Published : 16 Oct 2015 11:18 AM
Last Updated : 16 Oct 2015 11:18 AM
குழந்தைகளை உற்சாகப்படுத்திய ஹாலிவுட் படம் ஐஸ் ஏஜ். இந்த வரிசையில் நான்கு படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஐந்தாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது. ஐஸ் ஏஜின் நான்காம் பாகமான ஐஸ் ஏஜ்: காண்டினெண்டல் டிரிஃப்டை மைக் துர்மியருடன் இணைந்து இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவிவ் மார்டினோ.
மிகப் பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் அடுத்து ஒரு அசத்தலான அனிமேஷன் படம் வெளியாக உள்ளது. 3டியில் வெளியாகும் த பீனட்ஸ் மூவி என்னும் படம் தரப் போகும் அனுபவத்தை எதிர்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது அதன் டிரெயிலருக்குக் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பைப் பார்த்தாலே தெரிகிறது.
ப்ளு ஸ்கை ஸ்டுடியோஸ் நூறு மில்லியன் டாலர் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. சார்லஸ் எம் சல்ஸ் எழுதிய காமிக்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் இது. காமிக்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கும் ஐந்தாம் படம் இது என்கிறார்கள். 35 ஆண்டுகளில் முழுவதும் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம் இது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க காமிக்ஸ் ஸ்ட்ரிப்களில் பீனட்ஸ் மகத்தான வரவேற்பைப் பெற்றது.
காமிக்ஸ் ஸ்ட்ரிப் என்பது நாளிதழ்களில் சில தொடர்ச்சியான சித்திரங்களில் வெளியாகும் படக் கதை. இதன் பிரதான கதாபாத்திரம் சார்லி ப்ரௌன். எத்தனை முறை தோல்விபெற்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் ஏதாவது புது முயற்சிகளில் ஈடுபடும் கதாபாத்திரம் சார்லி ப்ரௌன். குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாஸிட்டிவான எண்ணங்களை விதைக்கிறது சார்லி ப்ரௌன்.
சார்லி ப்ரௌன் தவிர அநேக சுவாரசியமான கதாபாத்திரங்களைக் கொண்ட இந்த பீனட்ஸ் படக்கதை இது வரை 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கானோர் இதைப் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது. இப்போது இந்தப் படக்கதை முழுநீளப் படமாகியிருக்கிறது. ஏற்கெனவே அநேக கதாபாத்திரங்கள் இருப்பதால் திரைப்படத்துக்கென புதிதாக எதுவும் கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை.
இதுவரை நாளிதழ்களில் வாசகர்களை ஈர்த்திருந்த சார்லி ப்ரௌன் கதாபாத்திரம் நவம்பர் மாதம் திரைகளில் புரியும் வேடிக்கை விளையாட்டுகளைப் பார்த்து வயிறுவலிக்க சிரிக்கப்போகிறார்கள் ரசிகர்கள். காமிக்ஸ் ஸ்ட்ரிப்பின் 65 ம் ஆண்டைக் குறிக்கும், கொண்டாடும் வகையில் இந்தப் படம் நவம்பர் ஆறாம் தேதி திரைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT