Last Updated : 16 Oct, 2020 09:37 AM

1  

Published : 16 Oct 2020 09:37 AM
Last Updated : 16 Oct 2020 09:37 AM

களத்தூர் கண்ணம்மா 60 ஆண்டுகள்: ஒரு கதை, இரண்டு நட்சத்திரங்கள்!

உலகம் முழுவதும் மனித உணர்வுகள் ஒன்றுதான் என்பதற்கு என்றைக்குமான கண்ணாடி திரைப்படங்கள். பிறமொழித் திரைப்படங்களைத் தழுவியும் அவற்றின் தாக்கத்திலும் உருவானத் தமிழ்ப் படங்களின் பட்டியல் நீளமானது. குடும்பக் கதைகளின் பொற்காலம் என்று 60-களின் தமிழ் சினிமாவை இன்று மதிப்பிடக் காரணமாக இருக்கும் படங்களில் ஒன்று ஏவி.எம்மின் ‘களத்தூர் கண்ணம்மா’. 100 நாள் கண்ட இப்படம், ‘நோபடீஸ் சைல்ட்’ என்கிற சீன மொழிப் படத்தின் தாக்கத்திலிருந்து உருவானது. அதில் போரால் நிராதரவாக விடப்படும் ஒரு சிறுமி, தனது வளர்ப்புத் தந்தையால் விற்கப்படும் துயரம் அரங்கேறும். அப்போது அந்தச் சிறுமி தன்னைப் பெற்றெடுத்த தாய் - தந்தையைத் தேடத் தொடங்குவாள்.

சீனப் படத்தில், போருக்குப் பிறகான சூழல், அந்தச் சிறுமியைத் துயரத்தின் குழந்தையாக்கும். தமிழிலோ, ஐந்து வயதுச் சிறுவன் கமல்ஹாசனை, காதலின் வர்க்க பேதம் கருணை இல்லத்தில் தள்ளும். ‘நோபடீஸ் சைல்ட்’ - ‘களத்தூர் கண்ணம்மா’ ஆகிய இரண்டு படங்களிலும் இடம்பெற்ற குழந்தைக் கதாபாத்திரங்களின் உணர்வுநிலை ஒன்றாக இருந்தாலும் களமும் கதாபாத்திரங்களும் வெவ்வேறு. ஆனால், ஆச்சர்யகரமாக சினிமா வரலாற்றில் சில ஒற்றுமைகளை ஈட்டிய படங்கள்.

இரண்டு தயாரிப்புகள்

ஹாங்காங்கில் தயாராகி சீனா, ஜப்பான், தென்கொரியா தாண்டி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது ‘நோபடீஸ் சைல்ட்’. முதலில் திரைப்பட விழாக்களிலும் பின்னர் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியாவில் வெளியானபோது தமிழில் இரண்டு ஜாம்பவான்கள் அந்தப் படத்தின் தாக்கத்தில் தமிழில் படம் எடுத்தார்கள். முந்திக்கொண்டவர் ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை. தானே திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து, தாதா மிராசியை இயக்கவைத்த அந்தப் படம் 1960 - ஜூலை மாதம் வெளியாகி வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘கடவுளின் குழந்தை’. இதன்பின்னர் ஒருமாதம் கழித்து ஆகஸ்டில் ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ மாபெரும் வெற்றிபெற்றது. ஒரே கதையின் தாக்கத்திலிருந்து உருவானவை என்றபோதும், இரண்டு படங்களும் முற்றிலும் வேறாக இருந்தன.

இரண்டு படங்களிலுமே ஜாவர் சீதாராமன் இருந்தார். முன்னதில் அவர் நடிகர் என்றால், பின்னதில் திரைக்கதை எழுத்தாளர். ‘களத்தூர் கண்ணம்மா’வில் உதவி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்ற எஸ்.பி.முத்துராமன் என்கிற இளைஞர், பின்னாளில் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநராக 70 படங்களை இயக்கிச் சாதனை படைத்தார். இப்படிப் பல சாதனை முகங்களை தமிழ் சினிமாவுக்குத் தந்த ‘களத்தூர் கண்ணம்மா’வின் தனிப்பெரும் அடையாளம் கமல்ஹாசன்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் மாஸ்டர் கமல்ஹாசன், சாவித்திரி

‘தென்னகத்துத் திரைவானுக்கு ஏவி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம்’ என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் ‘கமல்ஹாசன்’, அந்தப் படத்தில் ‘சுயம்புவாக’ தந்த நடிப்புக்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன்பின் ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பாத காணிக்கை’, ‘வானம்பாடி’, ‘ஆனந்த ஜோதி’ உள்ளிட்ட படங்களில் அன்றைய சூப்பர் ஸ்டார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசனுடன் நடித்து, அவர்களின் மடிகளில் துள்ளி விளையாடினார். பின்னர், பாலசந்தரால் ‘அரங்கேற்றம்’ (1973) படத்தில் திருப்புமுனை பெற்று, கவின்மிகு மலையாளம் பேசியபடி ‘கன்னியாகுமரி’யில் (1974) கதாநாயகன் ஆகி, இன்றைக்கு உலகநாயகனாக உயர்ந்து நிற்பது ஊரறிந்த கதை.

 ‘நோபடீஸ் சைல்ட்’ படத்தில் சிறுமியாக சியாவ்

இரண்டு நட்சத்திரங்கள்

ஹாங்காங்கில் தயாராகி சீன மக்களின் மனதைக் கொள்ளையடித்த ‘நோபடீஸ் சைல்ட்’ (1958) திரைப்படத்தில் ஆதரவற்ற சிறுமியாக அறிமுகமானவர் 11 வயது ஜோஸ்பின் சியாவ் (Josephine Siao). சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை அறிமுகப் படத்துக்காகப் பெற்று 60-களின் சீனத் திரையில் அதிக ஊதியம் பெறும் குழந்தை நட்சத்திரமானார். கமலைப் போலவே பதின்ம வயதுக்கான கதாபாத்திரங்களின் வழியே புகழ்பெற்று, 80-களில் சீனத் திரையின் கனவு ராணியாக உச்சம் தொட்டார். சீன வெகுஜன சினிமா, சீன மாற்று சினிமா ஆகிய இரண்டு தளங்களிலும் தனது அடையாளங்களைப் பதித்த சியாவ், கமல்ஹாசனைப் போலவே பாடகர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறனாளி.

ஸ்பெயின், பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேசப் படவிழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றெடுத்த நடிப்பு ராட்சசி. சீனத் திரையில் ‘மெத்தட் ஆக்டிங்’ முறையை முதன்முதலில் முயன்று வெற்றி கண்ட லேடி சூப்பர் ஸ்டார். கமலைப் போலவே இன்று தொலைக்காட்சியிலும் 74 வயது சியாவின் ஆட்சி தொடர்கிறது. கமல்ஹாசன் என்கிற ஆளுமையைத் தவிர்த்துவிட்டு எப்படி இந்திய சினிமாவின் வரலாற்றை எழுதமுடியாதோ, அப்படித்தான் சீனத்தின் சினிமா வரலாற்றில் ஜோஸ்பின் சியாவின் ராஜபாட்டையும்.

‘களத்தூர் கண்ணம்மா’வில் கமல்ஹாசன்

தொடரும் சுவடுகளும் தாக்கமும்

‘களத்தூர் கண்ணம்மா’ வழியாக நமக்கு கமல்ஹாசன் கிடைத்தது அந்தப் படத்தின் மதிப்பைப் பன்மடங்காக ஆக்குவதுபோல், அந்தப் படம் விட்டுச் சென்ற தாக்கமும் சுவடுகளும் இன்னும் தமிழ் சினிமாவில் தொடரவே செய்கின்றன. இந்தியக் காதலின் வர்க்கப் பேதம் ‘களத்தூர் கண்ணாமா’விலிருந்து சேரனின் ‘பாரதி கண்ணம்மா’ வரை நீண்டு, ‘பரியேறும் பெருமா’ளின் சாதி ஆணவக் கொலைகளாக இன்றுவரைத் தொடர்வதைக் காணமுடியும். ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற தலைப்புக்கு ஏற்ப ஒரு பெண் மைய கதையை முன்னிறுத்தியது. இன்று தமிழ் சினிமாவில் பெண் மையக் கதைகளின் முக்கியத்துவமும் தேவையும் உணரப்பட்டிருப்பது அதிர்ஷ்டவசமானது.

அதேபோல் ‘களத்தூர் கண்ணம்மா’ ஒரு சிறந்த குழந்தைகள் திரைப்படமாகவும் மாறியிருந்தது. ஆனால் ஒரு எதிர்முரணாக குழந்தைகள், சிறார் கதாபாத்திரங்களை பெரியவர்களுக்கான முதிர்ச்சியுடன் சித்தரிப்பதைத் தமிழ் சினிமா வணிக நோக்கங்களுக்காகத் தொடர்ந்துவருகிறது. அதைப்போலவே குழந்தைகள் திரைப்படம் என்பது அவர்கள் மீதான பாலியல் அத்துமீறலைச் சித்தரிப்பது என்கிற பெட்டிக்குள் அடைப்பதும் பரிதாபம்தான். அதேநேரம், ‘களத்தூர் கண்ணம்மா’ போன்ற பொற்காலத் திரைப்படங்களில் இன்றைய தமிழ் சினிமா கற்றுக்கொள்ள எவ்வளவோ உண்டு.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x