Last Updated : 30 Oct, 2015 08:30 AM

 

Published : 30 Oct 2015 08:30 AM
Last Updated : 30 Oct 2015 08:30 AM

மும்பை மசாலா: இருபது ஆண்டுக்கால ’மேஜிக்’

படம் பார்த்துக் கொலை செய்வதில்லை!

ஓவியர் ராஜா ரவி வர்மாவின் கதாபாத்திரத்தில் ‘ரங் ரசியா’ படத்தில் நடித்த ரன்தீப் ஹுட்டா, தற்போது ‘மேய்ன் அவுர் சார்லஸ்’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ‘சார்லஸ் சோப்ராஜ்’ என்ற கொலைகாரர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

“நாட்டின் இளைஞர்கள் படங்களைப் பார்த்து கெட்டுப்போவதில்லை. ‘ராமாயணம்’ பார்த்து யாரும் ராமனாக மாறவில்லை, ‘லகே ரஹோ முன்னாபாய்’ பார்த்து யாரும் மகாத்மாவாக மாறவில்லை. அப்படியிருக்கும்போது, இந்தப் படத்தைப் பார்த்து மட்டும் ஏன் அவர்கள் ‘சார்லஸாக’ மாறப்போகிறார்கள்? இந்தப் படம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுந்தான்” என்கிறார் ரன்தீப்.

சார்லஸ் சோப்ராஜ் தற்போது நேபால் சிறையில் இருக்கிறார். பிரவால் ராமன் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்தியா முழுவதும் இன்று வெளியாகிறது.

இருபது ஆண்டுக்கால ‘மேஜிக்’

‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (சுருக்கமாக - டிடிஎல்ஜே) படம் வெளியான இருபதாவது ஆண்டு இது. இதைக் கொண்டாடும் விதமாக, ஷாரூக்கும், கஜோலும் சமீபத்தில் ‘டிடிஎல்ஜே’வின் போஸ்டர் மேஜிக்கை மறுபடியும் உருவாக்கியிருந்தனர்.

‘மை நேம் இஸ் கான்’ படத்துக்குப் பிறகு, ஷாருக்கும், கஜோலும் தற்போது ‘தில்வாலே’ படத்தில் இணைந்து நடித்துவருகின்றனர். ரோஹித் ஷெட்டி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

“டிடிஎல்ஜேவை விட நல்ல படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. இனி வரப்போகின்றன. ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்தில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு படம் தியேட்டரில் ஓடுவதற்கான சாத்தியங்கள் குறைவு. 90களில் நாங்கள் படம் எடுக்கும்போது, கோல்டன் ஜூப்ளி, சில்வர் ஜூப்ளி, பிளாட்டினம் ஜூப்ளி போன்ற அம்சங்கள் இருந்தன. அந்த யுகம் முடிந்துவிட்டது. இப்போது ஒரு படத்தைப் பற்றி இரண்டு வாரங்கள் மட்டுமே பேசுகிறோம். அதற்காக, இப்போது வரும் படங்கள் நல்ல படங்கள் இல்லை என்று சொல்லவிட முடியாது. இது நியாயமான காலமாற்றம்தான்” என்கிறார் ஷாருக் கான். இருபது வருடங்களுக்கு முன் ‘டிடிஎல்ஜே’ படத்தில் எப்படி இருந்தார்களோ அந்த இளமையை இருவரும் அப்படியே தக்க வைத்திருப்பது புதிய போஸ்டரின் மூலம் புலனாகியிருப்பதாகப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள் ஷாரூக் கஜோல் ரசிகர்கள்.

குவியும் பாராட்டுகள்

பான் நலின் இயக்கியிருக்கும் ‘ஆங்க்ரி இந்தியன் காட்டஸ்ஸஸ் ‘(Angry Indian Goddesses) திரைப்படத்துக்கு ரோம் திரைப்பட விழாவில் ஏகப்பட்ட பாராட்டுகள். திரைப்பட விழாவின் விமர்சகர்களும் பார்வையாளர்களும் இந்தப் படத்துக்கு எழுந்து நின்று எட்டு நிமிடம் கரவொலி செய்து சிறப்பித்திருக்கிறார்கள்.

பான் நலின் இயக்கியிருக்கும் ‘ஆங்க்ரி இந்தியன் காட்டஸ்ஸஸ் ‘(Angry Indian Goddesses) திரைப்படத்துக்கு ரோம் திரைப்பட விழாவில் ஏகப்பட்ட பாராட்டுகள். திரைப்பட விழாவின் விமர்சகர்களும் பார்வையாளர்களும் இந்தப் படத்துக்கு எழுந்து நின்று எட்டு நிமிடம் கரவொலி செய்து சிறப்பித்திருக்கிறார்கள்.

“இத்தாலி நாட்டுக்கும், எனக்கும் ஒரு சிறப்பு இணைப்பை எப்போதும் உணர்கிறேன். ‘ஆங்கிரி இந்தியன் காட்டஸ்ஸஸ்’ படத்தோடு உலகின் எல்லாப் பெண்களும் தங்களை இணைத்துக்கொள்ள முடிகிறது என்பதை இந்தத் திரைப்பட விழா உறுதிசெய்கிறது” என்கிறார் இயக்குநர் நலின்.

இந்தப் படத்தில் சாரா-ஜேன் டயஸ், தன்னிஷ்டா சாட்டர்ஜி, சந்தியா மிருதுள், அனுஷ்கா மான்சண்டா, ராஜஸ்ரீ தேஷ்பாண்டே, பவ்லீன் குஜ்ரால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஒரு பயணத்தில் ஏழு பெண்களின் வாழ்க்கையை விளக்குவதாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பெண்களின் நட்பை மட்டும் பேசும் படம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x