Published : 23 Oct 2020 09:28 AM
Last Updated : 23 Oct 2020 09:28 AM

எஸ்.வி.சுப்பையா 100: செங்கோட்டை முதல் செங்குன்றம் வரை

காவல் தெய்வம்

சிவகுமார்

நாடக மேடையிலிருந்து திரையில் அடிவைத்த பெரும்பாலான நடிகர்கள் மிகை நடிப்புக்குப் பெயர்பெற்றவர்கள். அதற்குக் காரணம் உண்டு. அது, ஒலிபெருக்கி கண்டறியப்படாத காலம். கடைகோடியில் அமர்ந்து நாடகம் பார்ப்பவர்களுக்கும், நடிகனின் குரல் ‘கணீர்’ என்று கேட்டாக வேண்டும். அதற்காகத் தொண்டையை விரித்து, கத்திப் பேசி, அதிகப்படியான அங்க சேஷ்டைகள் செய்து நடித்தாக வேண்டும். ஒலிபெருக்கி, மின் விளக்குகள் வந்தபிறகும் ரத்த அணுக்களில் கலந்ததுபோல் மிகை நடிப்பிலிருந்து பலரால் வெளிவர முடியவில்லை. ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய கலைஞர்கள் அதை உதறியெறிந்தனர்.

அந்த வரிசையில், கதாபாத்திரத்துக்குத் தேவைப்படும் நடிப்பை அளந்து கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர் எஸ்.வி.எஸ். உணர்ச்சிக் கட்டுப்பாடு, வசனமற்ற நடிப்பு, விழி அசைவுகளை மையப்படுத்திய நுணுக்கமான முகபாவங்கள், உடல்மொழியை உணர்வு வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்துவது போன்ற உத்திகள்தாம் திரைக்குத் தேவைப்படும் நடிப்பு முறை.

அப்படியொரு இயல்பான நடிப்பு முறைக்கு அகராதியாக மாறிக்காட்டிய அபூர்வக் கலைஞர்தான் எஸ்.வி.சுப்பையா. அவருடன் பல படங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தது, காலமும் கலைமகளும் எனக்களித்த வரம். சிவாஜி கணேசன் தொடங்கி பலருக்கு அண்ணனாக நடித்திருக்கும் அவரை, ‘அண்ணே’ என்று பாசத்துடன் அழைத்துப் பழகியிருக்கிறேன். அவரும் என்னை ‘தம்பி சிவா’ என்று உரிமையோடு கொண்டாடியிருக்கிறார்.

ஒரு எஸ்.வி. இல்லையென்றால்...

எஸ்.வி.சுப்பையா வெறும் அப்பா நடிகரல்ல; ‘அடேங்கப்பா..!’ என்று வியக்கவைத்த குணச்சித்திரங்களின் பீஷ்மர். பேச்சு மொழியோ செந்தமிழோ, இவர் தமிழை உச்சரிக்கும் அழகைப் பார்த்து, பிறமொழி நட்சத்திரங்கள் வியந்து நிற்பார்கள். தென்னிந்திய சினிமாவின் தாய்மடியாக சென்னை திகழ்ந்துவந்த காலத்தில், தனக்கான குணச்சித்திர நடிகர்களை ஆந்திரத்திலிருந்து சற்று அதிகமாகவே சுவீகாரம் செய்துகொண்டது தமிழ் சினிமா. அங்கிருந்து இங்கே வந்து உச்சம் தொட்ட சித்தூர் வி.நாகையா,

எஸ்.வி.ரங்கா ராவ் போன்ற ஒப்பற்ற நடிகர்களுக்கு மாற்றே இல்லை என்ற நிலையை மாற்றிக்காட்டிய மகா கலைஞன்தான் எஸ்.வி.சுப்பையா.

புதுமைகளின் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இசைக் காவியம் ‘கலைக்கோயில்’. அப்படத்தின் கதையைக் கேட்டு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தானே தயாரிக்க முன்வந்தார். எனக்குப் பெரும்புகழ் பெற்றுக்கொடுத்த ‘சிந்து பைரவி’க்கு, ஒருவிதத்தில் முன்னோடியான கதையம்சம் கொண்ட படம் என்றுகூட ‘கலைக்கோயி’லைக் குறிப்பிடலாம். அப்படத்தில், வீணை வித்வான் நித்யானந்தம் படம் முழுவதும் வருகிற வேடம். அதில் நடிக்க எஸ்.வி.ரங்கா ராவை ஒப்பந்தம் செய்திருந்தார் ஸ்ரீதர்.

ரங்கா ராவ் சொன்ன தேதியில், முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியது. காலை 8 மணிக்கெல்லாம் செட்டில் அனல் பறந்துகொண்டிருந்தது. ரங்கா ராவைத் தவிர அத்தனை பேரும் வந்துவிட்டார்கள். ரங்கா ராவ் நேரம் தவறுகிறவர் அல்ல. முதல்நாளே முடிந்திருக்க வேண்டிய முந்தைய படத்தின் படப்பிடிப்பு நீண்டுவிட்டதால், அதை முடித்துக் கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கு செட்டுக்குள் நுழைந்தார். வரிசையாக வெற்றிகளைக் கொடுத்து, இயக்குநர் சமூகத்துக்கு மரியாதை தேடித் தந்திருந்த தர், ரங்கா ராவுக்காகக் காத்திருக்க விரும்பவில்லை.

“ஒரு எஸ்.வி. இல்லையென்றால், இன்னொரு எஸ்.வி.” என்று கூறிவிட்டு, எஸ்.வி.சுப்பையாவை கையும் மெய்யுமாக செட்டுக்கு அழைத்துவரச் செய்தார். ரங்கா ராவ் ஒப்புக்கொண்ட வேடம் என்பதை அவரிடம் கூறாமல் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். தாமதமாக வந்த ரங்கா ராவ், தனது வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரது முகத்தில் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ துளியுமில்லை. ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி ஸ்ரீதர் அருகில் வந்து, அவருக்கு ஒரு சிகரெட்டை நீட்டினார். “சுப்பையா ஈஸ் குட் ஆல்டர்நேட், ஆல் தி பெஸ்ட் ஸ்ரீதர்” என்று கூறிவிட்டு, அலட்டிக்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்.

யார் சிறந்த நடிகர்?

ரங்கா ராவ் எனும் மகா நடிகன் தனக்கு மாற்று என மனந்திறந்து கூறிய எஸ்.வி.சுப்பையா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த ‘கண்கண்ட தெய்வம்’ படத்தில், ரங்கா ராவின் தம்பியாக நடித்திருப்பார். இதில் எஸ்.வி.சுப்பையாவுக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் வி.நாகையாவும் நடித்திருக்கிறார். அண்ணன் -

தம்பி பாசக் கதைக்கு பெயர்போன இப்படத்தில், எஸ்.வி.ரங்கா ராவ் - எஸ்.வி.சுப்பையா இருவரில் யார் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று யாராலும் தீர்ப்பு வழங்கமுடியாது. அண்ணனை கண்கண்ட தெய்வமாகக் கண்டு வளர்ந்த ஒரு அப்பாவித் தம்பி, பிறகு பொறுப்பற்ற பிள்ளைகளால் பரிதவிக்கும் கதாபாத்திரத்தை வாழ்ந்து தீர்த்துவிட்டார் எஸ்.வி.எஸ்.

அப்பா, அண்ணன், தம்பி, பரம ஏழை, பணக்காரர், பாமரர், படித்த அதிகாரி, கிராமவாசி, நகரத்தின் நடுத்தரக் குடும்பத்தில் சிக்கி நசுங்கும் மனிதர், காவலர், கவிஞன் தொடங்கி, வஞ்சகத்தை நெஞ்சுக்குள் வளர்த்து கருவறுக்கும் வில்லன்வரை, தான் ஏற்ற வேடங்கள் அத்தனைக்கும் குன்றாத ஒளி பாய்ச்சிய குணச்சித்திர சகாப்தம் அண்ணன் எஸ்.வி.எஸ்.

திருப்பம் தந்த நாடக வாழ்க்கை

1920-ல் செங்கோட்டையில், ஸ்தபதிகள் குடும்பத்தில் பிறந்த எஸ்.வி.எஸ். 5-ம் வகுப்பு வரையில் படித்திருந்தார். நடிப்பில் ஆர்வம் மேலிட, ‘ஆனந்த சக்திவேல் பரமானந்தா பாய்ஸ் கம்பெனி’யில் 11-வது வயதில் சேர்க்கப்பட்டார். பாலர் வேடங்கள், ஸ்த்ரி பார்ட் என நடித்துவந்த சுப்பையா, 18 வயதில் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ‘சிவ லீலா’ நாடகத்தில் அபிஷேகப் பாண்டியன் வேடம் கொடுக்கப்பட்டது.

பிறகு மகாபாரத நாடகத்தில் கர்ணன் வேடம். குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் சுப்பையாவின் உணர்ச்சிகரமான நடிப்பை, நாடகம் காண வந்தவர்கள் மட்டுமல்ல, மேடைக்கு உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த சக நடிகர்களும் கண்டு கண்ணீர் பெருக்கினார்கள். சுப்பையாவின் ஆழ்ந்த நடிப்பு பற்றி மற்ற நாடகக் குழுக்களிலும் பேச்சு பரவியது.

அதேசமயம் டி.கே.எஸ். குழுவில் நடித்துவந்த கே.ஆர்.ராமசாமிக்கும் சீனியரான எஸ்.வி.சுப்பையாவுக்கும் மனத்தாங்கல். நகைச்சுவை நடிகர் ‘ப்ரண்ட்’ ராமசாமி, நாடக முதலாளி டி.கே.சங்கரனிடம் புறங்கூறியதில் சுப்பையாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சங்கரன். அதிர்ந்துபோன சுப்பையா டி.கே.சண்முகத்திடம் முறையிட, சண்முகமோ “டி.கே.பகவதி, சகஸ்ரநாமம் எல்லோரும் அண்ணாவிடம் அடி வாங்கியவர்கள்தான். கவலைப்படாதே” என்று கூற, ஆறுதல் அடையவில்லை சுப்பையா.

பின்னர் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில், வாசுதேவர் வேடத்தில் நடிக்கச் சொன்னபோது துணிந்து மறுத்துவிட்டார் சுப்பையா. சுப்பையாவுக்கு காசு கொடுத்து, ‘நல்லபடியா ஊருக்குப் போ’ என்று

சங்கரன் அனுப்பிவைத்தார். ஆனால், சுப்பையா ஊருக்குப் போகவில்லை. நேரே சேலத்துக்குப் புறப்பட்டார். அங்கே சக்தி நாடக சபாவில், கவிஞர் எஸ்.டி.சுந்தரம் எழுதிய ’கவியின் கனவு’ நாடகத்தை அரங்கேற்ற, ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. சர்வாதிகாரியின் கையில் சிக்கி அல்லல்படும் தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடும் ஒரு மகா கவிஞன். அவருக்கு துணை நிற்கும் சேனாதிபதி. இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட சுதந்திர உணர்ச்சியைத் தூண்டும் கதையைக் கொண்டது அந்த நாடகம். சுப்பையாவின் பேச்சுத் தமிழைப் பார்த்து, ‘கவியின் கனவு’ நாடகத்தில் மகாகவி ஆனந்தனின் வேடம் கொடுக்கப்படுகிறது. சிவாஜி கணேசனும் எம்.என்.நம்பியாரும் மற்ற 2 முக்கிய வேடங்களில் நடிக்க, தமிழகம் முழுவதும் 1,500 முறை மேடையேறியது ‘கவியின் கனவு’. ஒருமுறை நாகப்பட்டினத்தில் நாடகம் நடைபெற்றபோது, சேலத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு ‘கவியின் கனவு ஸ்பெஷல்’ ரயில் விடப்பட்டது. அந்த நாடகம் தந்த புகழின் வழியாகத்தான் திரைக்கு வந்தார் எஸ்.வி.சுப்பையா.

மடைமாற்றிய படங்கள்

முதுபெரும் இயக்குநர் பி.புல்லையா இயக்கி, 1946-ல் வெளிவந்த ‘விஜயலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் ‘கஞ்சன்’, ‘அபிமன்யு’, ‘மாயாவதி’, ’ராணி’, ’வேலைக்காரன்’, ‘புதுயுகம்’, ‘சுகம் எங்கே?’ என வரிசையாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ‘அபிமன்யு’வில் சகுனி, ‘மாயாவதி’யில் குரூபி, ‘நானே ராஜா’வில் வில்லன் என எதிர்மறை வேடங்களில் தொடக்கம் அமைந்தாலும், அடுத்து வந்த இரண்டு படங்கள் அதை மடைமாற்றி விட்டன. சிவாஜிக்கு அண்ணனாக நடித்த ‘மங்கையர் திலக’மும் (இதிலும் சுப்பையாவுக்கு பத்மினி ஜோடி), ஜெமினி கணேசனுக்கு அப்பாவாக, கந்துவட்டி மிராசுவிடம் விவசாய நிலத்தை இழக்கும் பாமர விவசாயி வேடம் ஏற்ற ‘காலம் மாறிப் போச்சு’வும் சுப்பையாவின் குணச்சித்திர நடிப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தன.

ஜெமினி கணேசனுக்கு அப்பாவாக வேடமேற்றபோது சுப்பையாவுக்கு வெறும் 36 வயது. ‘பொண்ணு விளையும் பூமி’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘பாத காணிக்கை’, ’ராமு’, ‘நானும் ஒரு பெண்’, ‘காக்கும் கரங்கள்’, ‘ஜீவனாம்சம்’, ‘குலவிளக்கு’, ’பாதுகாப்பு’, ’இருளும் ஒளியும்’ என்று நம் மண்ணுக்கே உரிய கதைகளில், மகத்தான இயக்குநர்கள்

உருவாக்கிய ரத்தமும் சதையுமான கதாபாத்திரங்களில், நம் குடும்பத்தில் ஒருவரைப்போல் உணரவைத்தவர் எஸ்.வி.எஸ்.

‘நானே ராஜா’வில் சிவாஜிக்கு தம்பி, ‘மங்கையர் திலக’த்தில் அண்ணன், ‘பாகப் பிரிவினை’யில் அப்பா என்று நடிகர் திலகத்துக்கு திரையில் நெருக்கமான இடத்தை எடுத்துக்கொண்ட சுப்பையா, எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நடித்தது ‘பணத்தோட்டம்’ படத்தில். நேர்மறை குணச்சித்திரம் என்றால், அது சுப்பையாதான் என்று மக்கள் தீர்மானித்துவிட்ட வேளையில், வில்லனாக நடிப்பதும் குணச்சித்திரத்தின் ஒரு அங்கம்தான் என்று ‘பணத்தோட்ட’த்தில் காட்டி, நம்மைப் பதற்றப்பட வைத்தார்.

பாரதியும் பக்தனும்

எஸ்.வி.சுப்பையாவின் முத்திரை நடிப்புக்கு அவர் நடித்த எந்தப் படமும் விதிவிலக்கு அல்ல. இருப்பினும் நான் இணைந்த, ‘காவல் தெய்வம்’ படத்தில் அவரது நடிப்பை உலகத் தரம் என்பேன். எழுத்தாளர் ஜெயகாந்தனின் தீவிர வாசகராக இருந்தார் எஸ்.வி.சுப்பையா. ஜெயகாந்தனின் ‘கைவிலங்கு’ என்ற குறுநாவலின் உரிமையை வாங்கித் தயாரித்து, நடித்தார். அதில் நானும் லட்சுமியும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தோம்.

சுப்பையாவுக்காக ஊதியம் பெற மறுத்து, கவுரவ வேடம் ஏற்றார் சிவாஜி. ‘கைதி என்பவன் இதயம் இல்லாதவன் அல்ல; மாறாக இதயம் உடைந்தவன், அவனுக்குத்தான் அதிக அன்பும் கருணையும் தேவைப்படுகிறது’ என்பதை தனது கண்களைக் கொண்டு, வசனமில்லாத நடிப்பால் காட்டினார் எஸ்.வி.எஸ். கைதி சாமுண்டியை (சிவாஜி) தன் பார்வையால் அவர் சாந்தப்படுத்தும் காட்சியில், நம் சப்த நாடிகளையும் அடக்கி அமைதியாக அவரை கவனிக்கவைத்தார்.

வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்களில், குறிப்பாக, கவிஞனாக அதுவும் மகா கவிஞனாக நடிக்க நேரும்போது, கவிஞனின் தாய்மொழியே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகனுடையதாகவும் இருந்தால், எத்தனை பெரிய அற்புதம் நிகழும் என்பதற்கு, ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் எஸ்.வி.சுப்பையா ஏற்ற பாரதியின் வேடம் ஓர் உதாரணம். நம் தலைமுறை காணாத பாரதியை, கண்முன் நிறுத்திய நடிப்பு அது. அந்தப் படத்தில் பாரதியின் பாடல்கள் சிலவற்றை திருச்சி லோகநாதன் பாடியிருப்பார். ஆனால், அத்தனையும் பாரதி பாடுவதுபோல் சுப்பையாவின் உயர்ந்த நடிப்பு நம்மை நம்ப வைத்தது.

தேசத்தின் மீது பக்தி கொண்ட பாரதியாக மட்டுமல்ல; தான் வணங்கும் தேவியின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்ட ஒரு சாமானிய பக்தன் அபிராமி பட்டராக வரும் ‘ஆதிபராசக்தி’ படத்தில், சுப்பையாவின் நடிப்பில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்க என்றைக்கும் மனம் ஒப்பாது. ‘சொல்லடி அபிராமி’ என தெய்வத்தின் முன்னால் நின்று உரிமையுடன் கேட்கும் வேடத்துக்கு, ஒரு நடிப்பாளுமை தேவைப்படுகிறது. அது எஸ்.வி. சுப்பையாவிடம் இருந்தது. செங்கோட்டையில் பிறந்து செங்குன்றத்தில் அடக்கமான எஸ்.வி.சுப்பையா, நடிப்பில் அசைக்கமுடியாத குன்றம்தான்.

கட்டுரையாளர்,

பன்முகக் கலைஞர் சிவகுமார்

தொடர்புக்கு: filmactorsivakumar@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x