Published : 02 Oct 2015 12:04 PM
Last Updated : 02 Oct 2015 12:04 PM

திரைக்குப் பின்னால்: எடிட்டர் என்பவர் ஓர் ஆவி!

எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படம் என்றாலும், அப்படத்தின் முதல் பார்வையாளர் எடிட்டர்தான். சிற்பி சிலையை வடிப்பது போன்று படக்கதையின் தன்மைக்கு ஏற்ப காட்சிகளை அளவாகவும் கச்சிதமாகவும் தொகுத்துத் தருபவர். அண்மையில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் ‘ மாயா’ படத்தின் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ் கவனிக்கத் தகுந்த எடிட்டர்களில் ஒருவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...

'மாயா' படத்தின் எடிட்டிங்கிற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது?

'மாயா' படத்தின் வெற்றி முழுக்கவே படத்தின் இயக்குநர் அஸ்வினைத் தான் சேரும். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். எடிட்டிங்கைப் பொறுத்தவரை அப்படத்தில் இரண்டே இடத்தில்தான் ’ஜம்ப் கட்’ (JUMP CUT) தெரியும், மற்ற இடங்களில் கட் பண்ணியிருப்பதே தெரியாது. அதுதான் ஒரு படத்துக்கு முக்கியம். அப்படத்தின் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட விஷயங்களுக்கு நாங்கள் உழைத்த உழைப்புக்கு மக்களும் ஊடகங்களும் கொடுத்திருக்கும் வரவேற்பால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

எப்படி எடிட்டிங் துறைக்குள் வந்தீர்கள்?

எனக்கு சினிமா பிடிக்கும். எங்கம்மாவுக்கு சினிமா என்றால் உயிர். 'ஜென்டில்மேன்', 'பாட்ஷா' போன்ற படங்களுக்கு எங்கம்மாதான் என்னை அழைத்து போனார்கள். விளையாடலாமா அல்லது படத்துக்குப் போகலாமா என்று அம்மா கேட்டால் நான் படத்துக்குப் போகலாம் என்றுதான் சொல்வேன்.

எனக்குப் படிப்பில் ஆர்வமே கிடையாது. அதனால் கணக்கு இல்லாத ’விஷுவல் கம்ப்யூனிகேஷன்’ படித்தேன். கல்லூரியில் டெலிபிலிம் எடுத்தார்கள். அதில் நான் கடைசி உதவியாளராக பணியாற்றினேன். அப்போது “உனக்கு எதில் ஆர்வம்” என்று எனது பேராசிரியர் கேட்க “எனக்கு இயக்குவதில் ஆர்வம். ஆனால், எனக்கு எழுதுவது எல்லாம் வராது. யாராவது எழுதிக் கொடுத்தால் இயக்கி கொடுப்பேன்” என்று தெரிவித்தேன். அப்படியென்றால் இப்படத்தின் எடிட்டிங்கில் போய் கலந்துகொள், எடிட்டிங் கற்றுக்கொண்டால் இயக்கம் என்பது எளிது என்று அனுப்பினார். நாங்கள் படமாக்கிய விதம் வேறு மாதிரி இருந்தது. ஆனால், எடிட்டிங்கில் அப்படத்தை வேறு மாதிரி மாற்றினார். அன்றுதான் எடிட்டிங்கில் எனது ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. கல்லூரி எடிட்டர் ஆண்டனியிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டேன்.

ஆண்டனியிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

கதைக்கு ஏற்றாற்போல எடிட்டிங் பண்ணுவதுதான் அவருக்குப் பிடிக்கும்.

ஒரு காட்சியை எவ்வளவு சுருக்கிச் சொல்ல முடியும் என்ற தெளிவோடு இருப்பார். நான் அவரிடம் பணியாற்றும்போது, படத்தின் மொத்தக் காட்சிகளையும் எடிட்டிங் அறைக்குக் கொண்டுவருவார்கள். அதை உட்கார்ந்து பார்த்து முழுவதுமாக உள்வாங்கச் சொல்வார். அப்படிச் செய்தால் மட்டுமே உன்னால் எடிட்டிங்கில் புதிதாகப் பண்ண முடியும் என்பார். சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.

உங்கள் அறிமுகப் படம் பற்றி சொல்லுங்கள்?

சி.எஸ். அமுதன் இயக்கிய 'தமிழ் படம்'தான் என் முதல்படம். ஒப்பந்தமாகும்போதே அது தமிழ் சினிமாவை நோகாமல் கேலிசெய்யும் ‘ஸ்பூஃப்’ (SPOOF) படம் என்று சொல்லிவிட்டார்கள். இயக்குநர் அமுதன் என்னிடம் ஒரு 'நாட்டாமை' காட்சி வருகிறது என்றால் அப்படத்தின் எடிட்டிங் மாதிரி இருக்க வேண்டும், 'தளபதி' காட்சி என்றால் அப்படத்தின் எடிட்டிங் மாதிரி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதில் சவால் என்னவென்றால் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு படம் மாதிரி பார்க்க வேண்டும். பொதுவாக ஸ்பூஃப் படங்களில் ஒரு தெளிவான கதையே இருக்காது. ஆனால் இதில் அதுவும் இருந்தது. அதே நேரம் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு படம் மாதிரி பார்க்க வேண்டும். இப்படிப் பல சவால்கள் இருந்தன. வழக்கமாகப் படங்களில் எதுவெல்லாம் பண்ண முடியாதோ, அதை எல்லாம் 'தமிழ் படம்' படத்தின் எடிட்டிங்கில் பண்ணினோம்.

ஒரு எடிட்டராகக் குறிப்பிட்டு உங்கள் வேலை பாராட்டப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்?

ஒரு ஆவி மாதிரிதான் எடிட்டர். அவர் வேலை செய்யும் ஒவ்வொரு படத்திலும் புகுந்து ஆட்டிப் படைக்க வேண்டும், ஆனால் நாம் இருக்கிறோம் என்பது தெரியக் கூடாது. 'தமிழ் படம்' பண்ணும்போது, இந்தப் படத்தோடு நாம கிளம்ப வேண்டியதுதான் என்று எண்ணம்தான் இருந்தது. மக்கள் அப்படத்தைக் கொண்டாடியபோதுதான், என்னுடைய எடிட்டிங்கில் முதல் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என சந்தோஷமாக இருந்தது.

எடிட்டிங் துறையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?

கடந்த 5 வருடங்களில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் ரொம்பவும் மாறியிருக்கின்றன. எடிட்டிங்கில் நுழைந்தபோது நெகடிவ் கட்டிங் என்பதுதான் இருந்தது. 'பொய் சொல்ல போறோம்', 'சயினைடு' போன்ற படங்கள் எல்லாம் நெகடிவ் கட்டிங் படங்கள்தான். ஒவ்வொரு காட்சியும் ‘நெகடிவ்’வில் கட் பண்ண வேண்டும். இப்போது பிலிம் என்பது கிடையாது என்பதால் படமும் நாம் செல்போனில் வீடியோ எடுப்பது போலதான் . வீடியோ எடுக்க வேண்டும் அதை அப்படியே கம்ப்யூட்டருக்கு மாற்றி எடிட் பண்ண வேண்டியதுதான்.

எடிட்டர்கள் ஒரு கட்டத்தில் இயக்குநர் ஆகிவிடுவார்கள். நீங்கள் எப்போது?

படம் வெற்றியடைந்தால் வாழ்க்கையே மாறிவிடும், படம் தோல்வியுற்றால் மறுபடியும் உங்களது பழைய வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காது. என்னுடைய இயக்குநர்கள் அனைவரிடமும் இருந்து ஒவ்வொரு விஷயமும் இயக்கத்தில் கற்றுக்கொண்டேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து நான் படம் இயக்கலாம் என்று இப்போது நினைப்பது மிகவும் சீக்கிரம் என்று தோன்றுகிறது. என் படத்துக்காகப் பல ஐடியாக்கள் வைத்திருக்கிறேன். எப்போது என் மீது நம்பிக்கை வருகிறதோ, அப்போது கண்டிப்பாக இயக்குவேன். ஒரு படத்தை இயக்குவது என்பது மிகவும் கஷ்டம். அதை அனுபவிக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x