Published : 25 Sep 2015 10:58 AM
Last Updated : 25 Sep 2015 10:58 AM
‘முகமூடி’ படத்துக்குப் பிறகு சீரியஸான, அதே நேரத்தில் நெகடிவ் கதாபாத்திரங்களே என்னை நெருங்கின. மொத்த இமேஜையும் மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு இடைவெளி வேண்டும். அதே நேரத்தில், அடுத்து யூமர் பின்னணியிலும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன் நட்பு கிடைத்தது. இருபது நிமிடங்கள் கதை சொன்னார். இதுதான் நம்மோட அடுத்தப் படம் என்று உடனே முடிவெடுத்தேன். `முகமூடி’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை அதிரவைத்த சாக்லேட் ஹீரோ நரேன் கத்துக்குட்டியாக திரும்பி வந்திருக்கும் பின்னணிக் கதையை நம்மிடம் பகிர்ந்தபடி பேசத் தொடங்கினார்...
நீங்கள் கேரளத்திலிருந்து வந்தவர். இது தஞ்சையில் நடக்கும் மண்வாசனைக் கதை என்று தெரியும். இந்தப் படத்திற்காக உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டியிருந்ததா?
கேரளம் என்ன காஷ்மீர் என்ன? நம் நாட்டில் கத்துக்குட்டிகளுக்கா பஞ்சம்? ஆனால் இந்தக் கதையில் வரும் கத்துக்குட்டியிடம் ஊர் வழக்கு ஒட்டிக்கொண்டிருந்ததை கதையைக் கேட்டபோதே உணர்ந்தேன். இவன் கத்துக்குட்டியாகவே தேங்கிப்போய்விடுகிறவனும் இல்லை. எனவே இயக்குநர் கூடவே இருந்து பேசிப் பழகத் தொடங்கிவிட்டேன். அவரது ஊருக்குப்போய் அவருடன் அடையாளம் தெரியாதவாறு பல நாட்கள் சுற்றினேன். சென்னை திரும்பிய பிறகும் நாள் தவறாமல் அவரை சந்திப்பேன். கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சி, விவசாயம் வரைக்கும் நிறைய பேசுவார். அதையெல்லாம் கூர்ந்து கவனித்து என் கேரக்டருக்குப் பயன்படுத்திக்கொண்டேன்.
தஞ்சையின் பேச்சுவழக்கில் டப்பிங் பேச சிரமம் இருந்திருக்குமே?
படத்தில் எனக்கு அப்பாவாக ஜெயராஜ் நடித்திருக்கிறார். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி. முதல் நாள் டப்பிங் ஸ்டுடியோ போனேன். அவர் டப்பிங் பேசும் பணி நடந்துகொண்டிருந்தது. நான் எப்படி டப்பிங் பேசப் போகிறேன் என்ற பயத்தோடுதான் உள்ளே போனேன். ‘என்ன இயக்குநரே... ஜெயராஜ் ஃபெர்பெக்டா டப்பிங் பேசி அசத்திட்டாரா?’ என்று கேட்டேன்.
‘ஒரு நாள் முழுக்க டப்பிங் ஸ்டுடியோவில் இருந்தும் ஒரு சீன் கூட பேசலைங்க’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ‘அவருக்கு வரலைன்னா, எனக்கு கண்டிப்பா வந்துடும்’ என்று நானும் கிண்டலடிச்சேன். ஆனால் ஃபீல்டு விசிட்டும் இயக்குநர் போட்டுக்காட்டிய ஊர்மக்களின் வீடியோ க்ளிப்பிங்ஸும் எனக்கு கொடுத்த தைரியத்துல தஞ்சாவூர் ஸ்லாங்ல பேசி கலக்கியிருக்கேன்.
ரீஎண்ட்ரிக்கு ஒரு அறிமுக இயக்குநர் படத்தில் நடிக்க எப்படி தைரியம் வந்தது?
நான் இயக்குநர் மிஷ்கின்கூட வேலை பார்க்கும்போது எங்க இருவருக்கும் அதுதான் முதல் படம். ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் கதையை அவர் சொல்லும்போதே அப்படி ஒரு தெளிவோடு சொன்னார். இவ்வளவு தெளிவாகக் கதை சொல்லும் ஒருவரால் நிச்சயம் நல்ல படத்தைத்தான் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அப்படித்தான் சரவணனும். கதை சொல்லும்போது முழு படம் பார்க்கிற ஃபீல் கொடுத்தார். இயக்குநர்தான் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி. ஆனால் அவருடைய கதை புலிக்குட்டி. சினிமாவுக்கு முன்னாடி பத்திரிகையாளரா பல ஆண்டுகள் வேலை செஞ்சிருக்கார்.
இங்க பத்திரிகையாளரா இருக்கிறது லேசுபட்ட காரியம் இல்லங்கிறது எனக்கு நல்லாவே தெரியும். அந்த ஒரு தகுதியே அவருக்குப் போதும்ன்னு எனக்குத் தோணுச்சு. நான் அவர்மேல வெச்ச நம்பிக்கை வீணாகலை. மேக்கிங்ல பேர் வாங்கிடனும்ன்னு அவர் பட்ட கஷ்டத்துக்கு ஃபைனல் ரிசல்ட் அட்டகாசமாக வந்துருக்கு. எனக்கு இணையா சூரிக்கும் இந்தப் படம் மைலேஜ் கொடுக்கும்.
விஜய் நடித்திருக்கும் ‘புலி’ பட ரிலீஸ் அன்றே ‘கத்துக்குட்டி’ ரிலீஸாகிறதே? ஏன் இந்த அசட்டுத் துணிச்சல்?
இரண்டு மாதங்களுக்கு முன் விஜயை நான் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரது படத்தோட இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தது. ‘உங்க படம் எப்போ ரிலீஸ்?’ என்று கேட்டேன். தேதி முடிவாகாமல் இருந்ததை சொன்னார். ‘கத்துக்குட்டி’னு ஒரு படம் நடிச்சிருக்கேன். உங்க படம் ரிலீஸாகிற நேரத்துல அந்தப்பக்கம் வரவே கூடாது. அதனால்தான் கேட்டேன் என்று நானே சொன்னேன். ‘என்ன பிரதர், படம் நல்லா இருந்தால் எப்போ ரிலீஸானாலும் கண்டிப்பாக ஓடும்! இங்க விஜய் முகமோ, நரேன் முகமோ படம் பார்க்குற ரசிகனுக்குத் தேவையில்ல. கதைக்குன்னு ஒரு முகம் இருக்கு.
அது புடிச்சுப்போச்சுன்னா அதை தன்னோட முகமா நினைச்சுக்குவான்’ என்று அட்வைஸ் கொடுத்து கைகுலுக்கிட்டு கிளம்பினார். நான் `ஸ்டன்’ ஆகிட்டேன். அப்போ இரண்டு படங்களுமே எப்போது ரிலீஸ் என்று திட்டமிடவில்லை. படத்தை அக்டோபர் இறுதி வாரத்தில் ரிலீஸ் செய்யத்தான் திட்டமிட்டிருந்தோம். அப்போதுதான் படத்தோட தயாரிப்பாளர் காந்தி ஜெயந்தி நேரத்தில் ரிலீஸ் ஆனால் நல்லா இருக்கும் என்று விரும்பினார்.
அதோடு நான்கு நாட்கள் சேர்ந்த மாதிரி விடுமுறையும் இருக்கிறது. அப்படித்தான் இந்த ரிலீஸ் தேதி முடிவானது. இயக்குநர் சரவணன்கூட ‘‘ நான் முதல் நாள் முதல் ஷோ ‘புலி’ படம்தான் பார்ப்பேன். ரசிகர்களும் ‘புலி’படத்தை பார்த்துவிட்டு ‘கத்துக்குட்டி’ பார்க்க வந்தால் போதும்’ என்றார். அப்படி செய்தாலே போதுமே.
நரேனுக்குள் ஓர் ஒளிப்பதிவாளரும் உண்டு எனக் கேள்விப்பட்டோம். அது உண்மைதானா?
ஆமாம்! ஆனால் நடிப்புதான் இனி தொழில் என்று முடிவெடுத்த உடனே கேமராவை விட்டு வெளியே வந்தேன். அதுவா, இதுவா என்று முடிவெடுக்க முடியாத நிலை எப்போதும் இருக்கக் கூடாது. ‘முகமூடி’ படத்துக்குப் பிறகு பிறகு அதே வரிசையில் படம் வந்தபோது வேண்டாம் என்ற உறுதியான முடிவில் இருந்தேன். அப்படித்தான் எல்லாமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT