Published : 18 Sep 2020 10:21 AM
Last Updated : 18 Sep 2020 10:21 AM

உருவக் கேலி நகைச்சுவை எடுபடாது! - வித்யூலேகா நேர்காணல்

நடிகர், எழுத்தாளர் மோகன் வி. ராமனின் மகள் என்பதைத் தாண்டி தனக்கெனத் தனித்த அடையாளங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் வித்யூலேகா. ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்குப் படங்களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம்வருகிறார். தற்போது, அமேசான் பிரைம் தயாரித்திருக்கும் ‘காமிக்ஸ்தான்’ என்ற ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சியின் வெற்றிகரமான தொகுப்பாளர். அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

உங்கள் குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர். நண்பர் என்பது குறித்துப் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்.

‘சென்னை, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் எங்களது பூர்வீக வீட்டு எண் 162. அதே சாலையில் எனது பாட்டனார் ஏ.வி.ராமனுக்குச் சொந்தமாக இருந்த 160-ம் எண் வீட்டில் எம்.ஜி.ஆர் குடியேறி வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆருக்கு அவர்தான் வழக்கறிஞர். எனது தாத்தா வி.பி.ராமனும் எம்.ஜி.ஆரும் தொழிலைத் தாண்டி நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். ஒரே அரசியல் இயக்கத்தில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த வீட்டை எம்.ஜி.ஆருக்கே எனது பாட்டனார் மனமுவந்து விற்றுவிட்டார். அந்த வீட்டிலேதான் புரட்சித் தலைவர், ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ அலுவலகம் தொடங்கி ‘நாடோடி மன்னன்’ படமெடுத்தார். அந்தப் படம் ஓஹோவென்று ஓடியது வரலாறு என்று அப்பா சொல்லுவார். இது எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய கொடுப்பினை.

இன்னொரு பக்கம், நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்தாருடனும் நீண்டகால நட்பு உண்டு. நான் ஐந்து வயதுச் சிறுமியாக இருந்தபோது, நடிகர் திலகத்தின் மடியில் உட்கார்ந்துக்கொண்டு அவரிடம் நீண்டநேரம் வாயாடிக் கொண்டிருந்திருக்கிறேன். இப்போதும்கூட நினைவில் இருக்கிறது.

இந்தத் திரையுலகப் பின்னணியும் அப்பா நடிகர் என்பதும் சினிமாவில் நுழைய உங்களுக்கு உதவியதா?

நிச்சயமாக இல்லை. எனக்காக அப்பா யாரிடமும் பேசியதேயில்லை.

ஆனால், கௌதம் மேனனின் இயக்கம், இளையராஜாவின் இசை, சந்தானத்துக்கு ஜோடி, பிரபல நட்சத்திரங்கள் என அறிமுகப் படமே அமர்க்களமாக அமைந்த பின்னணி என்ன?

எனது நாடக அனுபவம்தான், எனக்கான முதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது. 13 வயதில் தொடங்கி 12 ஆண்டு நாடக அனுபவம் உண்டு. குறிப்பாக ‘லேண்டிங் ஸ்டேஜ்’ நாடகக் குழுவில் 5 ஆண்டுகள், எனக்குக் கிடைத்த அனுபவம் முக்கியமானது. அந்தக் குழுவில் 13 வயது முதல் 18 வயதுடைய நடிகர்கள் மட்டுமே இடம்பெற முடியும். அதேபோல ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’, கார்த்திக் குமாரின் ‘ஏவம்’, வரலட்சுமி சரத்குமார், ஜெஃப்ரி வார்டன் எனப் பலருடைய குழுக்களின் நாடகங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்களில் எனது பங்கேற்பைப் பார்த்தே, கௌதம் மேனன் படத்துக்கு ‘ஆடிஷன் கால்’ வந்தது. அப்போது அப்பாவிடம் கேட்டேன். ‘பெரிய இயக்குநர் முயற்சி செய். வந்தால் மாங்கா, போனால் கல்லு’ என்று சொன்னார். ஆனால், ஆடிஷனின் முதல் சுற்றுத் தேர்விலேயே எனது நடிப்பு கௌதம் மேனனுக்குப் பிடித்துவிட்டது. உடனே தேர்வுசெய்துவிட்டார்.

கதாநாயகியின் தோழி, நகைச்சுவை, குணச்சித்திரம் என எதுவாயினும் திரையில் இருப்பை உணர்த்திவிடும் கலையை யாரிடமிருந்து கற்றீர்கள்?

அப்பாவிடமிருந்து. ‘ஏற்கும் கதாபாத்திரம் எவ்வளவு சிறியது, பெரியது என்று பார்க்காதே.. இயக்குநர் ‘ஆக் ஷன்’ என்று சொன்னதும் சக கதாபாத்திரங்களோடு லயித்து, அனுபவித்து நடித்துவிடு. அதுதான் உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்’ என்றார். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். நாடக அனுபவம் கூடுதல் பலம் கொடுத்தது.

நினைவில் கொள்ளத்தக்க நடிப்பு என்று வரும்போது உங்களுடைய குரலுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது, இல்லையா?

நிச்சயமாக. ஆச்சி மனோரமா, கோவை சரளா ஆகிய ஜாம்பவான்களுக்குப் பிறகு எனக்கு ஒரு முத்திரைக் குரல் அமைந்தது இறைவன் செயல். இதை இயக்குநர்கள், சக கலைஞர்கள், ரசிகர்கள் சுட்டிக்காட்டும்போது மகிழ்ச்சியில் துள்ளுவேன். ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்தபின் பலர் எனது கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுத்துப் பார்த்தனர். ஆனால், எனது உருவத்துக்கு டப்பிங் குரல் எதுவும் பொருந்தவில்லை. பிறகு என்னையே குரல் கொடுக்கவைத்தார் கௌதம் மேனன். தெலுங்கு அறிமுகத்தில் குரலும் என்னுடையதாக அமைந்ததால், இன்று அங்கே பிஸியாக இருக்கிறேன்.

தமிழைவிட அதிகத் தெலுங்குப் படங்களில் நடிக்கிறீர்களே..?

உண்மையைச் சொன்னால் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் எனக்குப் படங்கள் வரவில்லை. இங்கே கதாநாயகிக்கே திரைக்கதையில் குறைவான இடம் இருக்கும்போது, என்னைப் போன்ற பெண் நகைச்சுவை நடிகர்களுக்கு எப்படி ‘காமெடி பார்ட்’ இருக்கும்? இயக்குநர்களையும் குறை கூற முடியாது. இங்கே எந்த அளவுக்கு மசாலா படங்கள் வருகின்றனவோ, அதே அளவுக்குக் கதையம்சம் மிக்க படங்களும் வருகின்றன. நகைச்சுவை தேவையில்லை என்று நினைக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் நகைச்சுவைக்கு அதிக இடமுண்டு. தற்போது 20 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன். நகைச்சுவையோடு, முழு நீளக் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க நான் தயார். தமிழ் சினிமா இயக்குநர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

உடல் பருமனை வைத்து சினிமாவில் கிண்டல் செய்வதை நகைச்சுவை என்று இன்னமும் நம்புகிறார்களே?

தமிழ் சினிமா என்றல்ல, இந்தியாவின் பல மாநில சினிமாக்களிலும் இருக்கும் ‘எழுத்து வறட்சி’யால் ஏற்பட்ட அவலம். மனித உடலையும் தோற்றத்தையும் வைத்து கிண்டல் செய்யும் நகைச்சுவை, நீண்ட காலம் எடுபடாது. தற்போது நகைச்சுவையின் நவீன காலப் பரிமாணங்கள், தொலைக்காட்சி, ஓ.டி.டி. ஒரிஜினல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே உடலை வைத்து நகைச்சுவை செய்தால், பங்கேற்பாளரை ஆடியன்ஸ் நிராகரித்துவிடுவார்கள். வாழ்க்கையிலிருந்து நகைச்சுவையை எடுத்து கையாள்வதால், அங்கே இன்று ஏராளமான ஸ்டார்கள் தோன்றிவிட்டார்கள்.

நாடகம், சினிமா, இப்போது ‘காமிக்ஸ்தான்’ நிகழ்ச்சியின் மூலம் வெற்றிகரமான பெண் தொகுப்பாளர்; எப்படியிருந்தது அனுபவம்?

‘காமிக்ஸ்தான்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று அமேசான் பிரைம் அழைத்தபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. முதலில் தயங்கினேன். சுமார் 200 ‘லைவ் ஆடியன்ஸ்’ முன்பாகத்தான் நிகழ்ச்சி நடக்கும் என்றதும் குஷியாகிவிட்டேன். நாடகம் என்பது லைவ் ஆடியன்ஸ் முன்னால்தானே! 8 ஆண்டுகளாக சினிமா நடிகையாக நாடகங்களிலிருந்து விலகியிருந்த எனக்கு, லைவ் ஆடியன்ஸ் முன்னால் தூள் கிளப்ப முடிந்தது. ஏனென்றால் உடனுக்குடன் அங்கே ‘அப்ளாஸ்’ கிடைக்கும். கரவொலியைக் கேட்கும் இன்பமே தனிதானே..! அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மொரீசியஸ் என எங்கெங்கிருந்தோ தமிழ் உள்ளங்கள் போன் செய்து, ‘உங்கள் உச்சரிப்பு அழகு, உடை அழகு, மேக் அப் அழகு.. ரொம்ப எனர்ஜியா பண்ணியிருக்கீங்க’ என்று சொல்லும்போது வானத்தில் பறக்கிறேன்.

சஞ்சய் - வித்யூலேகா திருமண நிச்சயதார்த்தம்தான் இப்போது ஹாட் டாபிக். இது காதல் திருமணமா?

ஆமாம்! கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்தோம். தற்போது இருவீட்டார் ஆசீர்வாதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சஞ்சய் தொழில் துறையைச் சேர்ந்தவர். சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீம் தயாரிப்பு உட்பட ஹெல்த் புராடெக்ட்ஸ் துறை சார்ந்த தொழிலதிபர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x