Published : 13 Nov 2015 12:31 PM
Last Updated : 13 Nov 2015 12:31 PM
மனம் ஒரு விசித்திர உலகம். ஒருவர் தன் வாழ்வில் கடந்துவந்த மனிதர்களை நிரந்தரமாகக் குடியமர்த்தியிருக்கும் பிரதேசம். அனுபவங்களின் நிழல்கள் நிரந்தரமாகப் படிந்திருக்கும் அந்த இருள் குகைக்குள், இளம் வயதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் கோர உருவங்களாகத் தங்கிவிடும்.
எல்லைகளற்று விரியும் மனதை நிர்வகிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் அதன் எதிர்மறையான எண்ணங்களுக்குப் பலியாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு மனிதனைப் பற்றிய கதைதான் பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’(1980). ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் இப்படத்தை எடுத்ததாகப் பின்னாட்களில் குறிப்பிட்டார் பாலுமகேந்திரா.
பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இப்படத்தில் கல்கத்தா விஸ்வநாத், பானுச்சந்தர், மோகன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இளையராஜாவின் 100-வது படம். தன் முதல் படத்திலேயே இளையராஜாவுடன் பணியாற்ற விரும்பினாலும், அது சாத்தியமானது தனது மூன்றாவது படமான மூடுபனியில்தான் என்று பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் இசையும், அர்த்தமுள்ள மவுனங்களும் நிறைந்தவை பாலுமகேந்திராவின் படங்கள். அவரது பயணம் முழுவதும் அவருக்குத் துணை நின்றவர் இளையராஜா.
‘பருவ காலங்களின் கனவு’ எனும் பாடலுடன் படம் தொடங்கும். எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் இனிமை பொங்கும் உற்சாகத்தின் இசை வடிவம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் அமர்ந்து காதலனை அணைத்தபடி செல்லும் பெண்ணின் குதூகலத்தைப் பிரதியெடுக்கும் பாடல் இது. கங்கை அமரன் எழுதியது. காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் வாகனத்தின் வேகமும், கட்டற்ற சுதந்திரத்துடன் துடிக்கும் மனதின் பாய்ச்சலும் இப்பாடல் முழுவதும் நிரம்பித் ததும்பும்.
‘தகுதகுததாங்குதா தகுதகு’ என்று களிப்புடன் கூடிய குரலில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங் இப்பாடல், சென்றடையும் தூரத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பாடல் முழுவதும் அதிர்ந்துகொண்டே இருக்கும் டிரம்ஸ், அதீத மகிழ்ச்சியில் வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத் துடிப்பை நினைவுபடுத்தும். ஒரே ஒரு சரணத்தைக் கொண்ட இப்பாடலின் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், மாலை நேரச் சூரியக் கதிர்களினூடே வாகனங்கள் மீது மிதந்துசெல்லும் அனுபவத்தைத் தரும் எலெக்ட்ரிக் கிட்டார் என்று ஒரு இன்பச் சுற்றுலாவை இசைத்திருப்பார் இளையராஜா.
உல்லாசம் ததும்பும் மலேசியா வாசுதேவனின் குரல் பாடலின் மிகப் பெரிய பலம். மெல்லிய உணர்வுகள் கொண்ட இளம் காதலியை அரவணைக்கும் குரலில், ‘தழுவத்தானே தவித்த மானே…’ என்று பாந்தமாகப் பாடியிருப்பார்
‘ஸ்விங்… ஸ்விங்’ எனும் ஆங்கிலப் பாடலை டாக்டர் கல்யாண் பாடியிருப்பார். விஜி மேனுவல் எழுதிய இந்தப் பாடல், கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் உத்வேகத்தைத் தரும் வகையில் இசைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் கிட்டார் இசையில் தெறிக்கும் உத்வேகம் பிரதாப் போத்தனுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தைத் தட்டியெழுப்பும். சித்தியின் கொடுமையால் அத்தனை பெண்களையும் வெறுக்கும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை, படத்தின் போக்கில் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் உணர்த்திவிடும்.
அதேசமயம், மறைந்துபோன தனது தாயின் மென் சுபாவத்தைக் கொண்ட பெண்ணின் (ஷோபா) பின்னால் பித்தேறிச் சுற்றுவான் நாயகன். அவனது மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் தாலாட்டுப் பாடல் ‘அம்மா பொன்னே ஆராரோ’. உமா ரமணன் பாடியிருக்கும் இந்தக் குறும்பாடல், நாயகனின் ஆழ்மனதின் வேதனைகளுக்கு மருந்திடும் மந்திரம்.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘என் இனிய பொன் நிலாவே’. கங்கை அமரன் எழுதிய இப்பாடல், உலக அளவில் கிட்டார் இசையின் நுட்பங்களையும், அழகியல் கூறுகளையும் கொண்ட மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு ஷோபாவைக் கடத்திவந்திருக்கும் பிரதாப், தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சுவார். உயிர் பயத்துடன் அங்கு தங்கியிருக்கும் ஷோபா, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, கிட்டாரும் கையுமாக இருக்கும் பிரதாப்புக்குப் பாடத் தெரியுமா என்று கேட்பார். தன் மனதின் குரலை வெளிப்படுத்தும் விதமாக, சற்றே கூச்சத்துடன் பாடத் தொடங்குவார் பிரதாப்.
மெல்லிய கிட்டார் ஒலியுடன் தொடங்கும் இப்பாடலின் வழியே, சுய இரக்கமும் மர்மமும் நிறைந்த அம்மனிதனின் ஆழ்மனதில் கிடக்கும் அன்பு மேலேறி வரும். நிகழ்விடத்திலிருந்து கனவுலகுக்குச் செல்லும் அவன், அந்த உலகில் தன் காதலியின் அருகாமையை, அன்பை உணர்வான்.
முதல் நிரவல் இசையில் தேவதைகளின் வாழ்த்தொலியாக ஒலிக்கும் பெண் குரல்களின் கோரஸைத் தொடர்ந்து அடிவானத்தில் மிதக்கும் மாலை நேரத்து சொர்க்கம் நம் மனதில் உருப்பெறும். இரண்டாவது நிரவல் இசையில், கற்பனை உலகின் சவுந்தர்யங்களை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும், பெருகிக்கொண்டே செல்லும் காதலின் வலியை உணர்த்தும் எலெக்ட்ரிக் கிட்டார் இசையும் ஒலிக்கதிர்களாக நம்முள் ஊடுருவதை உணர முடியும்.
காதலுக்காக இறைஞ்சும் மனமும், இருட்டு உலகிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாகும் நம்பிக்கையும் கலந்த குரலில் பிரவாகமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ். ‘தொடருதே தினம் தினம்’ எனும் வரியைப் பாடும்போது அவர் குரலில் சந்தோஷக் குளிர் தரும் சிலிர்ப்பு தொனிக்கும். அன்பைத் தேடி அலையும் மனதின் தற்காலிக ஏகாந்தம் அது!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT