Published : 02 Oct 2020 09:28 AM
Last Updated : 02 Oct 2020 09:28 AM
மகிழ்ச்சி, துக்கம், கோபம், கழிவிரக்கம், காதல், காமம் ஆகிய உணர்ச்சிகளுக்கான வடிகாலாகக் கடந்த 50 ஆண்டு காலம் நம் மனத்தோடு ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசைத்துறையில் எத்தனையோ மேதைகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. ஒப்பில்லாத குரல்வளம் படைத்த கலைஞர்களை, கர்னாடக இசையின் நுட்பங்களை அறிந்த பாடகர்களை திரைப்படத் துறைக் கண்டிருக்கிறது. அவர்கள் எல்லாம் இசைத்துறையில் கரை கண்டவர்கள். ஆனால் பாடலைக் கேட்கும்போதே ரசிகனை துயரக் கடலிலிருந்து கரை சேர்ப்பதாக அமைந்ததுதான் எஸ்.பி.பியின் குரல். அதனால்தான் ரசிகர்கள் தங்களின் குரலே போனதுபோல் தவிக்கின்றனர்.
ஸ்ரீபதி பண்டிதரத்யலு பாலசுப்பிரமணியம், பாடகர், இசையமைப்பாளர், நடிகர், பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையோடு விளங்கியவர். 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.பி. இசையமைத்து, நடித்த திரைப்படம் ‘சிகரம்’. இந்தப் படத்தில் வரும் பாடல், ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு; தகரம் இப்போ தங்கம் ஆச்சு; காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு..’. இந்தப் பாடலை கே.ஜே.யேசுதாஸ்தான் பாட வேண்டும் என்று பிடிவாதமாகப் பாடவைத்தார். டிராக்கில் எஸ்.பி.பி. பாடியதைக் கேட்ட யேசுதாஸ், “இதுவே நன்றாகத்தானே இருக்கிறது பாலு…” என்று கூற, அதற்கு எஸ்.பி.பி., “நீங்கள் பாடும் நினைவோடுதான் இதை கம்போஸ் செய்தேன் அண்ணா..” என்று கூறி அன்புக் கட்டளைப் பிறப்பிக்க, அதை ஏற்று அந்தப் பாடலைப் பாடினார் கே.ஜே.யேசுதாஸ்.
இரண்டு கண்கள்
எஸ்.பி.பி., தம் வாழ்நாள் முழுவதும் ரசிகர்களையும் நகலிசைக் கலைஞர்களையும் இரண்டு கண்களாய் பாவித்தவர். நெல்லூரில் இருந்தபோதே நண்பர்களுடன் சேர்ந்து அவர் இசைக்குழுவை நடத்தியிருக்கிறார். கண்டசாலா, பி.பி. நிவாஸ், முகமது ரஃபி, கிஷோர் குமார் ஆகிய அந்நாளைய பாடகர்கள் பாடிய பாடல்களை இசைக்குழுக்களில் பெரிதும் விரும்பிப் பாடும் கலைஞனாகத் தன்னையும் தன்னுடைய இசையையும் வளர்த்துக் கொண்டார். பின்னாளில் சென்னையில் இளையராஜாவோடு இணைந்து பாவலர் இசைக்குழுவின் வழியாகவும் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கைமுறை, போராட்டங்கள் அனைத்தையும் அறிந்திருந்தார். அவர்களின் மீதான அன்பையும் ரசிகர்கள் மீதான அன்பையும் எந்த மேடையாக இருந்தாலும் வெளிக்காட்ட மறந்ததே இல்லை. “நான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகப் பாடிய பாடல்களை உங்களின் மனங்களில் போற்றிப் பாதுகாத்துவரும் ரசிகர்கள், அதை அப்படியே வாசிக்கும் இசைக்கலைஞர்கள் ஆகிய உங்களால்தான் எங்களின் கலை உயிர்ப்பாக இருக்கிறது. ரசிகர்களும் நகலிசைக் கலைஞர்களும் என் இரு கண்கள்..” என நெகிழ்ச்சியோடுப் பாராட்டுவதற்குத் தயங்கவே மாட்டார் எஸ்.பி.பி.
வடக்கிலும் செழித்த கலை
தென்னிந்தியாவிலிருந்து கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் போன்ற கலைஞர்கள் பாலிவுட்டுக்குச் சென்றிருந்தாலும் இந்தி திரைப்படங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய குரலாக எஸ்.பி.பியின் குரல் திகழ்ந்திருக்கிறது. கே.பாலசந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஏக் துஜே கேலியே’ படத்தில் லட்சுமிகாந்த் – பியாரிலால் இசையில் எஸ்.பி.பி. இந்தித் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் வடநாட்டு இளைஞர்களின் காதல் கீதங்களாயின.
பிரபல இசையமைப்பாளர்கள் நௌஷாத் அலி, கல்யாண்ஜி - ஆனந்த்ஜி, ஆர்.டி. பர்மன் உள்ளிட்ட பலரின் இசையில் இந்தித் திரைப்படங்களில் பாடியிருக்கும் எஸ்.பி.பி., வடக்கிலும் தன்னுடைய குரலுக்கு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தார். சல்மான் கான் வரை பாலிவுட்டின் முன்னணித் திரை நட்சத்திரங்கள் பலருக்கும் பின்னணி பாடி அசத்தியிருக்கிறார். இயல்பாகவே பாலுவுக்கு, முகமது ரஃபி குரலின் மீதும் அவர் பாடும் பாணியின் மீதும் இருந்த அபரிமிதமான மதிப்பும் ஈர்ப்புமே இதற்குப் பெரிதும் காரணம். முகமது ரஃபியை தன்னுடைய மானசீக குருக்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டவர் எஸ்.பி.பி. அவரது குரலில் இழையோடும் முகமது ரஃபியின் நெருக்கத்தை வடக்கத்திய ரசிகர்கள் ஆராதிக்கத் தொடங்கியதில் ஆச்சர்யம் இல்லைதானே!
உள்நோக்கிய பயணம்
இசை மேதை கே.வி.மகாதேவன் ‘சங்கராபரணம்’படத்தின் பாடலைப் பாடுவதற்கு எஸ்.பி.பியை அழைத்தபோது, கர்னாடக இசைப் பயிற்சியில் தனக்கிருக்கும் போதாமையைக் கூறி, முதலில் தவிர்த்திருக்கிறார். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத்தும் கே.வி.மகாதேவனும் அவரை ஊக்கப்படுத்திப் பாடவைத்திருக்கின்றனர். அதில் இடம்பெற்ற ‘ஓம்கார நாதானு’ பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றார் எஸ்.பி.பி. கன்னட திரைப்படமான ‘கானயோகி பஞ்சாக்ஷரி கவாயி’ (Ganayogi Panchakshari Gavayi) ஒரு இந்துஸ்தானி கலைஞரைப் பற்றிய படம். இந்தப் படத்தில் இந்துஸ்தானி இசையை அடிப்படையாகக் கொண்ட பாடலைப் பாடவும் முதலில் தயங்கினார். படத்தின் இசையமைப்பாளர் அம்சலேகா தொடர்ந்து வற்புறுத்திப் பாட வைத்தார். இந்தப் படத்தின் பாடலைப் பாடியதற்காக தேசிய விருதைப் பெற்றார்.
முறையான இசைப் பயிற்சி இல்லாவிட்டாலும் இசையமைப்பாளர்கள் கற்றுக் கொடுக்கும்போது அதை மிகச்சரியான விதத்தில் உள்வாங்கிக்கொண்டு, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைத் தனதாக்கிக்கொண்டு நேர்த்தியோடு பாடும் உத்தியைக் கையாண்டு வெற்றி கண்டார். அதனால்தான் கதை மாந்தர்களின் உணர்ச்சிகளைத் தன் குரலில் வெளிப்படுத்த அவரால் முடிந்தது. இதனால், ஏகாந்தமான நேரத்தில் பாடலைக் கேட்டு அசைபோடும் ரசிகன், தன்னையும் அறியாமல் நிகழ்த்தும் உள்நோக்கிய பயணத்துக்கான துணையாக எஸ்.பி.பியின் குரல் மாறிப்போனது.
நடிக்கும் குரல்
எடுத்துக்கொண்ட வேலைக்கு நூறு சதவீதம் உண்மையாக உழைப்பைச் செலுத்தக்கூடிய கலைஞர் எஸ்.பி.பி. பின்னணிப் பாடுவதாக இருந்தாலும் டப்பிங் பேசுவதாக இருந்தாலும் சில நேரங்களில் மாறுபட்ட முயற்சிகளில் இறங்கி, சில மாதங்கள் பாட முடியாமல் போனதும் உண்டு. ரஜினி, கமல் நடித்த தமிழ்ப் படங்களின் தெலுங்கு மொழி மாற்றுப் பதிப்பு உட்பட, பல பாலிவுட் கலைஞர்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் தெலுங்குப் பதிப்புக்காக அதில் இடம்பெற்ற ஏழு வேடங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அதில் பெண் கதாபாத்திரம் ஒன்றும் உண்டு!
பாடலின் வார்த்தைகளோடு, சங்கதி முடிச்சுகளை தாளம் தப்பாமல் போடுவது, சிரிப்பது, பேசுவது எஸ்.பி.பியின் தனிச்சிறப்பு. அவ்வளவு ஏன்? ‘மணி ஓசை கேட்டு எழுந்து…’ பாடலில் அவரது இருமல்கூட தாளத்துக்குள் இருக்கும்! அவரது குரலில் இருக்கும் இந்த நெருக்கம்தான், அவர் ‘வேதம் அனுவனுவன நாதம்’ (சாகர சங்கமம்) என தெலுங்கில் பாடினாலும், ‘ஏனுகேளு கொடுவே நினகே’ (கீதா) என கன்னடத்தில் பாடினாலும், ‘பால் நிலவிலே’ (பட்டர்பிளைஸ்) என மலையாளத்தில் பாடினாலும், ‘தில் தீவானா’ (மைனே பியார் கியா) என இந்தியில் பாடினாலும் தனக்காக மட்டுமே எஸ்.பி.பி. பாடுவதாக ஒவ்வொரு ரசிகரும் தன்னளவில் உருகிப்போகவும்; எஸ்.பி.பி. என்னும் மூன்றெழுத்தோடு ஒன்றிவிடும் மாயத்தையும் நிகழ்த்திவிடுகிறது.
தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT