Published : 16 Oct 2020 09:25 AM
Last Updated : 16 Oct 2020 09:25 AM

கோடம்பாக்கம் சந்திப்பு - ‘பவித்ரா’ முழுமையானவள்!

‘விவேகம்’, ‘கடாரம் கொண்டான்’ படங்களைத் தொடர்ந்து அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் 3-வது நேரடித் தமிழ்ப்படம் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’. இந்தப் படத்தில், ‘பவித்ரா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அக்ஷரா. 19 வயது இளம்பெண், தன்மீது குடும்பமும் சமூகமும் கட்டமைத்திருக்கும் கற்பிதங்களை எவ்வாறு உடைத்தெறிகிறாள் என்பது கதை. “இன்றைய நவநாகரிக உலகில் வாழும் அனைத்துப் பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள். பவித்ரா முழுமையானவள்” என்கிறார், இந்தப் படத்தின் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி.

தான்யாவுக்கு உயர்வு!

மறைந்த முதுபெரும் நடிகர் ரவிச்சந்திரனின் வாரிசாக நடிக்கவந்தவர், அவரது பேத்தி தான்யா. அவர், கடைசியாக விஜய்சேதுபதியின் ஜோடியாக ‘கருப்பன்’ என்கிற படத்தில் நடித்து கவனிக்கவைத்தார். இதுவரை, 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் தான்யாவுக்குப் பெண் மையக் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். ‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொம்பு வைச்ச சிங்கம்டா’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதிய படம் இது. “தான்யாவுடன் ஜெயப்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சமூக க்ரைம் த்ரில்லர் படம்” என்கிறார் இயக்குநர்.

இங்கே வில்லன், அங்கே நாயகன்!

‘ராட்சசன்’ படத்தில் சற்றும் எதிர்பாராத ஆசிரியர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மிரட்டலான நடிப்பால் கவர்ந்தவர் வினோத் சாகர். நவீன நாடகக் கலைஞரான இவர், தற்போது, கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’,
இயக்குநர் அமீர் நடிப்பில், வி.இஸட். துரை இயக்கத்தில் உருவாகும் ‘நாற்காலி’, அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் ‘பயமறியா பிரம்மை’, அமலா பால் தயாரித்து நடிக்கும் ‘கடாவர்’, சமந்தா நடிக்கும் படம் உட்படத் தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டே, மலையாளத்தில் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.

அங்கே, ‘சார்லி’ படத்தை இயக்கிய மார்டின் இயக்கத்தில் ‘நாயாட்டு’, பிருத்விராஜ் நடிக்கும் ‘ஜன கண மன’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, கதாநாயகன் வாய்ப்பு கிடைத்துவிட்டது. “எந்தச் சட்டைக்கும் பொருந்தும் உடலைக் கொண்டிருப்பது யதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் என்னைப் போன்ற நடிகர்களால் திரையிலும் மேடையிலும் அது சாத்தியம். நடிகனின் உடல் கூடுபாயும் தன்மை கொண்டது. எவ்வளவு சவாலான கதாபாத்திரம் என்றாலும், அதை ஏற்கத் தயார். வில்லனுக்கான நடிப்பை மறுவரையறை செய்யவும் விரும்புகிறேன்” என்கிறார்.

அதிர்ஷ்ட ரீமேக்!

கதையும் திரைக்கதையுமே ஒரு சிறந்த திரைப்படத்தின் கதாநாயகன் என்பதை நிறுவிக்காட்டிய இந்தித் திரைப்படம் ‘அந்தாதூன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018இல் வெளியான இப்படம், வெறும் 32 கோடி ரூபாயில் தயாராகி 30 மடங்கு வசூல் செய்தது. சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளை வென்ற இந்தப் படத்தின் தமிழ் மறுஆக்கத்தில் பிரசாந்த் நடிக்க, 'பொன்மகள் வந்தாள்' படப் புகழ் ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்குகிறார். பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும் ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ படத்தில் இணைந்து நடித்த நட்பின் உரிமையுடன், ஐஸ்வர்யா ராயை இதில் நடிக்க வருமாறு அழைத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் இணைந்தால், பிரசாந்துக்கு இது அதிர்ஷ்ட ரீமேக் ஆகக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x