Last Updated : 23 Oct, 2015 11:32 AM

 

Published : 23 Oct 2015 11:32 AM
Last Updated : 23 Oct 2015 11:32 AM

காற்றில் கலந்த இசை 27: காதலர்களின் இசைவழித் துணை!

சிறிய படங்கள், பெரிய படங்கள், நட்சத்திர நடிகர்களின் படங்கள், புதுமுகங்கள் நடித்தவை என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், தான் இசையமைத்த எல்லா படங்களுக்கும் அற்புதமான பாடல்களை வாரி வழங்கியவர் இளையராஜா. அவரே தயாரித்த படத்தில் பாடல்களின் இனிமைக்குக் கேட்கவும் வேண்டுமா? ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இன்னிசை.

பிற்காலத்தில் பார்த்திபனின் ‘பொண்டாட்டி தேவை’ படத்தின் மூலம் அறியப்பட்ட அஸ்வினியும் புதுமுக நடிகரும் நடித்த இந்தப் படத்துக்குக் கதை வசனம் வைரமுத்து. இயக்கம் கோகுல கிருஷ்ணன். பல காரணங்களால் தோல்வியடைந்த இப்படம், இன்றும் அதன் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகிறது.

எண்பதுகளில் இளம் பிராயத்தைக் கடந்து வந்தவர்களை, உருவமற்ற ஆன்மா போல் பற்றிக்கொண்டுவிட்ட பாடல் ‘ஒரு கிளி உருகுது’. எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா இணைந்து பாடிய இப்பாடல், நாயகன் மற்றும் நாயகியின் இளம் பிராயத்தைக் காட்டும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல். கள்ளமற்ற பிஞ்சு உள்ளங்களுக்கு இடையே துளிர்க்கும் அன்பின் பாடல். அடர்ந்த மரங்களின் இடைவெளி வழியே பரவும் தென்றலின் குளுமையுடன் ஒலிக்கும் புல்லாங்குழலுடன் பாடல் தொடங்கும்.

கிளிகளையும் மைனாவையும் பற்றிப் பாடும் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் ஆக்கிரமித்திருப்பது குயில்தான். குறிப்பாக முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழலும், அதைப் பிரதியெடுக்கும் குரலில் ஜானகியும், ஷைலஜாவும் பாடும் ‘குக்கூ… குகுகூ’ எனும் ஹம்மிங்கும் ஏதோ ஒரு நதிக்கரையின் மரக்கிளைகளில் அமர்ந்து பாடும் குயிலைக் காட்சிப்படுத்தும். இரண்டாவது நிரவல் இசையில் அன்பின் நெகிழ்வை உணர்த்தும் சாரங்கி இசையை வழியவிட்டிருப்பார் இளையராஜா.

பிள்ளைப் பிராயத்துப் பாடல் என்பதால், ஜானகி, ஷைலஜாவின் குரல்களிலும் குழந்தமையின் குதூகலம் தொனிக்கும். இப்பாடலின் இன்னொரு வடிவத்தை எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘தளிருக்கும் மலருக்கும் காதல்… தனிமையில் சிறு சிறு ஊடல்’ எனும் வரிகளில் எஸ்.பி.பி.யின் குரலில் தொனிக்கும் பாந்தம் ஆத்மார்த்தமானது.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘ஓ வெண்ணிலாவே… வா ஓடி வா’ பாடலை எஸ்.பி.பி. - ஜானகி ஜோடி பாடியிருக்கும். காதலுக்கு ஏற்படும் தடையால் மனமுடைந்து நிற்கும் நாயகனையும் நாயகியையும் ஆற்றுப்படுத்தும் கனவுப் பாடல் இது. டூயட் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் இனம்புரியாத வலியை உணர முடியும். இந்தப் பாடலையும் தொடங்கி வைப்பவர் ஷைலஜாதான். ‘ஆனந்த கும்மியடி… வானமெல்லாம் கேட்கட்டும்’ எனும் தொகையறாவுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டமான தாளமும், நெகிழ்வூட்டும் ஷெனாயும் சேர்ந்து ஒலிக்கும்.

தற்காலிகச் சந்தோஷ மனநிலையில் திளைக்கும் காதலர்களின் உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஷெனாய், கிட்டார் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, ரணங்களை வருடும் மயிலிறகின் மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். வருத்தமான மனநிலையில் இப்பாடலைக் கேட்கும்போது இந்த ஒற்றைக் கணத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை. இரண்டாவது சரணத்தில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை அற்றுவிட்டதுபோன்ற அழுகைக் குரலில் ‘இனிமேல் பிறவி வாராது’ என்று பாடுவார் ஜானகி.

அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக, ‘காதல் மாலை சூடும் வேளை… அழுகை ஏனோ, கூடாது’ என்று எஸ்.பி.பி. பாடுவார். காதலனின் ஆறுதல் வார்த்தைக்காக அழுகையை அடக்கிக்கொண்டாலும், ஆற்றாமையில் தவிக்கும் மனதின் தேம்பும் குரலில், ‘நிலவே நீயும் தூங்காதே…’ என்பார் ஜானகி. எழுதப்பட்ட பாடல் வரிகளை இசையுடன் பாடுவது மட்டும் பாடகர்களின் பணியல்ல; கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் கலை அது என்பதை ஆத்மார்த்தமாகப் பதிவுசெய்திருப்பார் ஜானகி. இசை ரசிகர்களால் அவர் ஆராதிக்கப்படுவதன் முக்கியக் காரணம் ஆத்மார்த்தமான பாடும் முறைதான்.

குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட உலகில் பயணம் செய்யும் உணர்வைத் தரும் பாடல் இது. ‘பாடல் நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்’ எனும் வரிகளில் வைரமுத்துவின் குறும்பு மின்னும்.

ஜானகி, எஸ்பிபி பாடும் ‘ஊமை நெஞ்சின் ஓசைகள்’ பாடல் காதலின் பிரிவு தரும் வேதனையைப் பதிவுசெய்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் நிரவல் இசையில் நெகிழ்ந்துருகும் சாரங்கி கண்களை நனைத்துவிடும். எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான இரக்கத்துடன் இளையராஜா பாடும் ‘திண்டாடுதே ரெண்டு கிளியே’ பாடலும் இப்படத்தில் உண்டு. அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த ஆல்பம்!



தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x