Published : 16 Oct 2015 11:49 AM
Last Updated : 16 Oct 2015 11:49 AM
வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.
வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.
ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.
மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.
பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.
வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.
முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.
இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.
இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.
மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT