Published : 23 Oct 2015 11:38 AM
Last Updated : 23 Oct 2015 11:38 AM
ஒன்றுபோலவே தோன்றினாலும் கற்பனையும் வர்ணனையும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. மலராகவும் நிலவாகவும் பெண்களை உருவகப்படுத்திப் பாடுவது கற்பனை. அந்த மலரும் நிலவும் உன்னை விட மேலானது அல்ல. அதை விட நீ அழகானவள். சிறந்தவள் என்று பாடுவது வர்ணனை. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சூழலில் தன் காதலியை வர்ணிக்கும் இந்தி, தமிழ்ப் பார்வைகளைப் பார்ப்போம்.
இந்திப் பாட்டு.
படம். பூல் பனே அங்காரே (பூ ஒன்று புயலானது)
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி.
பாடியவர்: முகேஷ்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி.
பாடல்:
சாந்த் ஆஹே பரேங்கே
பூல் தாம்லேங்கே
ஹுஸ்னிக்கி பாத் சலேதோ
சப் ஆப் கி நாம் லேங்கே
பொருள்:
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர்
கண்ணே உன் முக அழகு
காலையில் தோன்றும் கதிரொளி
எங்கு நீ இல்லையோ அங்கெல்லாம்
தங்குவது காரிருள் மட்டுமே
எப்படி பிறகு நீ இல்லாத பிரிவு
உன் நினைவைப் பற்றிக் களங்கம் கூறும்
அரும்பை விட மென்மையான் கண்கள்
விரும்புகின்ற கற்கண்டு போல பேச்சு
கங்கை நதி தீரம் உன் கன்னங்கள்
மங்கையின் கூந்தல் சொர்க்கத்தின் பாதை
தேவதைகள் உன் பொருட்டுத் தம் தலையில்
பாவத்தின் பழியைப் பரிசாய் ஏற்கும்
இனிய தென்றலும் வீசாமல் இராது
இடிக்கும் மேகமும் பேசாமல் இராது
நேர்த்தியான உன் உள்ளம் கண்டு
சாத்தியமாக்குவான் இறைவன் அப்போழ்தில்
பாறைகள் அதனால் மென் நரம்புகள் ஆகும்
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர் .
இதே அளவு மென்மையான ஏக்கத்தைத் தமிழுக்கே உரிய நடையில் வெளிப்படுத்துகிறது தமிழ்ப் பாடல். இந்திப் பாடல் காதலியின் அழகைக் கண்டு பிரமித்துப்போன பாவனையில் அமைந்திருக்க, தமிழ்ப் பாடலோ காதலியின் அழகைக் கண்டு உற்சாகத்தில் துள்ளுகிறது. இரண்டு பாடல்களுமே இயற்கையின் அழகைவிடவும் தன் காதலியின் அழகை மேலாகச் சொல்கின்றன. “உன் அழகைப் பார்த்து நிலவு பெருமூச்சு விடுகிறது, பூக்கள் தடுமாறுகின்றன” என்று ஒரு காதலன் சொல்ல, “உன்னுடைய குளிர்ச்சி நிலவுக்கு இல்லை, நீ சிந்தும் ஒளியை அந்த மலர் சிந்தவில்லை” என்று இன்னொரு காதலன் உருகுகிறான்.
படம்: தெய்வத் தாய். இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
பாடல்: வாலி. பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நான் இல்லை
நானில்லாமல் அவள் இல்லை.....
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சைச் சேர்த்தாள்
தீயோடு பஞ்சைச் சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போல் அவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னைச் சேர்த்தாள்
தன்னோடு என்னைச் சேர்த்தாள் ....
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT