா?” என்று நான் கேட்டேன். ‘‘சிங்கிளா சிக்குவான்டா’’ என்றான் அந்த இயக்குநர் பொடியன்.
யார் கண்டது, விரைவில் யூடியூபில் வெளியானாலும் ஆகலாம்!
(இங்கே வெளியாகியிருக்கும் படத்தில் இருப்பவர்கள் மாடல்களே… ‘பட்டுப்பூச்சி’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கும் மாணவர்கள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT