Published : 16 Oct 2015 11:12 AM
Last Updated : 16 Oct 2015 11:12 AM
செல்லப் பிராணிகளை வளர்க்கும் பலருக்கும் அவற்றுடனான அன்றாட வாழ்க்கையின் தருணங்கள் இனம் புரியாத சந்தோஷத்தையும், குதூகலமான அனுபவத்தையும் தரக்கூடியவை. அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் பிரத்யேகமான ஒரு மொழியில் நாம் பேசுவதும் குழைவதும் எப்போதும் மனதுக்கு இதமான தகவல் பரிமாற்றம். இதுதான் இந்தக் கதைக்கான அடிப்படை. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்துக்கொண்டு திரைக்கதையை எழுதியிருக்கிறேன். தமிழ் சினிமாவின் முதல் ‘ஸ்டோனர்’ திரைப்படமாக (STONER MOVIE) இது இருக்கும்” என்று பேச ஆரம்பித்தார் ‘சிம்பா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அரவிந்த் ஸ்ரீதர்.
இந்தப் படத்தில் வரும் செல்லப் பிராணிதான் ஹீரோவா?
இல்லை. பரத் கதாநாயகன். அவருக்கு இணையான மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடிக்கிறார். கதாநாயகியாக தெலுங்குப் பட உலகிலிருந்து பானு மெஹ்ராவை அறிமுகப்படுத்துகிறோம். இவர் தெலுங்கில் ஹிட்டடித்த ‘வருடு’ படத்தின் நாயகி. மற்றொரு கதாநாயகியாக ஸ்வாதி தீக்ஷித் நடிக்கிறார். துணைக் கதாபாத்திரத்தில் ரமணா நடிக்கிறார். ஸ்வாமிநாதனும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் கதையுடன் இணைந்த நகைச்சுவை பங்களிப்பைச் செய்கிறார்கள். வெங்கட்பிரபுவும் செல்லப் பிராணிகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் மிகப் பிரபலமான ஒரு பெரிய நட்சத்திரமும் நட்புக்காக சில காட்சிகளில் நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
சிம்பா என்ற தலைப்பு ஏன்?
பரத் தனிமையில் வசித்துவரும் ஒரு இளைஞர். அவரது பக்கத்து வீட்டில் வளரும் நாயின் பெயர்தான் சிம்பா. ஆனால் பரத்தின் கண்களுக்கு அந்த நாய் பிரேம்ஜியாகத் தெரியும். பரத்தின் தாத்தா பிரேம்ஜி. சிம்பாவை வளர்ப்பவர் கதாநாயகி பானு.
தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே பிரமையில் (HALLUCINATION) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும் என்பதைச் சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் ‘பிளாக் காமெடி’யாக சொல்லியிருக்கிறோம். அப்படியொரு பிரமையில் உழலும் கதாபாத்திரத்தில்தான் பரத் நடித்திருக்கிறார். நடிப்பு, நடனம் என எல்லாத் திறமைகளும் கொண்டவர் பரத். அப்படிப்பட்டவரின் பன்முகத் தன்மையை வெளிக்கொணரும் ஒரு கதாபாத்திரம் இந்தப் படத்தில் அமைந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த முக்கிய வாய்ப்பு என்பதைப் புரிந்துகொண்டு பரத்தும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். சிம்பாவின் வெளியீட்டுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் பரத்திற்கு தங்கள் மனதில் ஒரு புதிய சிம்மாசனம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள்.
பிரேம்ஜி நாயாக நடிக்கிறார் என்கிறீர்கள். அவருக்குத்தானே நடிப்பில் அதிக சவால் இருக்கும்?
உண்மைதான். சிரித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் செல்ல நாயின் உடல்மொழியை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். பிரேம்ஜி இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இதன் சவால் முற்றிலும் மாறுபட்டது. மிக முக்கியமாக குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலை இந்த வேடம் அவருக்குக் கொடுத்துவிட்டதால் நிறையவே உழைப்பைக் கொட்டி யிருக்கிறார். இந்த வேடத்தை மிகுந்த விருப்பத்துடன் ஏற்று நடித்துவருகிறார்.
உங்களது தொழில்நுட்ப அணி பற்றிச் சொல்லுங்கள்?
படத்தின் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர். என் நெருங்கிய நண்பர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஐந்து நிமிடக் காட்சி, நூறு கேமராக்கள் கொண்டு எடுக்கப்படும் ஒரே ஷாட் என்று வெரைட்டியாக மிரட்டிவருகிறார். கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பல ஒளிப்பதிவு ஜாம்பவான்களின் வரிசையில் இடம்பெறுவார். சிம்பா வெளியீட்டுக்குப்பிறகு தமிழிலும் முக்கிய ஒளிப்பதிவாளராக பிசியாகிவிடுவார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர். என் நெருங்கிய நண்பர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஐந்து நிமிடக் காட்சி, நூறு கேமராக்கள் கொண்டு எடுக்கப்படும் ஒரே ஷாட் என்று வெரைட்டியாக மிரட்டிவருகிறார். கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பல ஒளிப்பதிவு ஜாம்பவான்களின் வரிசையில் இடம்பெறுவார். சிம்பா வெளியீட்டுக்குப்பிறகு தமிழிலும் முக்கிய ஒளிப்பதிவாளராக பிசியாகிவிடுவார்.
படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். ‘அப்புச்சி கிராமம்’ இசையமைப்பாளர். விரைவில் வெளியாகவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். இவரும் என் நெருங்கிய நண்பர். படத்தின் தயாரிப்பாளர் சிவனேஸ்வரனுக்கு இது முதல் தயாரிப்பாக இருந்தாலும், அவர் கதைக்கும் காட்சியமைப்புக்கும் தேவையான அனைத்துத் தேவைகளையும் முழு ஈடுபாட்டுடன் தயக்கமின்றி செய்துதந்தார். ஒளிப்பதிவாளரின் சோதனை முயற்சிகளுக்குத் தயக்கமின்றி பல சாதனங்களை இறக்குமதி செய்து தந்தார். அவரை சினிமாவின் காதலர் என்றுதான் சொல்ல வேண்டும்.
சிம்பாவின் நுணுக்கமான சிறப்பு எதுவாக இருக்கும்?
ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் இடையிலான உரையாடல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்குப் புதிய தீனியாக இருக்கும். ஒரு முழுமையான அவல நகைச்சுவைப் படமாக சிம்பாவை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் என் குழுவுக்கும் இருக்கிறது.
அரவிந்த் ஸ்ரீதர் - சினு சித்தார்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT