Published : 09 Oct 2015 10:03 AM
Last Updated : 09 Oct 2015 10:03 AM
தேவதாஸ்-பார்வதி காவியக் காதலைப் போல் கேரளத்தில் பரவலாக அறியப்பட்ட நவீன காலக் காவியக் காதல், காஞ்சனமால-மொய்தீனுடையது. 1950களில் வடகேரளத்தின் சிறு நகரமான முஹ்கத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘எந்நு நிண்டே மொய்தீன்’ என்னும் பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
2006-ல் ‘ஜலம் கொண்டு முறிவுற்றவள்’ என்னும் ஆவணப் படம் மூலம் காஞ்சனமாலா-மொய்தீன் காதலைக் கவித்துவமான விவரிப்புகளுடன் தொகுத்திருந்தார் இயக்குநர் ஆர்.எஸ்.விமல். இந்த ஆவணப் படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தால், செல்போன், இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் தீண்டிடாத காலகட்டத்திய காதலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கு எடுத்து வந்திருக்கிறார் அவர்.
காஞ்சனாவும் மொய்தீனும் பள்ளி சிநேகிதர்கள். காஞ்சனாவின் தந்தையும் மொய்தீனும் தந்தையும் அந்த ஊரின் பெரும் நிலக்கிழார்கள்; காங்கிரஸ் அனுதாபிகள். மொய்தீனின் தந்தை அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகவும் இருக்கிறார். இரு குடும்பத்துக்கும் அந்நியோன்யமான உறவும் உண்டு. மேற்படிப்புக்காக இருவரும் கோழிக்கோட்டில் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. திடீரென ஒரு பேருந்துப் பயணத்தில் ஓட்டுநர் கண்ணாடியின் வழியாக, இரு பழுப்பு நிறக் கண்கள் தன்னை நோக்குவதைக் கவனிர்க்கிறாள் காஞ்சனா. அந்த முகத்தில் விரியும் புன்னகை அவளுக்கு யாரையோ ஞாபகப்படுத்துகிறது. திரும்பிப் பார்க்கிறாள், மொய்தீன். அந்தக் கணத்தில்தான் மொய்தீன் மீதான காதலை அவள் உணர்கிறாள்.
கடிதம் வழியாகக் காதல் வளர்கிறது. கடிதம் மூலமாகவே காதல் விவகாரம் அவளது வீட்டுக்கும் தெரியவருகிறது. அவளது கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வருகிறது. வீட்டுக்குள் சிறைவைக்கப்படுகிறாள். இரு குடும்பத்திலும் எதிர்ப்பு வலுக்கிறது. ஆனால் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். காஞ்சனாவின் போர்க் குணத்தை முன்பே சில காட்சிகள் மூலம் இயக்குநர் சித்திரித்துவிடுகிறார். தன் தந்தைக்கு எதிராகப் போராடும்போது மொய்தீன் ஒரு திடமான கம்யூனிஸ்ட் சோஸலிஸ்ட் என்பதையும் சொல்லிவிடுகிறார்.
காண வழியில்லாத நிலையில் கடித வரிகள் மூலம் கூடுதல் நெருக்கம் கொள்கிறார்கள். மீண்டும் கடிதம் பிடிபடுகிறது. இருவரும் மலையாள எழுத்துகள் கொண்டு புதுமொழியை உருவாக்குகிறார்கள். கவிதைப் புத்தகங்களில் அடிக்கோடிட்டுப் பாஷைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தனது தங்கைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காகக் காஞ்சனா வலிகளுடன் காத்திருக்கிறாள். அவளுக்காக மொய்தீனும் காத்திருக்கிறான்.
அவர்கள் நேரில் பார்த்துக்கொள்ளாமல் பத்தாண்டுகள் கடந்துபோகின்றன. தங்கைகள் எல்லோரும் திருமணமாகிப் போகிறார்கள். அவனுக்கு நரை அரும்பத் தொடங்கிவிடுகிறது. வீட்டைவிட்டு வெளியேறத் தீர்மானிக்கிறார்கள். அதற்கிடையில் தந்தையால் கத்தியால் குத்தப்பட்டு படுத்த படுக்கையாகிறான் மொய்தீன். பிறகு அவனது தந்தையும் இறக்கிறார். இவற்றிலிருந்து மீண்டு வந்து இவளை அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும்போது அவளது அண்ணன் இறந்த செய்தி வருகிறது. எல்லாவற்றுக்குமாக அவள் கதறி அழுகிறாள்.
பரஸ்பர காதல் இருந்தும், அவளது வீட்டு மதிற் சுவர்கள் தாண்டிவிடும் உயரத்திலிருந்தும் மத வேறுபாடு, சமூகப் பழக்கங்கள், உறவு முரண்கள் மட்டுமல்லாமல் சூழ்நிலைகளும் அவர்களைப் பிரித்துக்கொண்டே இருக்கிறது.
பரவலாக அறியப்பட்ட ஒரு காதல் கதையை, திறமையான திரைக்கதை மூலம் சுவாரசியமான சித்திரமாக மாற்றியிருக்கிறார் விமல். மொய்தீனாக பிருத்விராஜ் சுகுமாரனும் காஞ்சனமாலயாக பார்வதியும் நடித்திருக்கிறார்கள். லெனாவும் சாய்குமாரும் மொய்ந்தீனின் பெற்றோராகத் தேர்ந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்றும் மொய்தீன் பெயரில் சமூகப் பணிகளாற்றிவரும் 75 வயதான காஞ்சனா இந்தப் பட உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.
‘எண்டே காஞ்சனக் குட்டிக்கு’ எனத் தொடங்கும் கடித வரிகள் காதலின் ஆழத்தை உணர்த்துகின்றன. டி. ஜானின் ஒளிப்பதிவு எப்போதும் மழை பெய்யும் நிலத்தின் காட்சிகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. 1950 கால கட்டத்திய வடகேரளத்தின் பயன்படு பொருள்களைக் கவனத்துடன் கையாண்டிருக்கிறார் கலை இயக்குநர் கோகுல்தாஸ்.
25 ஆண்டுக் கால மூப்புடைய காதலைச் சொல்லும் விமல் காதலுக்கு வெளியே, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவது, நக்சலைட்டுகள் உருவாவது, நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைவது போன்ற சமூக மாற்றங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் இதைத் தொடக்ககாலச் சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரு கம்யூனிஸ்டுகாரனின் காதல் கதை என்றும்கூடச் சொல்லலாம்.
1982 ஜூலை 15-ல் இருவழிஞ்சிப்புழயில் நடந்த படகு விபத்து இறுதிக் காட்சியில் பத்திரிகைச் செய்தியாக வருகிறது. அன்றைக்கு வெறும் செய்தியாக இருந்த அந்தச் சம்பவத்துக்குக் கால் நூற்றாண்டுத் துயரத்தைச் சேர்த்திருக்கிறது இந்தப் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT