Published : 18 Sep 2015 11:06 AM
Last Updated : 18 Sep 2015 11:06 AM
உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டது வெற்றி மாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம். வெனிஸ் படவிழாவின் போட்டிப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையோடு ‘மனித உரிமைக்கான படம்’ என்ற பிரிவில் விருதைப் பெற்றுத் திரும்பியிருக்கிறது. கதாசிரியர், நடிகர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர் உள்ளிட்ட தன் படக் குழுவுடன் வெனிஸ் படவிழாவில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பி வந்திருந்த இயக்குநர் வெற்றி மாறனைச் சந்தித்தோம்...
சர்வதேசப் பட விழாக்கள் உங்களுக்குப் புதிதல்ல. வெனிஸ் படவிழாவில் விசாரணை திரையிடப் பட்டபோது அதைப் பார்த்த ரசிகர்களின் உணர்வு எப்படியிருந்தது?
செப்டம்பர் 10-ஆம் தேதி வெனிஸ் பட விழாவில் ‘விசாரணை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. 1,400 பேர் அமரக்கூடிய மிகப் பெரிய திரையரங்கம். அதில் பாதி அரங்கத்துக்கும் மேல் அமர்ந்திருந்தனர். படம் முடிந்ததும் 8 நிமிடத்துக்கு இடைவிடாமல் கைதட்டினார்கள். என்னோடு வந்திருந்த அத்தனை பேருமே கண் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் நாங்கள் திரைப்பட விழாவில் இருந்தோம். திரையிடலுக்குப் பிறகு விழாக் குழுவினரும் சரி, சர்வதேச ஊடகத்தினரும் சரி எங்களுடன் கனிவுடன் பழகிய விதம் எங்களை மேலும் நெகிழச் செய்தது.
எந்தப் பிரிவின் கீழ் தற்போது விருது கிடைத்திருக்கிறது?
வெனிஸ் சர்வதேசப் பட விழாவின் விருதுக் குழுவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து ‘மனித உரிமைக்கான படம்’ என்ற விருதை அறிவித்திருக்கின்றன. இந்த விருதை மிக முக்கியமானதாக நினைக்கிறோம். ஏனென்றால் மனித உரிமை மீறல்களைக் கேள்வி கேட்கும் படமாக இது இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். அந்த வகையில் மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட வலு வான அமைப்பாகக் கருதப்படும் ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ இந்தப் படத்தை மனித உரிமைக்கான படமாக அங்கீகரித்திருக்கிறது.
அவர்கள் விருதை அறிவிக்கும்போது “மனித உரிமையை வலியுறுத்தும் பல படங்கள் இந்த ஆண்டு கலந்துகொண்டன. அவற்றில் மனித உரிமைக்கான மிகச் சிறந்த படமாக விசாரணையைத் தேர்வு செய்திருக்கிறோம். குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவும், சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களும் அத்துமீறல்களைப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் விதமும் துணிவுடனும் நேர்மையுடனும் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்கள். ஒரு வேலையைச் சரியாகச் செய்யத் தொடங்கியிருக்கிறோம் என்பதற்கான அங்கீகாரமாக இந்த விருது எங்கள் படக் குழுவுக்கு நிறைவைத் தந்திருக் கிறது.
வெனிஸ் பட விழாவைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?
நமது படம் எடுத்து முடிக்கப்பட்டு முழுவதும் தயாராகும்போது எந்தத் திரைப்பட விழா தயாராக இருக்கிறதோ அந்த விழாவுக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும். விசாரணையின் முதல் பிரதி தயாரானதும் வெனிஸ் பட விழா வெகு அருகில் வந்ததால் அவர்களுக்குப் படத்தை அனுப்பி, பார்க்கும்படி வேண்டுகோள் வைத்தோம். அவர்களும் படத்தைப் பார்த்துப் போட்டிப் பிரிவுக்கு ஏற்றுக்கொண்டார்கள். சின்னச் சின்ன நிபந்தனைகளை வைத்தார்கள். அதையெல்லாம் ஒப்புக்கொண்டுதான் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டோம்.
ஓர் எளிய ஆட்டோ ஓட்டுநரான மு. சந்திரகுமாரின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கத் தூண்டியது எது?
சந்திரகுமாரின் வாழ்க்கைப் பதிவாக வெளியான ‘லாக் அப்’ புத்தகத்தில் இருந்த உண்மைதான் என்னை அதைப் படமாக்கத் தூண்டியது. நான் வாழும் காலத்தில் வாழும் ஒரு சாமானிய சக மனிதனுக்கு ஏற்பட்ட அவலம் அது. ‘அரசர்களின் வாழ்க்கை மட்டுமே வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் சாமானியர்களின் வாழ்க்கை என்ன என்பது நமக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடுகிறது. சாமானியர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது நமது மரபிலேயே இல்லை’ என்று நண்பர்களில் ஒருவரான தங்கவேலன் அடிக்கடி சொல்வார். அது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.
இந்த உண்மைக் கதையை நான் படமாக்கக் காரணம் அதிலிருந்த சக மனிதனின் வலிதானே தவிர, கலை நயம், இலக்கிய நயம் என்று எதற்காகவும் இல்லை. ஒரு சக மனிதர் பகிர்ந்திருக்கும் வலி, நாளை எனக்கான வலியாகவும் மாறிவிடும் சூழல் ஏற்படலாம். எதிர்காலத்தில் மாற்றங்களை உருவாக்குவதாகத்தான் எந்தக் கலையுமே இயங்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவேதான், சந்திரகுமாரின் கதையைப் படமாக்கினேன்.
உங்கள் நண்பர் தனுஷ் இந்தப் படத்துக்குப் பொருத்தமானவராக இல்லையா?
மிகவும் பொருத்தமாக இருந்திருப்பார். ஆனால், அவரால் பண்ண முடியாமல் போய்விட்டது. நாங்கள் ‘சூதாடி’ படம் பண்ணிக்கொண்டிருந்தோம். அவர் இந்திப் படம் ஒன்றை உடனடியாக நடித்துக் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் நான்கு மாதம் அந்தப் படத்துக்கு ஒதுக்கிவிடுகிறேன் என்றார். அப்படியானால் அந்த இடைவெளியில் நான் ஒரு படம் இயக்கிவிடுகிறேன் என்றேன்.
என்ன இப்படி சொல்கிறீர்கள் என்றார். பிறகு, என்ன கதை என்றார். நான்கு சாமானிய இளைஞர்களின் கதை என்று முழுக் கதையும் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன். உடனே அவர், “வேணாம் சார், கதையைச் சொல்லாதீங்க. சொன்னால் நானே அதில் நடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். மறுபடியும் உங்களுக்கு லேட் ஆகும்” என்றார். “உங்களுக்கு இந்தப் படத்துக்கு எவ்வளவு செலவாகுமோ சொல்லுங்கள், நான் கொடுக்கிறேன்” என்று அவரே தயாரித்தார். இன்னும் படத்தை தனுஷ் பார்க்கவில்லை.
தனுஷ் இல்லாத இடத்தை நீங்கள் தேர்வு செய்த தினேஷும் மற்ற நடிகர்களும் எப்படி நிறைவு செய்திருக்கிறார்கள்?
இந்தப் படத்துக்காக எனக்குக் கிடைத்த நடிகர்கள் அனைவருமே வரம் என்றுதான் சொல்லுவேன். காரணம் உடல்ரீதியாகவும் மனரீதியா கவும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய படம். காட்சிப்படுத்தல்களில் உண்மை தேவைப்பட்டதால் நடித்தவர்கள் எத்தனை வலியைச் சுமந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் படத்தைப் பார்க்கும்போது உணர முடியும்.
வெனிஸ் பட விழாவுக்கு கதாசிரியர் சந்திரகுமாரையும் அழைத்துச்சென்று அவருக்குக் கவுரவம் செய்திருக்கிறீர்களே?
அவரது வாழ்க்கை அனுபவம்தான் எனக்குப் படமாக மாறியிருக்கிறது. எனது படத்துக்கான அங்கீகாரம் என்பது அவருடைய வலியிலிருந்து பிறந்திருக்கிறது. படம் முழுவதுமாக முடிந்ததும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினேன். என்னைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டுச் சொன்னார். “அந்தக் கொடுமையான நாட்களில் எங்கள் அழுகையும் கூக்குரலும் நாங்கள் அடைபட்டிருந்த நான்கு சுவர்களைத் தாண்டிக் கேட்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். இனி உலகம் முழுக்க எங்கள் குரல் கேட்கப்போகிறது” என்றார். அப்படிச் சொன்னவர், அதை நேரே உணரவும் கேட்கவும் வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் அவரை அழைத்துச் சென்றேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT