Published : 02 Oct 2015 10:54 AM
Last Updated : 02 Oct 2015 10:54 AM
ஹாலிவுட் பட ரசிகர்களால் கிளாடியேட்டர் படத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்தப் படத்தை இயக்கியவர் ரிட்லே ஸ்காட். இவரது இயக்கத்தில் த மார்ஷியன் என்ற அறிவியல் புனைவுத் திரைப்படம் இன்று வெளி யாகிறது.
த மார்ஷியன் என்னும் பெயரில் ஆண்ட்டி வெய்ர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திரைக்கதையை ட்ரூ கோடார்ட் எழுதியிருக்கிறார்.
செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காகச் செல்கிறது ஒரு குழு. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் விண்வெளி வீரர் மார்க் வாட்னி. செவ்வாயில் இந்தக் குழு சென்று இறங்கிய பின்னர் கடும் பனிப் புயல் ஒன்று செவ்வாய் கிரகத்தைத் தாக்குகிறது. இந்தப் பனிப் புயலில் மாட்டிக்கொண்ட மார்க் வாட்னி அதனால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டுவிட்டார். அவர் இறந்துவிட்டாரென எண்ணிய குழுவினர் அவரைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் மார்க் வாட்னி மரிக்கவில்லை. உயிருடன் இருக்கிறார். தனித்துவிடப்பட்ட நிலையில் மீண்டும் பூமியைத் தொடர்புகொள்ள முயல்கிறார். அவர் உயிருடன் இருப்பதை அறிந்து நாஸா அவரைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் அந்த முயற்சியைக் குழுவினரில் சிலரே தடுக்கின்றனர். தங்கள் குழுவின் ஒருவரைக் காப்பாற்றவிடாமல் ஏன் அவர்கள் செயல்படுகிறார்கள்? தடைகளை மீறி நாஸா மார்க் வாட்னியைக் காப்பாற்றியதா என்பதையெல்லாம் சுவாரசியமான காட்சிகளாகக் கொண்ட முப்பரிமாணத் திரைப்படம் ‘த மார்ஷியன்’.
இந்தப் படத்தை இயக்கியிருக் கும் ரிட்லே ஸ்காட் கிளாடியேட்டர், அமெரிக்கன் கேங்க்ஸ்டர், ராபின்ஹுட் உள்ளிட்ட பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர். படத்தில் மார்க் வாட்னி வேடமேற்றிருக்கும் ஹாலிவுட் நடிகரான மேட் டாமன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய சேவிங் பிரைவேட் ரையான், த மெஜஸ்டிக், த டிபார்ட்டட், கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். இன்டர்ஸ்டெல்லர் படத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட நடிகை ஜெஸிகா சேஸ்டைன் படத்தின் நாயகியாக வேடமேற்றிருக்கிறார். இந்தப் படம் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டிருக்கிறது. பரவலாகப் படத்துக்கு ஆதரவான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. ஆகவே திரையில் படத்தைப் பார்க்கும் ரசிகர்களை இந்தப் படம் உற்சாகப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT