Published : 25 Sep 2015 12:08 PM
Last Updated : 25 Sep 2015 12:08 PM
வளரிளம் பருவத்தைச் சேர்ந்த நாயக நாயகிகளை மையமாக வைத்து ஒரே காலகட்டத்தில் (1981) இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று, கார்த்திக், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’. மற்றொன்று சுரேஷ், சாந்தி கிருஷ்ணா நடிப்பில் பாரதி-வாசு இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’. பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதலைப் பற்றிப் பேசியது ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்த வயதில் ஏற்படும் காதலுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியை எழுப்பியது ‘பன்னீர் புஷ்பங்கள்’.
இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம், செறிவான இசைக்கோவைகள் அடங்கிய பாடல்களும், பின்னணி இசையும். இரண்டுக்குமே இசை, இளையராஜா. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் ஊட்டி கான்வென்ட் பள்ளியின் பின்னணியில், இயற்கையின் வசீகரப் பிரதேசங்களைத் தனது இசை மூலம் மேலும் அழகூட்டினார். அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார்.
உமா ரமணனின் தனித்த குரலுக்குப் பொருத்தமான பல பாடல்களைத் தந்திருக்கும் இளையராஜா, இப்படத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட வெள்ளம் போன்ற இசைக் கோவை கொண்ட ‘ஆனந்த ராகம்’ பாடலைத் தந்தார். கள்ளமற்ற நட்புடன் பழகும் நாயகிக்கும், எதிர்பாலின ஈர்ப்பின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகனுக்கும் இடையில் மெலிதாக அரும்பும் அன்பின் வெளிப்பாடு இப்பாடல். ஆர்ப்பரிக்கும் அருவி நீர் பாறையில் விழுந்து தெறிக்கும்போது மேலெழும் சாரலைப் போல், இசைக் கருவிகளின் கலவைக்கு மேல் உமா ரமணனின் குரல் ஒலிக்கும்.
நிரவல் இசையில், இருவரின் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் வயலின் தீற்றல்களுக்கு நடுவே, ஷெனாயை ஒலிக்க விட்டிருப்பார். எதிர்பாராத இசைக் கலவை அது. சந்தோஷமான மனநிலையின் பின்னணியில் ஒலிக்கும்
இப்பாடல், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நண்பர்கள் உதவியுடன் நாயகனும் நாயகியும் ஓடிச்செல்லும்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கும். விடலைக் காதலுக்குப் பின்னணியாக ஒலித்த அதே பாடல், கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையுறும் நடுத்தர வயதினரின் பரிவுடன் ஒலிக்கும். ஒரே இசை வடிவில், அதே குரலில் ஒரு படத்தில் இரண்டு முறை ஒலித்த பாடல் என்பது இதன் தனிச்சிறப்பு. இரவில் கண்ணை மூடி இப்பாடலைக் கேட்பவர்கள் வண்ணங்கள் கரைக்கப்பட்ட நதியில் இழுத்துச் செல்லப்படுவதைப்போல் உணர்வார்கள்.
எஸ்.பி.பி-எஸ். ஜானகி பாடிய ‘பூந்தளிராட பொன் மலர் சூட’ பாடல், அந்த ஜோடியின் மிகச் சிறந்த 10 பாடல்களில் ஒன்று. இளம் காலைப் பொழுதில் புதிதாக மலரும் மொட்டைப் போன்ற மலர்ச்சியான இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இசைக் கருவிகளுக்கு இணையாக, பெண்குரல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. கண்ணுக்குத் தெரியாத காதல் தேவதைகள் இளம் காதலர்களை வாழ்த்துவதுபோன்ற அலாதியான கற்பனை அது.
பொங்கி வரும் குதூகலத்தை அடக்கிக்கொண்டு அமைதியான தொனியில் பாடியிருப்பார் எஸ்பிபி. அறியாத வயதில் ஏற்படும் குறுகுறுப்பையும், தன் மீது காட்டப்படும் அன்பு ஏற்படுத்தும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இளம் பெண்ணின் குரல் வடிவமாக ஜானகியின் குரல் ஒலிக்கும். பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் வயலின், புல்லாங்குழல், பியானோ என்று இசைக் கருவிகளின் சொர்க்கபுரியையே உருவாக்கியிருப்பார் இளையராஜா. பிரவாகமாகப் பொங்கும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து, மவுனத்தின் பின்னணியில் தொலைதூரத்துப் பறவையின் சத்தம் மென்மையாக ஒலிக்கும்.
‘லலலல்லல லலலல்லா’ என்று வசந்த காலத்து தேவதைக் குரல்களின் குரல் அதைப் பின்தொடரும். இந்தப் பாடலில் பங்குபெற்ற ஒவ்வொரு இசைக் கலைஞரும் தனது வசந்த கால நினைவுகளுடன் இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசித்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பாடலில் இத்தனை இனிமை சாத்தியமேயில்லை!
இயற்கையின் சுகந்தத்தைப் பிரதிபலிக்கும் பல பாடல்களை, மலேசியா வாசுதேவனுக்காகவே இளையராஜா உருவாக்கி யிருப்பாரோ என்று சில சமயம் தோன்றும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் பாடல் ‘கோடைகாலக் காற்றே’. பள்ளிப் பருவத்துச் சுற்றுலாவின் குதூகலத்தை அசலாக வெளிப்படுத்தும் பாடல் இது. மவுத்-ஆர்கன் இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இளம்பிராயத்து நினைவுகளை மீட்டும் கிட்டார் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். மலைப்பிரதேசத்தில் வீசும் கோடை காலக் காற்றின் மிதமான குளுமையுடன் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன்.
மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பிரதாப் போத்தன் பாடும் பாடல் இது. பொறுப்பும் கண்ணியமும் நிறைந்த ஆசிரியரின் குரல் மலேசியா வாசுதேவனிடம் தொனிக்கும். ஏகாந்தம் தரும் இயற்கையின் அழகைத் தானும் வியந்துகொண்டு, இளம் வயதினரிடம் ரசனையையும் அழகுணர்ச்சியையும் விதைக்கும் நடுத்தர வயது மனதின் வெளிப்பாடு இப்பாடல்.
‘வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ’ எனும் வரியில் அழகான சித்திரத்தைக் காட்டிவிடுவார் கங்கை அமரன். சூரிய ஒளியில் மிளிரும் விளிம்பு கொண்ட மேகங்களுக்குக் கீழே, பசுமையான குன்றுகளில், கவலையற்றுத் திரியும் மாணவப் பருவத்தை நினைவுபடுத்தும் இப்பாடல், இளையராஜா நமக்களித்த அன்புப் பரிசு!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT