Published : 23 Oct 2015 12:14 PM
Last Updated : 23 Oct 2015 12:14 PM
இந்தியத் திரையுலகில் இதுவரை தயாரான படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது 'எந்திரன்-2'. இவ்வளவு பட்ஜெட்டில் ஒரு படம் தயாரித்தால், செலவழித்த பணத்தை எடுக்க முடியுமா என்று அனைவரும் யோசிக்கும்போது, “முடியும். செய்து காட்டுகிறோம்” என்று சொல்கிறது தயாரிப்பு நிறுவனம்.
'எந்திரன் 2' ஆர்வம் காட்டும் ரஜினி!
'கபாலி' படத்துக்கு முன்பு ரஜினி நடிக்க ஒப்பந்தமான படம்தான் 'எந்திரன் 2'. ஆனால், ரஜினிக்கு எதிர்மறையான பாத்திரம் உள்ளிட்ட படக்குழுவினர் ஒப்பந்தம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடனான பட்ஜெட் பேச்சுவார்த்தை ஆகியவை தாமதமாகவே 'கபாலி' படம் தொடங்கப்பட்டது. மேலும், இயக்குநர் ஷங்கர் திரைக்கதையையும் முழுமையாக முடிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஷங்கர். அவர்களிடம் 'எந்திரன் 2' கதை எப்படி இருக்கப்போகிறது, எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்பதை விளக்கிவிட்டு, கிராபிக்ஸ் காட்சிகளுக்கு எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டிருக்கிறார்.
எதிர்மறை கதாபாத்திரத்துக்கான ஷங்கரின் ஒட்டம்
ரஜினிக்கு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கமலை சந்தித்தார் ஷங்கர். ரஜினி - கமல் இருவரும் நடித்தாலே, இப்படத்துக்கு போட்ட காசை மிக எளிதாக கல்லா கட்டிவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனமும் நினைத்தது. ஆனால், கமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன் போன்றோரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தது. சீயான் விக்ரமும் பரிசீலிக்கப்பட்டார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் இவ்வளவு பட்ஜெட் என்று திட்டமிட்டிருக்கும்போது, மிகப் பெரிய நடிகர் யாராவது நடித்தால்தான் நல்லது என்று ஷங்கரிடம் கூறிவிட்டது.
ஆர்னால்டை சந்தித்த ஷங்கர்!
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்னால்டு நடித்தால் எப்படியிருக்கும் என்று திட்டமிட்டு சந்தித்தார். சென்னைக்கு வந்திருக்கும்போதே, இந்தியப் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக ஆர்னால்டு தெரிவித்திருந்தார். 'எந்திரன்-2' கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்த ஆர்னால்டுக்குப் பிரச்சினையாக அமைந்தது கால்ஷீட் தேதிகள்தான்.
ஷங்கர் கேட்ட தேதிகள், ஆர்னால்டு குழுவினருக்கு ஒத்துவரவில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது இறுதியாக 50 நாட்கள் கால்ஷீட் தேதிகள், இந்தியாவுக்கு வந்து போக ஆர்னால்டு மற்றும் குழுவினருக்கு விமானச் செலவு, தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து சுமார் 100 கோடி கேட்டிருக்கிறார்கள் ஆர்னால்டு குழுவினர்.
ஆர்னால்டுக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'எந்திரன் 2' படத்துக்கான உடைகள் மற்றும் சிகை அலங்காரங்கள் முடிவுசெய்வது உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் ஆர்னால்டுக்காகச் செய்யப்பட்டுவருகின்றன. இப்பணிகளுக்காகச் சில நாட்களில் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் ஷங்கர், ஆர்னால்டிடம் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து 'எந்திரன்-2' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் ஆர்னால்டு. உண்மையில் ஆர்னால்டு இன்னும் கையெழுத்திடவில்லை.
ஷங்கரின் பல திட்டங்கள்
இன்னொரு பக்கம் எந்திரன் இரண்டாம் பாகத்தை 3டி-யில் படப்பிடிப்பு நடத்தினால் எப்படியிருக்கும் என்ற ஆலோசனையிலும் இறங்கியிருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கும் நீரவ் ஷா இதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார்.
மேலும், படத்தின் பிரதான காட்சியை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் காட்சி 'எந்திரன்- 3' படத்துக்கும் பயன்படும் என்பதுதான் ஷங்கரின் ஐடியா. அந்த அளவுக்கு 'எந்திரன்-3' படத்தின் கதையையும் தயார் செய்துவிட்டாராம் ஷங்கர்.
எகிறும் 'எந்திரன்-2' பட்ஜெட்
ஆர்னால்டு சம்பளம், கிராபிக்ஸ் செலவு, ரஜினி சம்பளம், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் என கணக்கிட்டால் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடியைத் தாண்டிவிடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ரஜினி நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரை விட அதிகமாகச் சம்பளம் வாங்கி ஒருவர் நடிக்கவிருக்கும் முதல் படம் 'எந்திரன்-2'. கூடவே, வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் பலரும் இந்தப் படத்துக்கு நிதியுதவி அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் காரணம் ஆர்னால்டு.
உலகளவில் 'பாகுபலி' படத்தைப் போல விளம்பரப்படுத்த மிகவும் கஷ்டப்பட வேண்டாம். ஏனென்றால், ஆர்னால்டு ஒப்பந்தமாகிவிட்டால் உலகளவில் படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடலாம் என்பது இப்படத்தின் பின்புலத்தில் இருக்கும் வியாபாரத் தந்திரம். எந்திரன் இரண்டாம் பாகம் தமிழ் சினிமாவின் உலகளாவிய பாய்ச்சலா என்பது போகப்போகத் தெரியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT