Published : 20 Nov 2015 11:22 AM
Last Updated : 20 Nov 2015 11:22 AM
'பாஜிராவ் மஸ்தானி’படத்தில் பிரியங்காவும் தீபிகாவும் இணைந்து நடனமாடியிருக்கும் ‘பிங்கா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ஐஸ்வர்யா, மாதுரியின் ‘டோலா ரே’ பாடலின் மாதிரியாக இருக்கும் என்று அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்ததால், பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. ஆனால், ‘டோலா ரே’ பாடலில் மாதுரியும், ஐஸ்வர்யாவும் இணைந்து உருவாக்கிய மேஜிக்கை ‘பிங்கா’ பாடலில் பிரியங்கா, தீபிகாவால் உருவாக்க முடியவில்லை.
‘பாஜிராவ் ‘டோலா ரே’ பாடலின் பிரம்மாண்டமான செட், லைட்டிங் போன்ற அம்சங்கள் ‘பிங்கா’ பாடலில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதேமாதிரி, சரோஜ் கானின் கோரியோகிராபியை ரெமோ டி சௌசாவால் ‘பிங்கா’ பாடலில் நெருங்க முடியவில்லை. ஆனால், மராட்டிய நடனமான ‘லாவணி’யை ‘பிங்கா’ பாடலில் ரசிக்க முடிகிறது. ‘தேவதாஸ்’ படத்தை இயக்கிய சஞ்ஜய் லீலா பன்சாலிதான், இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.‘பாஜிராவ் மஸ்தானி’ டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
மண்ட்டோவின் தாக்கம்
பாகிஸ்தான் இயக்குநர் சர்மத் சுல்தான் கோசத், எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் வாழ்க்கையை ‘மண்ட்டோ’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் மண்ட்டோவின் கதாபாத்திரத்தில் இயக்குநர் சர்மத் சுல்தானே நடித்திருக்கிறார். பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படம் சமீபத்தில் கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவில் (KIFF) திரையிடப்பட்டது. இயக்குநர் சர்மத் சுல்தானும், நடிகை நிம்ரா புச்சாவும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டனர்.
“மண்ட்டோவின் வாழ்க்கை பதற்றம் நிறைந்தது. அவருடைய பணிக்கு சரியாக ஊதியம் கிடைக்கவில்லை. அவருடைய பணிகள் தடை செய்யப்பட்டிருந்தன. கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் ஒருவிதத்தில் நாம் ஓரங்கட்டுகிறோம். நம் இரு நாடுகளிலும் கருத்து சுதந்திரம் எளிமையானதாக இல்லை” என்கிறார் நடிகை நிம்ரா.‘மண்ட்டோ’திரைப்படத்துக்குப் பாகிஸ்தானிலும் அமெரிக்காவிலும் கொல்கத்தா திரைப்பட விழாவிலும் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இயக்குநராகும் கொங்கணா
நடிகை கொங்கணா சென், விரைவில் தன் அம்மா அபர்ணா சென் போலவே இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். ‘டெத் இன் ஏ கஞ்’ (Death in a Ganj) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் கொங்கணாவின் முன்னாள் கணவர் ரன்வீர் ஷோரே நடிக்கிறார். “நான் அடுத்து ரஜத் கபூரின் நாடகம் ஒன்றில் நடிக்கவிருக்கிறேன். அந்த நாடகம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. அதற்குப் பிறகு, கொங்கணாவின் படத்தில் நடிக்கவிருக்கிறேன். படத்தைப் பற்றிய மற்ற விவரங்களை முதலில் கொங்கணாவே அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்கிறார் ரன்வீர்.
இந்தப் படத்துக்கான கதையை கொங்கணா, என்எஃப்டிசியின் ‘ஸ்கிரிப்ட் லேப்’ பில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. தன் அம்மாவைப் போல, நடிப்பையும் இயக்கத்தையும் சேர்த்து கொங்கணா நிர்வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரன்வீரும் கொங்கணாவும் பிரிந்துவிட்டாலும், ரன்வீருடன் பணியாற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் கொங்கணா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT