Published : 09 Oct 2020 09:47 AM
Last Updated : 09 Oct 2020 09:47 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: அரிய வாய்ப்பு!

தென் தமிழகத்தில் வாழும் புதிரை வண்ணார் சமூகத்தினரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு ‘மாடத்தி’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றுவரும் ‘மாடத்தி’, தெற்காசியத் திரைப்பட விழாவுக்கும் தேர்வாகியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகப் படத்தை cosaff.org என்கிற இணையதளத்தில் நாளைவரை இலவசமாகக் காணலாம். சாதியப் படிநிலைக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டும் காணாமல் இருக்கப் பழகிப்போன யாரையும் உலுக்கியெடுக்கும், இந்தப் படத்தைக் காண திரை ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு.

தருண் கோபியின் 3 படங்கள்

விஷால் நடித்த ‘திமிரு’, சிம்பு நடித்த ‘காளை’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் தருண்கோபி. பின்னர் ராசு மதுரவன் இயக்கத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துச் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்றார். இவரது இயக்கம், நடிப்பில் ‘திமிரு - 2’, ‘அருவா’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது மூன்றாவதாக ‘யானை’ என்கிற மண்வாசனைக் குடும்பப் படத்தை இயக்கவுள்ளார்.

இதில் அவர் நடிக்கவில்லை. ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண் கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் நாயகன் ஆண்டனி நாயகனாக நடிக்க, முன்னணிக் கதாநாயகியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நடித்தி முடிக்க இருக்கிறது படக்குழு.

பிரேசில் இணையப் படவிழா

பன்னாட்டுக் கலாச்சாரத் தூதரகங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் சர்வதேசப் படவிழாக்களை நடத்திவருகிறது, சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன். கரோனா காரணமாகத் திரையிடல்கள் அனைத்தையும் இணையம் வழியாக நடத்திவருகிறது. இந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதிவரை, ‘ஹவுஸ் ஆஃப் சாண்ட்’(House of Sand), ‘ரெட் கார்பெட்’ (Red Carpet), ‘தி இன்ஹெரிட்டன்ஸ்’ (The Inheritance), ‘ஸூஸூ ஏஞ்சல்’ (Zuzu Angel) ஆகிய நான்கு தற்கால பிரேசிலியன் படங்களைக் காணலாம். இப்படங்களின் இணையவழித் திரையிடல் இணைப்புகளை 9840151956/8939022618 ஆகிய தொலைபேசி எண்களில் பேசிப் பெற்றுக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x